செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு | ஆசிரியர் சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு | ஆசிரியர் சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

2 minutes read

குழந்தைகளிடையே போசணைக் குறைபாடு முக்கியப் பிரச்சினையாகக் காணப்படும் இலங்கையில், பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய நிதியை விட குறைந்த நிதியையே எதிர்வரும் ஆண்டுக்காக ஒதுக்கியுள்ளதாக, நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கத் தலைவர்களில் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 2026 நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வரலாற்றில் முதன்முறையாக கல்வித்துறையின் மூலதனச் செலவீனங்களுக்காகப் பாரிய முதலீடு செய்யப்பட்டு, 2027ஆம் ஆண்டுக்காக 749 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தப் பாரிய முதலீடு மொத்த அரசாங்கச் செலவீனத்தில் 12 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.

எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை போசாக்குத் திட்டத்திற்கு 30 பில்லியன் ரூபாயும், விளையாட்டு பாடசாலைகளின் மாணவர்களின் போசாக்கிற்காக 0.16 பில்லியன் ரூபாயும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அதிகரிக்குமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த போதிலும், அரசாங்கம் அந்த நிதியைக் குறைக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டுள்ளதாக, கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“தற்போது 1. 6 மில்லியன் மாணவர்களுக்கு மாத்திரமே பாடசாலை மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால், நாட்டில் சுமார் 4  மில்லியன் மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படவுமில்லை. அதேபோன்று, மதிய உணவுக்காக 100 ரூபாயே வழங்கப்படுகிறது.

இந்த 100 ரூபாயைக் கொண்டு சிரமத்துடன் தான்  மாணவர்களுக்கு இதை வழங்குகிறார்கள். எனவே, இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றே கூறினோம். ஆனால், எமக்குத் தெரியவரும் மிகவும் கவலைக்குரிய விடயம்தான், கடந்த ஆண்டு மதிய உணவிற்காக 33.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு 30 பில்லியன் ரூபாயே ஒதுக்கப்பட்டுள்ளது.”

இலங்கையில் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள போசணைக் குறைப்பாடு நிலையானது முக்கியப் பிரச்சினையாக சுகாதாரத் துறையினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், சிறுவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எதிர்வரும் ஆண்டுக்காக குறைத்திருப்பது பாரதூரமான பிரச்சினையாகும் என ஆசிரியர் சங்கத் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.

“அப்படியானால் இந்த பிள்ளைகள், இலங்கையில் போசணைக் குறைபாடு ஒரு பிரதான பிரச்சினையாக மாறியுள்ளது என்பது எமக்கு தெரியும். எனவே போசணைக் குறைபாடு ஒரு பிரதான பிரச்சினை என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கும் நிலையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மதிய உணவு போசணைத் திட்டத்திற்காக  ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் குறைத்திருப்பது பாரதூரமான பிரச்சினையாகும். அதிகரிக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதனை குறைப்பது பிரச்சினையாகும்.”

உலக வங்கியினால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட “பொருளாதார மீட்சியிலிருந்து கட்டமைப்பு மாற்றத்தை நோக்கி (From Recovery to Transformation) இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான அண்மைய அறிக்கையில், இலங்கையில் சிறுவர்கள் போசணைக் குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றிய நிலைக்கு உள்ளாகும் வீதம் தொடர்ந்து உயர்ந்த மட்டத்தில் காணப்படுவது, நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் நீண்டகாலத் தாக்கத்தைப் பிரதிபலிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைக்கு அமைய, 2023ஆம் ஆண்டில் 20.7 சதவீதமாக உயர்ந்திருந்த வறுமை நிலை , 2025ஆம் ஆண்டளவில் 16.9 சதவீதமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், இது 2019ஆம் ஆண்டில் பதிவான 11.5 சதவீதத்தை விட உயர்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.

குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, 2026ஆம் ஆண்டளவில் இலங்கையர்களில் 40 சதவீதமானோர் வறுமை அல்லது வறுமைக் கோட்டுக்கு அண்மித்த நிலையில் வாழ்கின்ற நிலையில், மக்களின் உண்மையான வருமானம் மேலும் வீழ்ச்சியடைந்தால், பெருமளவிலான மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய எச்சரிக்கை நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.