March 31, 2023 6:20 am

“13 ஐ முழுதாக அமுல்படுத்த சர்வதேச அழுத்தம் மிக அவசியம்”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைக்கான கனேடியத் தூதுவர் மற்றும் இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் ஆகியோரிடம் நேரில் எடுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் வீட்டுக்கு நேற்று மாலை 4.30 மணிக்குச் சென்ற இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ், சம்பந்தனுடன் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார். அதையடுத்து மாலை 5.30 மணிக்குச் சென்ற இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபன்ஸும் சம்பந்தனுடன் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

இரு நாட்டுத் தூதுவர்களுடான சந்திப்பு தொடர்பில் இரா. சம்பந்தன் தெரிவித்ததாவது:-

“இலங்கைக்கான புதிய கனேடியத் தூதுவரையும், புதிய ஆஸ்திரேலியத் தூதுவரையும் சந்தித்தோம். இந்தச் சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது.

இன்றைய அரசியல் நிலைமை, அரசியல் தீர்வு சம்பந்தமான நிலைமை, பொருளாதார நெருக்கடி நிலைமை, நாட்டைவிட்டுப் பெருமளவிலான மக்கள் வெளியேறும் நிலைமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசினோம்.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கை பௌத்த – சிங்கள மயமாக்கும் நோக்குடன் அரசு செயற்படுகின்றமை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல் அரசு இழுத்தடிக்கின்றமை தொடர்பிலும் பேசினோம்.

அரசு கடும் போக்குடன் செயற்படுவதால் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தமிழர் தாயக ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவும், அரசியல் தீர்வை வென்றெடுக்கவும் எம்மாலான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம். இந்தக் கருமம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இதற்கு சர்வதேச நாடுகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கனேடிய, ஆஸ்திரேலியத் தூதுவர்களிடம் எடுத்துரைத்தோம்.

அதேவேளை, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசுக்குச் சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்” – என்றார்.

– அரியகுமார் யசீகரன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்