September 22, 2023 2:43 am

அதிகாரப் பகிர்வுப் பேச்சுகளில் முஸ்லிம் தரப்பும் பங்கேற்கும்! – ரணில் இணக்கம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுக்கள் சகலதிலும் முஸ்லிம் தரப்புக்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்ற அமைச்சர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுக்களில் பங்கேற்ற அமைச்சர் நஸீர் அஹமட், எந்தச் சமூகங்களுக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக அமைவது அவசியம் என்பதை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பில் அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற எனக்கு முஸ்லிம்கள் சார்பில் கருத்துக்களை முன்வைக்க முடிந்தது.

வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிச் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் முஸ்லிம்களும் அதிகளவை எதிர்கொள்கின்றனர். போரில் பாதிக்கப்பட்ட சமூகங்களில் முஸ்லிம்களும் பிரதானமானவர்கள். எனவே, இழக்கப்பட்ட காணிகள், இருப்புக்களுக்கான உத்தரவாதம், தேசிய இனத்துக்கான தனித்துவ அடையாளங்கள் என்பவை முஸ்லிம்களுக்கும் உத்தரவாதப்படுத்தப்படல் அவசியம். இது, இனப்பிரச்சினைக்கான தீர்வில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சகோதர சமூகங்களின் அபிலாஷைகளில் குறுக்கிடுவதாக இது அமையாது. இது பற்றிய புரிதல்களை தமிழ்த் தரப்பினருக்கு எடுத்துக் கூறுவதற்கு எதிர்காலப் பேச்சுக்களில் முஸ்லிம் தரப்புக்களும் அழைக்கப்படுவது அவசியம். மாகாண சபை திருத்தச் சட்டங்களில் முஸ்லிம்களுக்குச் சந்தேகம் நிலவுகின்றது.

பிரதிநிதித்துவங்களைக் குறைக்கும் வகையில், இந்தத் திருத்தங்கள் இருத்தலாகாது. அவ்வாறிருப்பது, முஸ்லிம்களின் பெரும்பான்மைப் பலத்தை இழக்கச் செய்யும்.” – என்றும் மேற்படி சந்திப்பில் அமைச்சர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்