மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சானது, நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமி மற்றும் குழந்தையின் நலன் மற்றும் கல்வி உரிமையை உறுதி செய்வதற்காக, அமைச்சின் ‘அர்த்த’ திட்டத்தின் கீழ் மாதாந்த வாழ்வாதார உதவித்தொகையை வழங்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
15 வயது சிறுமி தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளார். அதற்கமைய, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்ஜின் அறிவுறுத்தலுக்கமைய, அவர் பரீட்சைக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினூடாக உள சமூக ஆலோசனை ஆதரவை வழங்க அமைச்சு மேலதிக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இவ்வுதவித்தொகையானது அப்பிள்ளை கட்டாயப் பாடசாலைப் பருவத்தை நிறைவு செய்யும் வரை அல்லது தனது விருப்பத்திற்கேற்ப உயர் கல்வி அல்லது தொழிற்கல்வியைத் தொடரும் வரை வழங்கப்படும். மேலதிகமாக, குழந்தையின் போசாக்கு மற்றும் சிறுமியின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் ‘அர்த்த’ உதவித்தொகையை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘அர்த்த’ திட்டமானது, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் என்பவற்றால் கூட்டாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இத்திட்டமானது நிறுவனப் பராமரிப்பு அல்லது மாற்றுப் பாதுகாப்புப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் வீதிகளில் வாழும் சிறுவர்களுக்கு உதவிகளை வழங்குகின்றது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 9,000 சிறுவர்கள் நன்மைகளைப் பெறுகின்றனர்.
2027 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக 2027 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தினூடாக 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.