December 3, 2023 1:12 am

முல்லைத்தீவில் இளம் குடும்பப் பெண் கொலை! – கணவன் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அவரின் கணவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் அண்மைய சில நாள்களாக வாடகைக்கு வீடு ஒன்றைப் பெற்றுத் தங்கி வந்த இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்துக்கு அருகே குழி தோண்டிப் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு, 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த த.கீதா (வயது 23), முள்ளியவளை குமாரபுரத்தைச் சேர்ந்த இளைஞர் (வயது 23) ஒருவரைத் திருமணம் முடித்து நீராவிப்பிட்டி கிழக்குப் பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரங்களாக வசித்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இளம் குடும்பஸ்தரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தப் பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.சங்கீத் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நேற்று சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அதன்போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

அந்த இளம் குடும்பப் பெண் தொலைபேசியில் தனது தாயாருடன் நாளாந்தம் உரையாடுவார் எனக் கூறப்பட்டது. கடந்த 21 ஆம் திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டுக்குத் தாய் சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்பட்டது என்று தாயார் தெரிவித்திருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளம் குடும்பப் பெண்ணின் தாயார் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்