3 மாதங்களின் பின் நிலையான பாதுகாப்பு தரக்கூடிய நாடொன்றுக்கு கோட்டாபய செல்வார் | தாய்லாந்து பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் நிலையான பாதுகாப்பு தரக்கூடிய நாடொன்றுக்குச் செல்வார் என்று தான் நம்புவதாக தாய்லாந்து பிரதமர் சேன் – ஓ – ஷா தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் தங்கியிருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 90 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த காலப்பகுதிக்குள் அவருக்கு நிரந்த புகலிடமளிக்கக் கூடிய பாதுகாப்பான நாடொன்றுக்குச் செல்வார் என்றும் பிரதமர் சேன் – ஓ – ஷா தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட வீசா நீடிப்பு காலம் 11 ஆம் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில் அவருக்கு மனிதாபிமான தேவைகளின் அடிப்படையில் தாய்லாந்தில் தங்கியிருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமரால் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள தாய்லாந்து பிரதமர் , ‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கான நிரந்தர புகலிடத்தை வழங்கக் கூடிய நாடொன்றைத் தேடும் அதே நேரத்தில் , தாய்லாந்தில் எவ்வித அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடப் போவதில்லை என்றும் உறுதியளித்துள்ளார்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இராஜதந்திர விமான அனுமதி பத்திரம் காணப்படுவதன் அடிப்படையில் , தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருக்க முடியும் என்று அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் எதிர்ப்பு போராட்டங்களின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜூலை 14 ஆம் மாலைத்தீவிலிருந்து சிங்கப்பூர் சென்றார்.

அங்கு அவர் தங்கியிருப்பதற்கான காலம் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை 27 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கமைய நேற்று வியாழக்கிழமையுடன் நீடிக்கப்பட்ட அனுமதி காலம் நிறைவடைந்தது. இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி தற்போது தாய்லாந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்