Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீர்குலையும் சமூக ஒழுங்கு

சீர்குலையும் சமூக ஒழுங்கு

5 minutes read

அண்மைய நாட்களாக ஊடகங்களில் துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் பற்றிய செய்திகள் அதிகளவில் வெளியாகின்றன. கொள்ளைகள், கொள்ளை முயற்சிகள் பற்றியும் அதிகளவில் தகவல்கள் வெளிவருகின்றன.

சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு, சிறார்கள் கடத்தல்கள் பற்றிய செய்திகளும் அதிகரித்திருக்கின்றன.

பொதுப்படையாக பார்க்கப் போனால், இவையெல்லாவற்றுக்கும் பின்னால் இல்லாவிட்டாலும் கூட, குறிப்பிட்டளவு சம்பவங்களுக்குப் பின்னால், ஒரு மறைகரம் இருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

கடந்த பல நாட்களில் பலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். ஒரே நாளில் இரண்டு மூன்று சம்பவங்களும் கூட நடந்தன. கொல்லப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களும், அத்தகைய குற்றங்கள் தொடர்பான சாட்சிகளாக இருந்தவர்களுமே அதிகம்.

இவர்கள் ஏன் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால் மக்கள் மத்தியில் இந்த செய்திகள் பரபரப்பாக பேசப்படுகின்றன.

தெற்கில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை யாரும், பயங்கரவாத சம்பவங்களாக பார்க்கவில்லை.

அதேவேளை, அண்மைய நாட்களில் பல சிறுமிகள் கொல்லப்பட்ட, அல்லது காணாமல்போன சம்பவங்களும், அதிகரித்திருக்கின்றன.

இந்தப் பின்னணியில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். சிறுவர்களை கடத்தும் கும்பல்கள் நடமாடுகின்றனர் என்ற அநாமதேய தகவல்களும் பரவுகின்றன.

அவ்வாறான கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும் சில சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

அதுபோன்றே, நாடு முழுவதும் வழிப்பறி கொள்ளைகளும், வீடு புகுந்து கொள்ளையடிப்பதும் இப்போது சாதாரணமான நிகழ்வுகளாகி விட்டன.

இவையெல்லாம், ஒரு புறத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதை உணர்த்துகிறது. ஆனால் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறதா?

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவரை விட்டால் வேறெவராலும் முடியாது என்று மணிமுடி சூட்டி ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டவரல்லவா ஜனாதிபதி?

அவரது ஆட்சியில், தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு சீர்குலைந்து விட்டதென்று அரசாங்கத்தினால் கூறமுடியுமா? நிச்சயமான அதற்குச் சாத்தியமேயில்லை.

இப்போதைய வன்முறைச் சம்பவங்கள் அல்லது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள நிலைமைக்கு என்ன காரணம் என்ற கேள்வி உள்ளது.

அதுவும் திடீரென கொலைகள் அதிகரித்திருப்பதும், சமூக வன்முறைகள் அதிகரித்திருப்பதும், சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படக் கூடியதன்று.

ஏனென்றால் சாதாரண மனிதனுக்கான சமூகப் பாதுகாப்பு இப்போது கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

அண்மைய நாட்களாக, பாடசாலைகளின் வாயில்களிலும், தனியார் கல்வி நிறுவனங்களின் வாயில்களிலும், அதிகளவில் பெற்றோர் காத்திருக்கின்றனர்.

தங்களின் பிள்ளைகளின் பாதுகாப்பில் அவர்கள் கூடிய அக்கறை கொண்டிருக்கிறார்கள். அதனால் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலை விடும் நேரத்தில் எல்லா வேலைகளையும் போட்டு விட்டு, அங்கு ஓடுகிறார்கள்.

இது சமூகப் பாதுகாப்பு சிறுவர்களுக்கு குறைந்திருப்பதை வெளிக்காட்டுகிறது. தனித்திருப்பவர்கள், தனியாக நடந்து செல்பவர்களிடம், கொள்ளைகள் அதிகரித்து விட்டன.

நாட்டில் பசியும், பஞ்சமும் அதிகரிக்க அதிகரிக்க கொள்ளைகளும், அதிகரிக்கும். கையில் பணம் இல்லாவிட்டாலும் பசியெடுக்கும். அதனை சமாளிக்க, உழைப்புக்கான வழி இல்லாத போது, கொள்ளையடிப்பது தவிர்க்க முடியாத ஒரு நிலையாக மாறிவிடுகிறது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி சமூக ஒழுக்கத்தைப் பாதிக்கத் தொடங்கி விட்டது என்பதே இதன் அர்த்தம்.

சமூகத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற போது, சட்டமும் ஒழுங்கும், சீராக இருக்கும். சமூக ஒழுங்கு சீர்குலையும் போது, வன்முறைகள் தாராளமாக அரங்கேறும்.

பொருளாதார நெருக்கடி இப்போது மக்களை வெறொரு முனையில் தாக்கத் தொடங்கியிருக்கிறது. இது ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழித்து விடும் ஆபத்து உள்ளது.

ஏனென்றால் இன்று பஞ்சத்துக்காக சிறிய சிறிய திருட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு நாளை அதுவே தொழிலாகி விடும்.

பொருளாதார நெருக்கடி தீரும் போது, உழைப்பவர்களை விட, கொள்ளையடிப்பவர்களும், திருடர்களுமே அதிகமாக இருப்பார்கள். அவர்களுக்கு அது வசதியான தொழிலாக இருக்கும்.

அரசியல் நெருக்கடி நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை சீர்கெடுத்தது. பொருளாதார நெருக்கடி நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியான நிகழும் இப்போதைய சமூக சீரழிவு, ஒட்டுமொத்த மக்களையுமே, பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது.

பொருளாதார நெருக்கடி மோசமடைகின்ற போது, இருக்கின்றவனிடம் இல்லாதவன் அடித்துப் பறிக்கின்ற நிலை மேலோங்குவது இயல்பு தான்.

ஆனால், அவ்வாறானதொரு நிலை இலங்கைக்கு வந்து விட்டதா அல்லது அவ்வாறானதொரு தோற்றப்பாடு உருவாக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது.

ஏனென்றால், நாடு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை சந்தித்திருக்கிறது. ராஜபக்ஷவினருக்கு எதிரான போராட்டம், இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷ பதவியை விட்டுப்போக மறுக்கிறார். போனவர்கள் கூட திரும்பி வருவதற்கான வழிகள் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில், தற்போதைய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திருப்ப வேண்டும்.

காலிமுகத்திடலில் ‘கோட்டா கோ கம’வில் இப்போது ஆர்ப்பாட்டத்துக்கு வரும் ஆட்கள் குறைந்து விட்டார்கள்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்பதை பெரும்பாலானோர் தற்போது மறந்து விட்டார்கள் என ஆதங்கப்பட்டார்.

அது முற்றிலும் உண்மை. கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதை விட இப்போது, வேறுபல பிரச்சினைகள் மக்களுக்கு முளைத்து விட்டது.

முன்னரை விட இப்போது எரிவாயு கிடைப்பது அரிதாகி விட்டது. எரிபொருள் கிடைத்தாலும் விலை உயர்ந்து விட்டது.

பொருட்களின் விலைகள் அதிகரித்து விட்டன. அதனைச் சமாளிப்பதற்கு வழியைத் தேடுவதா, போராட்டக் களத்தில் போய் அமர்ந்திருப்பதா என்று பலரும் சிந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் சேர்ந்து தான், ஆட்சியாளர்களுக்கு எதிரான நெருப்பாக தகித்தது.

ஆனால், அந்த நெருப்பு இப்போது தணலாக மாறி விட்டது. அதனை விட இப்போது சூடான பிரச்சினைகள் மக்கள் முன் கொண்டு செல்லப்படுகின்றன.

2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னரும் அவசரகாலச்சட்டம் உள்ளிட்ட கெடுபிடிகளை அரசாங்கம் தளர்த்தவில்லை.

அவ்வாறான நிலையில் புறஅழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் தான், திடீரென எங்கிருந்தோ மர்ம மனிதர்கள் உலாவத் தொடங்கினார்கள்.

கிறிஸ் பூதம் என்ற பெயரில் அவர்கள், வீடுகளுக்குள் எட்டிப் பார்த்தனர், சிலரைக் கட்டிப் பிடிக்கவும் முயன்றனர்.

அவர்களைத் துரத்திச் சென்றவர்கள் கடைசியில் எங்கோ ஒரு படைமுகாமின் எல்லையுடன் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த கிறிஸ் பூதங்களுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இருந்தது.

மக்களை பீதியில் இருக்கச் செய்தல், அவசரகாலச்சட்டம் போன்ற கெடுபிடிச் சட்டங்களின் மீது ஆட்சியை நடத்துதல் என்பன அதன் நோக்கங்களாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருந்தன.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் இப்போது சிறுவர்களை கடத்த முயலும் சம்பவங்களுக்குப் பின்னாலும், அரசியல் எதிர்ப்பை தணிக்கும் முயற்சிகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் பலர் உள்ளனர்.

ஒரு கோட்டை சிறியதாக்குவதற்கு, அதன் அருகே மற்றொரு பெரிய கோட்டை வரையும் உத்தி தான் இது.

மக்களின் மத்தியில் உள்ள பிரச்சினைகள் பல. அவற்றை சிறியதாக்க வேண்டுமானால், அவர்களின் உணர்ச்சியை இன்னும் அதிகமாகத் தொடக்கூடிய விடயங்களை முன்னே கொண்டு வர வேண்டும்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் பல அவ்வாறானதாகவும் இருக்கலாம். அதேவேளை, பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியான சமூக ஒழுங்குகேடாகவும் இருக்கலாம். எதுவாயினும் அதற்குப் பொறுப்புக்கூறும் கடப்பாடு அரசாங்கத்துக்குத் தான் இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More