முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.
ஹர்த்தால் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இன்று இடம்பெற்றது.
இதன்போதே எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்குத் தமிழ்க் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் ரெலோ அமைப்பின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் தியாகாரஜா நிரோஷ் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.