செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 29 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 29 | பத்மநாபன் மகாலிங்கம்

20 minutes read

ஶ்ரீ லங்காவில் உள்ள நீதிமன்ற முறைகள் (Structure of the Courts System in Sri Lanka) பின்வருமாறு:

  • சுப்ரீம் நீதிமன்றம் (Supreme Court)
  • அப்பீல்கள் செய்வதற்கான நீதிமன்றம் (Courts of appeal)
  • உயர் நீதிமன்றம் (High Court)
  • மாவட்ட நீதி மன்றம் (District Court)
  • மாஜிஸ்ரேட் நீதிமன்றம் (Magistrate’s Court)
  • பிறைமறி நீதிமன்றம் (Primary Court)

இரண்டு வகையான வழக்குகள் ஶ்ரீ லங்காவின் நீதிமன்ற முறைமைகளின் கட்டமைப்பில் இருந்தன.

1. கிரிமினல் வழக்குகள் (Criminal Cases)

2. சிவில் வழக்குகள் (Civil Cases)

கிரிமினல் சட்டத்திற்கான (Criminal Law) வழக்குகள் மாஜிஸ்ரேட் நீதிமன்றங்களிலும் உயர்நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டன.

சிவில் சட்டத்திற்கான வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டன. இவை நான் அங்கை இங்கை தேடி எடுத்து எழுதியது. யாரும் சட்டம் பற்றி தெரிந்தவர்கள், இதில் பிழை கண்டால் திருத்தி உதவுக.

வண்ணார்பண்ணையால் திரும்பி வந்த மகாலிங்கன், பெரிய பரந்தனுக்கு வந்து தனது நாட்களை வீணாக கழிக்கவில்லை. அவன் வயல்களுக்கு நடுவே பிறந்து, வரம்புகளில் தவழ்ந்து, வயல்வெளிகளில் ஓடி விளையாடியவன். வயல் வேலைகள் அவனது இரத்தத்துடன் கலந்தவை.

அதனால் சேற்றில் இறங்கி வரம்புகளை கட்டுவதற்கும், நெல்லை பலகை அடித்து விதைத்த போது சேற்று மண்ணை மிதித்து, உழக்கி எருமை மாடுகளை கொண்டு பலகை அடித்து, முளை நெல்லை விதைத்தலிலும் கணபதியாருக்கு உதவியாக இருந்தான்.

.

லாந்தர் விளக்கில் இரவு நேரங்களில் புத்தகங்களை வாசிப்பதை மட்டும்   அவன் நிறுத்தவில்லை. இடைக்கிடை பத்திரிகைகளுக்கு செய்திகளை எழுதி அனுப்பிக் கொண்டிருந்தான்.

ஆறுமுகத்தார் மிகவும் பலவீனமாகவே இருந்தார். அதனால் தகப்பனிடம் “ஐயா, அப்பு மிகவும் பலவீனமாக இருக்கிறார்.  நல்லையா குஞ்சியும் சின்ன ஆள். அதனால் நான் தியாகர்வயலில் அப்புவுடனும் ஆச்சியுடனும் இரவில் தங்கிறன்.” என்று சொன்னான்.

மீனாட்சியும் “அவன் சொல்லுறபடி செய்யிறது தான் சரி.” என்றாள். மகாலிங்கன் பகலில் கணபதியாருடன் வயல் வேலைகளை செய்து விட்டு இரவு தியாகர்வயலுக்கு சென்று விடுவான்.  நல்லையனும் பகலில் பேரம்பலத்துடன் சேர்ந்து வயல் வேலைகளை செய்து விட்டு இரவில் தாய், தகப்பனுடன் சென்று தாங்குவான். ஆறுமுகத்தார் காலையில் வழமை போல எழும்பி காலைக்கு போய் மாடுகளை திறந்து விடவும், பால்கறக்கவும், விறகு வெட்டவும் தண்ணீர் அள்ளவும் பார்ப்பார்.

மகாலிங்கன் “அப்பு, நீங்கள் ஒரு வேலையும் செய்யாதேங்கோ. நான் இருக்கிறன் தானே. நான் எல்லாத்தையும் செய்வன். நீங்கள் ஆறி இருந்தால் காணும்” என்பான்.

விசாலாட்சி “தம்பி, உவருக்கு நல்லாய் சொல்லு. நான் சொன்னா கேக்கிறாரில்லை. எங்கையெண்டாலும் விழுந்து கையை காலை முறித்தால் பேந்தென்ன செய்யிறது” எண்டு சொல்லுவா.

அதற்கு ஆறுமுகத்தார் “தம்பி, அடித்த கையும் காலும் சும்மா இருக்க விடுகுதில்லை.” என்பார்.

மகாலிங்கம் அடிக்கடி கந்தையர் வீட்டிற்கும், வல்லிபுரத்தார் வீட்டிற்கும், முத்தர்கணபதி வீட்டிற்கும் சென்று வருவான். ஒரு நாள் மகாலிங்கன் மாமனான கந்தையர் வீட்டிற்கு சென்றான்.  முற்றத்தில் ஏதோ வேலையை செய்துகொண்டிருந்த மாமி “வா மகாலிங்கம். மாமா சாதகம் எழுதிக்கொண்டிருக்கிறார். இண்டைக்கு எழுதி முடித்து கொடுக்கவேணும் எண்டவர். நீ போய் அவரைப் பார்.” என்றா.

மகாலிங்கன் உள்ளே போக, மாமியும் பின்னால் வந்தா. சாதகத்தை எழுதி முடித்து எழுதிய பேனையின் முனையை குத்தி உடைத்தவாறு கந்தையர் “வா, மகாலிங்கம், வந்து இரு” என்றார். மாமி தேனீர் போட உள்ளே போக ஆயத்தமானா.

“இப்ப தேனீர் வேண்டாம், மாமி” என்று மகாலிங்கன் தடுத்தான். அப்போது கந்தையர் சிரித்துக் கொண்டே தனது மனைவியைப் பார்த்து “மகாலிங்கன் இப்ப பெரிய ஆளாகியிட்டான். இவன் சின்னாளாய் இருக்கேக்கை என்ன செய்தவன் எண்டு உனக்கு தெரியுமோ” என்று சொல்லி சிரித்தார்.

“பிள்ளை அப்பிடி என்ன செய்தவன்” என்று மாமி கேட்டா. வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு “இவனுக்கு அப்ப எட்டு வயசிருக்கும். ஒரு நாள் தன்னை சுட்டதீவு கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போ எண்டு கேட்டான். அக்கா அவன் அவ்வளவு தூரம் நடக்கமாட்டான் எண்டு மறிக்க மறிக்க நானும் கூட்டிக் கொண்டு போட்டன். போகேக்கை என்னோடை ஓடி ஓடி நடந்து தான் வந்தவன். அங்கை சொல்ல சொல்ல கேளாமல் பொடியளோடை ஓடி விளையாடி களைத்துப் போனான். பூசை முடிய நிறைய மோதகம், வடை, புக்கை சாப்பிட்டான். கோவில் பூசை முடிந்து திரும்பி போவம் என்று நான் சொல்ல அவன் வயித்துக்குத்து எண்டு கத்தி துடித்தான். இவனைத் தூக்கி தோளிலை வைத்துக் கொண்டு நடந்து வந்தன்.  அனுங்கியபடியே தோளில் இருந்தான். அக்கா மறுக்க மறுக்க கூட்டிக்கொண்டு வந்தனான். என்ன பேச்சு பேசப்போறாவோ எண்டு பயந்து கொண்டு தான் போனேன். தியாகர்வயலுக்கு கிட்ட வந்தவுடனை தோளிலையிருந்து குதித்து சிரித்துக் கொண்டே ஒரே ஓட்டமாய் ஓடியிட்டான். நான் திகைத்துப் போனேன்” என்று அடக்க முடியாமல் சிரித்தார்.

மகாலிங்கனுக்கும் சிரிப்பு வந்து விட்டது. “அது அப்ப சின்ன வயசில் நடந்தது, மாமி” என்று சொல்லி சிரித்தான். மாமிக்கும் மகாலிங்கனின் குறும்பை கேட்டதும் அடக்க முடியாத சிரிப்பு வந்தது.

பேரம்பலம் ஆறுமுகத்தாரை போல உயரம் பெருப்பமான ஆள். அவர் தலைப்பா கட்டிக்கொண்டு, வேட்டியை மடிச்சுக்கட்டி, இடது தோளில் பன்னிரண்டாம் நம்பர் துவக்கை வைத்து இடக்கையால் பிடிச்சுக்கொண்டு, எருமைகளை காட்டுக்குள் உள்ள நீர்நிலைக்கு கலைத்துக்கொண்டு போவார்.

சில எருமைகள் தனித்தனியாக சென்றன. அவை நன்கு பழகிய எருமைகள். சிலவற்றை சோடி சோடியாக பிணைத்திருப்பார். ஒன்று பழகியதாகவும் மற்ற எருமையை கட்டுப்படுத்தி திரும்ப பட்டிக்கு கொண்டு வரக்கூடியதாகவும் இருக்கும்.

அநேகமான எருமைகளின் கழுத்தில் ‘சிறாப்பை’ கட்டியிருப்பார். (மணி போல மரப்பலகையில் செவ்வகவடிவில் ‘சிறாப்பை’ செய்யப்பட்டிருக்கும். மணியை அடிக்கிற நாக்கு போல சிறாப்பையின் நடுவில் நன்றாக செதுக்கிய மரத்துண்டாலான நாக்கு தொங்கும்.) எருமைகள் நடக்க நடக்க சிறாப்பையிலிருந்து “கடக்”, “கடக்” என்று சத்தம் வரும். சத்தம் கேட்டதும் பார்த்தால் எருமைகளின் பின்னே துவக்குடன் நிமிர்ந்த நடையுடன் பேரம்பலம் செல்வது ஒரு மைல் தூரத்திலிருப்பவர்களுக்கும் தெரியும்.

பேரம்பலம் காட்டினுள் சென்ற சில மணி நேரத்துக்குள் வெடிச்சத்தம் கேட்கும். சத்தத்தை வைத்தே மகாலிங்கன் “முயலோ, கௌதாரிகளோ விழுந்து விட்டது” என்றும், சில நேரங்களில் “பண்டாரம்” என்றும் சொல்லி விடுவான். (‘பண்டாரம்’ என்றால் குறி தப்பிவிட்டது என்பது கருத்து). திரும்பி வரும் போது பேரம்பலத்தின் வலது கையில் இரண்டு முயல்களோ, நான்கு ஐந்து கௌதாரிகளோ அல்லது ஒரு உக்குளானோ இருக்கும். (உக்குளான்–> ஒரு வகை சிறிய மான் போன்று இருக்கும்–> அதனை ‘சருகுமான்’ என்றும் சொல்வார்கள்)

பின்னேரம் பட்டிக்கு எருமைகள் வராவிட்டால் பிணைத்த எருமைகள் பற்றைகளில் சிக்குப்பட்டிருக்கும் என்று தெரிந்து பேரம்பலம் தேடி செல்வார். சிறாப்பை சத்தத்தில் எருமைகளை கண்டு பிடித்து, மீட்டு சாய்த்து வருவார்.

பேரம்பலத்தாரின் மனைவி ஒரு பெரிய பானை நிறைய சோறும் ஒரு பெரிய சட்டி நிறைய இறைச்சி கறியோ, மரை வத்தல் கறியோ காய்ச்சி வைத்து விடுவா. மத்தியான சாப்பாட்டு நேரம் கிணத்தடி வளவால் அல்லது அதற்கு கிட்டவாய் ஆர் போனாலும் பேரம்பலம் கூப்பிட்டு சாப்பாடு கொடுத்து தான் அனுப்புவார். சாப்பிடாவிட்டால் அவருக்கு கோபம் வந்து விடும்.

தைப்பொங்கல், சித்திரை வருடம், தீபாவளிக்கு உறவினர்கள் வீட்டு பிள்ளைகள் எல்லாரும் பேரம்பலம் வீட்டுக்கு போய் சாப்பிட வேணும். யாராவது போகாவிட்டால் வீடு தேடி வந்து விடுவார். அதனால் எங்கு போகாவிட்டாலும் எல்லாரும் அவரிடம் சென்று விடுவார்கள். மகாலிங்கன் முதல் ஆளாய் போய் அவர் வீட்டில் சாப்பிட்டு விடுவான்.

மகாலிங்கன் தகப்பனாரான கணபதியாரிடமே துவக்கு சுட பழகினான். கணபதியார் ஒரு சிறந்த வேட்டைக்காரன். காட்டுக்குள் போகும் போது பற்றைகளின் மறைவில் போக வேண்டும் என்றும், கதைத்துக் கொண்டு போக கூடாது என்றும், எங்கு எந்த மிருகம் இருக்கும் என்றும் கணபதியார் சொல்லி கொடுப்பார். கணபதியார் இன்றும் பறங்கியர் அன்பளிப்பாக குடுத்த அதே பதினாறாம் நம்பர் துவக்கையே பயன் படுத்தினார்.

(கணபதியார் பிற்காலத்தில் தனது பேரப்பிள்ளைகளுக்கும் பறங்கியர் கொடுத்த அதே துவக்கால் சுடப்பழக்கினார். நாட்டில் குழப்ப நிலை உண்டாகி தனியார் எல்லாரும் துவக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அறிவிக்கும் வரைக்கும் அந்த துவக்கு மூன்று தலைமுறையாக கணபதியார் குடும்பத்தில் இருந்தது.)

வேதவனம் சிறந்த விஷகடி வைத்தியராக இருந்தபடியால் மக்கள் சாவகச்சேரிக்கு அலையும் நிலை மாறிவிட்டது. அவர் எல்லோருடனும் அன்பாக பழகினார். மற்ற பாம்புகள் மக்களை எதேட்சையாக தான் சந்தித்தன. நாகபாம்புகளும் சாரைப்பாம்புகளும் மக்களின் வீடுகளையே சுற்றி வந்தன.

வீடுகளில் நெல் இருந்தபடியால் எலிகளும் வந்தன. பாம்புகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு எலிகளாகும்.  கோழிக்குஞ்சுகளும் கோழி முட்டையும் பாம்புகளுக்கு விருப்பமான உணவுகள் தான். நாகமும் சாரையும் அடிக்கடி மனிதரை காண்பதால் கண்டபடி கடிப்பதில்லை, மிதித்தால் மட்டுமே கடிக்கும். மக்கள் இடைக்கிடை பாம்புக்கடிக்கு உள்ளானார்கள். வேதவனத்தார் பார்வை பார்த்து மருந்து கொடுப்பார். ஒரு கிழமை வரை தனது வீட்டில் வைத்து, பராமரித்து வைத்தியம் செய்வார்.

பேரம்பலத்தாருக்கு பேப்பர் வாசிக்கும் போது அதில் வரும் வழக்குகளின் தீர்ப்பை படிக்க படிக்க, கோட்டுகளுக்கு போய் வழக்குகளை நேரே பார்த்தால் என்ன? என்ற எண்ணம் வந்தது.

அப்போது கிளிநொச்சியில் ஒரு கிராம கோட் இருந்தது. அங்கே சிறிய வழக்குகள் விசாரிக்கப்பட்டன. வழக்கில் லோயர்கள் (lawyer–> நியாயவாதி –> சட்ட நிபுணர்) வழக்காளிகள், எதிர்தரப்பினர், சாட்சிகளிடம் கேட்கும் கேள்விகளையும் அதற்கு அவர்கள் சொல்லும் பதில்களையும் பேரம்பலம் மிகவும் அவதானமாக கேட்பார்.

பின்னர் வீட்டில் வந்து அவரை தேடி வரும் ஊரவர்களுக்கு லோயர்கள் கேள்வி கேட்ட முறையையும் சாட்சிகள் பயந்து பயந்து சொன்ன பதில்களையும் நடித்து காட்டுவார். அவர் தோழர்களிடம் வழக்கின் தீர்ப்பின் முதல் நாள் “பார் இன்று எதிரிக்கு சார்பாய் தான் தீர்ப்பு வரும். சாட்சியை லோயர் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு குழப்பி விட்டார்” என்பார்.  அவர் சொன்னபடி நடந்துவிட்டால் தோழர்களுக்கு அன்று கள்ளு விநியோகமும் நடக்கும்.

சாவகச்சேரியில் பெரிய கோட் இருந்தது. அங்கை வந்தால் அப்புக்காத்து குமாரசாமி, அப்புக்காத்து நவரத்தினம் வழக்கு பேசுவதை நேரே பார்க்கலாம், அவர்கள் அந்த மாதிரி வழக்கு பேசுவார்கள் என்று அவரது சிநேகிதரான செல்லையர் உசுப்பேத்தி விட்டார்.

பேரம்பலம் எருமைகளையும் மாடுகளையும் காட்டில் மேய விட்டு விட்டு வந்து குளித்து வெளிக்கிட்டு மடித்து கட்டிய வேட்டியுடனும் தலைப்பாக்கட்டுடனும் வெளிக்கிட்டு விடுவார். வழக்கு முடிந்து வந்து மாடுகளை சாய்க்க இருண்டு விடும்.

மகாலிங்கன் ஆறுமுகத்தாரிடம் “நீங்கள் குஞ்சியப்புவை அப்புக்காத்துக்கு படிப்பிச்சிருக்கலாம்” என்று சொல்லுவான். அவர் “எனக்கு உதெல்லாம் தெரியாதடாப்பா” என்பார். அப்புக்காத்து குமாரசாமி பேசிய வழக்குகளையும் அப்புக்காத்து நவரத்தினம் பேசிய வழக்குகளையும் பேரம்பலத்தார், அக்குவேறு ஆணிவேறாக விளங்கப்படுத்த அவரிடம் வழக்கு விபரம் கேட்க வரும் ஆட்கள் தொகை கூடியது.

செல்லையர், பேரம்பலத்தாரின் பாலிய கால நண்பர். அவருக்கும் கோட்டுகளில் நடக்கும் விசாரணைகளை பார்ப்பதில் மிகவும் விருப்பம். வழக்கு நடைபெறும் நாளில் செல்லையர் பேரம்பலத்தாருக்காக கோட் வாசலில் காத்திருப்பார்.

நாட்கள் போகப்போக ஆறுமுகத்தார் தளர்ந்து கொண்டே வந்தார். அவர் பூசை செய்ய வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வெளிக்கிட, எங்கை நின்றாலும் மகாலிங்கன் ஓடி வந்து விடுவான். அவரை கையைப் பிடித்து கூட்டி செல்வான்.

கோவிலில் முத்தர்கணபதி எல்லா வேலைகளையும் செய்து வைத்திருப்பார். அவர் நடக்கமுடியாமல் கஷ்டப்படுவதைப் பார்க்க மகாலிங்கனின் கண்கள் கலங்கி விடும். அவன் நல்லையனிடம் “குஞ்சி, இனிமேல் அப்புவை வண்டிலில் தான் கொண்டு வரவேண்டும்.” என்று சொல்லி விட்டான்.

மகாலிங்கனும் நல்லையனும் ஆறுமுகத்தாரோடை வண்டிலில் போக, மணி அடிக்கும் சத்தம் கேட்க விசாலாட்சியும் நடந்து வந்து விடுவா.  நடந்து வரும் போது விசாலாட்சிக்கு ஆறுமுகத்தாரைப் பற்றிய கவலை வந்து விடும். மகாலிங்கனை அவர் தனது சொந்த பேரனாகவே நினைத்தார். அவருக்கு அவன் தம்பையரின் பேரன் என்ற நினைப்பே இல்லை.

மகாலிங்கனும் ஆறுமுகத்தாரில் அளவில்லாத அன்பு வைத்திருந்தான். ஆறுமுகத்தாரை நினைக்க விசாலாட்சிக்கு கவலையையும் தாண்டி ஒரு பிரமிப்பு உண்டாகும். தான் திருமணத்தின் முன் கேட்ட இரண்டு நிபந்தனைகளில் ஒன்றைக்கூட அவர் மீறியதில்லை. அதேவேளை தனது பிள்ளைகளுக்கும் எந்த குறையையும் வைக்கவில்லை. பூசை முடிய விசாலாட்சியும் ஆறுமுகத்தாரை அணைத்தபடி வண்டிலிலேயே வருவாள்.

ஒரு நாள் ஆறுமுகத்தார் கணபதியாரையும் பேரம்பலத்தையும் கூட்டிவரும் படி நல்லையனை அனுப்பினார். எல்லாரும் தியாகர்வயலில் வந்து கூடினார்கள். மீனாட்சியும் அரக்க பறக்க ஓடி வந்து விட்டாள். ஓடி வந்த மீனாட்சி, நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு தலைவாசலினுள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தாள்.

ஆறுமுகத்தார் கவலையுடன் தரையில் அமர்ந்து இருந்தார். விசாலாட்சி சுவரில் சாய்ந்து கொண்டு, தரையில் கணவரையே பார்த்தபடி இருந்தாள். ஒரு பக்கம் கணபதியாரும் பேரம்பலமும் தகப்பனின் கோலத்தை பார்த்து கவலையுடன் நின்றார்கள்.

கணபதியார் ‘ஒரு நாளும் எல்லாரையும் ஒன்றாக கூப்பிடாத ஐயா, இண்டைக்கு என்ன சொல்லப்போறாரோ’ என்று யோசித்துக்கொண்டு நிற்பதை மீனாட்சி ஊகித்துக்கொண்டாள். 

மகாலிங்கனும் நல்லையனும் ஆறுமுகத்தாரைப்பற்றிய யோசனையுடன் அவரையே பார்த்துக் கொண்டு, சற்று முன்னால் நின்றார்கள். ஆறுமுகத்தார் ஒரு முறை செருமிக் கொண்டு “பிள்ளைகள் எனக்கும் வயது போய் விட்டது. தம்பையரும் முத்தரும் அடிக்கடி கனவில் வருகினம். எனக்கு ஒண்டு நடக்கிறதுக்கிடையிலை நான் மகாலிங்கனின் கலியாணத்தை பார்க்கோணும்.” என்றார்.

மகாலிங்கன் “அப்பு உங்களுக்கு ஒண்டும் நடக்காது. எனக்கு ஏன் 19 வயதிலை கலியாணம்” என்று அழுதான். அவனைப் பார்த்து, பேசாதை எண்டு சைகையால் மறித்து விட்டு பேரம்பலத்தைப் பார்த்து “தம்பி பேரம்பலம், எனக்கு ஒரு கடைசி ஆசை இருக்குது. எனக்கு ஒண்டு நடந்தால் என்ரை மூத்த மகன் கணபதி தான் கொள்ளி வைக்க வேணும்” என்றார்.

“ஐயோ ஐயா, அண்ணன் கொள்ளி வைக்கிறது தானே முறை. அதைப் பற்றி இப்ப ஏன் கதைக்கிறியள். உங்களை விட்டிட்டு எங்களாலை இருக்கேலுமே” என்று ஒரு நாளும் ஒன்றுக்கும் கலங்காத பேரம்பலமும் கலங்கி அழுதான். எல்லாரும் அழுது ஓய்ந்து மகாலிங்கனை சம்மதிக்க வைத்தனர்.

அடுத்த புதன் கிழமை கணபதியார் பேரம்பலத்தையும் வல்லிபுரத்தாரையும் சின்னகணபதியையும் கூட்டிக்கொண்டு மீசாலைக்கு போய் மகாலிங்கனுக்கு பொருத்தமான பெண்ணை பார்ப்பதென முடிவு செய்தனர்.

மகாலிங்கனுக்கு சென்ற வருடம் 18 வயது முடியத்தான் பத்திரிகையின் ‘நிருபர்’ என்ற நியமனம் கடிதம் கிடைத்தது. அவன் செய்திகளை சேகரிப்பதிலும் அனுப்புவதிலும் கவனமாக இருந்தான். அப்பு தன்னை கலியாணம் செய்யச் சொன்னதை அவனால் மறுக்க முடியவில்லை. அவர்கள் தனக்கு பொம்பிளை பார்க்க மீசாலைக்கு போனது அவனுக்கு தெரியும். பெரியவர்கள் சரியான பெண்ணை தான் தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

கணபதியார் ஒரு பெண்ணையும் அவர்கள் வீட்டில் போய் பார்க்க சம்மதிக்கவில்லை. பெண்ணைப் பார்த்து விட்டு அவள் மகாலிங்கனுக்கு பொருத்தமில்லை என்று சொல்லி வேதனைப்படுத்த அவர் விரும்பவில்லை. விசாரித்து குடும்பம் சரி வந்தால், அவளது பெற்றோர் சம்மதிக்கும் பட்சத்தில், தூரத்தில் மறைவாக நின்று பெண்ணை பார்ப்பது தான் முறை என்று நினைத்தார். 

கணபதியாரும், பேரம்பலம் தவிர போன மற்றவர் இருவரும் மீசாலையில் பிறந்தவர்கள். மகாலிங்கன் பெரிய பரந்தனில் பிறந்ததால் ‘வன்னியான்’ என்று சிலர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். இன்னும் சிலர் தங்கள் மகள் பெரிய பரந்தனுக்கு வரமாட்டாள் என்றும், மகாலிங்கன் மீசாலையில் வந்து இருக்க சம்மதித்தால் பெண் தர சம்மதம் என்றனர்.

பெரிய பரந்தனுக்கு பெண்ணை அனுப்ப சம்மதித்த எல்லார் வீட்டு வளவுகளுக்கும் கிடுகு வேலிகள் இருந்தன. வேலி மறைவில் நின்று கணபதியாரும் மற்றவர்களும், மூன்று பெண்களை பார்த்தனர். அவர்களுக்கு மனத்திருப்தியாக ஒரு பெண்ணும் அமையவில்லை.

கணபதியார் “அவசரப்படாமல் அடுத்த கிழமை வந்து பார்ப்பம்” என்று திரும்பி போக ஆயத்தப்படுத்தினார். பேரம்பலம் “அண்ணை, உதிலை பக்கத்திலை செல்லையா எண்ட என்ரை சினேகிதன் இருக்கிறான். அங்கை ஒருக்கால் போட்டு போவம்” என்று செல்லையா வீட்டுக்கு கூட்டிச் சென்றான்.

மீசாலையில் வேலுப்பிள்ளை என்ற ஒருத்தர் இருந்தார். அவரை எல்லாரும் ‘சவாரிக்கார’ வேலுப்பிள்ளை என்று அழைத்தனர். அவரது மாட்டுப்பட்டியில் மூன்று சோடி நாம்பன்களும் மூன்று சோடி எருதுகளும் நின்றன. வேறொரு கொட்டிலில் இரண்டு பசுக்கள் நின்றன. ஒன்று கன்றுடனும் மற்றது கண்டுதாச்சியாகவும் காணப்பட்டன. ஒன்றில் பால் கறந்து ஓய மற்றதில் பால் கறந்து வீட்டுத்தேவைக்கு எடுக்கலாம்.

மற்றது எல்லாம் நாம்பன்களும் எருதுகளும் தான். எருதுகள் எல்லாம் தவிடு, புண்ணாக்கு, பசும் புல், வைக்கல், கழிவு உழுந்து, கள்ளு மண்டி சாப்பிட்டு ‘ஜம்’ என்று நின்றன.

ஒவ்வொரு நாளும் வேலர் உடம்பு தேய்த்து குளிப்பாட்டுவார். யாழ்ப்பாணத்தில் எந்த மூலையில் மாட்டுவண்டி சவாரிப் போட்டி நடந்தாலும் வேலரின் எருதுகள் பங்கு பற்றும். அவரது எருதுகள் சவாரிப்போட்டியில் முதலாவதாக, தவறினால் இரண்டாவதாக வந்து விடும். அதனால் தான் அவருக்கு ‘சவாரிக்கார வேலர்’ என்ற பட்டம்.

அண்மையில் யாழ்ப்பாணம் முத்தவெளியில் நடந்த போட்டியில் வேலரின் எருதுகள் முதலாம் இடம் வந்து, வேலர் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற மனிதரான திரு. சாம் சபாபதியின் கையால் முதல் பரிசை பெற்றார். அவர் வன்னியில் திரிந்து நல்ல நாம்பன் சோடிகளாக வாங்கி வருவார். அந்த சோடிகளை நன்கு பராமரித்து வண்டில் சவாரி பழக்குவார். அதனால் அவரது நாம்பன் சோடிகள் நல்ல விலைக்கு போகும். சவாரி இல்லாத நாட்களில் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் தோட்ட வேலை செய்வார். (இளம் ஆண் மாடுகள் நாம்பன்கள் என்றும், நடுத்தரமான வயதுடைய குறி சுடப்பட்ட ஆண் மாடுகள் எருதுகள் என்றும் அழைக்கப்பட்டன.)

வேலருக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவரது மூத்த மகள் சரஸ்வதியை பேரம்பலத்தின் சினேகிதன் செல்லையா கலியாணம் செய்திருந்தார். வேலர் தனது காணியில் ஒரு பகுதியில் ஒரு மண் வீடு கட்டி அவர்களுக்கு கொடுத்திருந்தார். செல்லையா மனைவியுடன் சேர்ந்து தோட்டம் செய்தார். அவருக்கும் பேரம்பலத்தை போல கோட்டுகளில் போய் வழக்குகளை பார்ப்பது ஒரு பொழுது போக்கு.

வேலரின் இரண்டாவது மகள் பொன்னம்மா சங்கத்தானை பாடசாலையில் படிக்கிறாள். அவள் அங்கு ஜே. எஸ். சி சித்தியடைந்து, இப்போது பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறாள். மூன்றாவது மகள் பாலாம்பிகை அல்லாரை பாடசாலையில் படிக்கிறாள். நான்காவது மகள் நல்லம்மாவும் அதே பாடசாலையில் படிக்கிறாள்.

நல்லம்மாவிற்கும் சின்னக்கா மாதிரி சங்கத்தானை பாடசாலைக்கு போய் படிக்க ஆசை. பொன்னம்மா அல்லாரையில் படித்துவிட்டு சில வருடங்களாக, மீசாலையிலிருந்து றெயின் றோட்டு கரையால்  ஒவ்வொரு நாளும் ஐந்து கட்டை நடந்து சங்கத்தானை பாடசாலைக்கு போய் வருகிறாள்.

கணபதியாரும் மற்றவர்களும் செல்லையா வீட்டில் தேநீர் குடித்துக் கொண்டு இருக்கும் போது பாடசாலையால் வந்த பொன்னம்மா “அக்கா நான் வந்திட்டன்” என்று தமக்கையிடம் சொல்லி விட்டு, ஒரு கட்டு புத்தகங்களுடன் தனது வீட்டிற்கு போனாள். தூரத்திற்கு படிக்கப்போகும் தங்கச்சி, பாதுகாப்பாக வந்துவிட்டாள் என்று தெரிந்து கொள்ள சரஸ்வதிக்கு, பொன்னம்மா ஒவ்வொரு நாளும் வந்தவுடன் தகவல் சொல்ல வேண்டும்.

கணபதியாருக்கு அவளைக் கண்டதும் ‘இந்த பிள்ளையை மகாலிங்கனுக்கு கேட்டால் என்ன?’ என்ற எண்ணம் உண்டானது. பொன்னம்மா நடுத்தர உயரத்துடன் நல்ல நிறமாகவும் இருந்தாள். பேரம்பலத்தை தனியே கூட்டிச் சென்று “தம்பி, வேலுப்பிள்ளையற்றை இரண்டாவது மகளை மகாலிங்கனுக்கு பார்த்தாலென்ன” என்று கேட்டார். தமையன் தனிய கூப்பிடவே பேரம்பலத்துக்கு ஓரளவு விசயம் புரிந்து விட்டது. அவனும் அதே மாதிரி தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் “அண்ணை செல்லையாவிடம் கதைத்து பார்க்கிறன்” என்று செல்லையாவை தனிய கூப்பிட்டு கதைத்து விட்டு, இரண்டு பேருமாக வேலர் வீட்டுக்கு போனார்கள். மருமகன் வேறொருவருடன் வருவதைக் கண்ட வேலர் எழும்பி வெளியே வந்தார்.

செல்லையா “மாமா, இவர் கணபதியாரின்ரை தம்பியார், ஆறுமுகத்தாற்றை மகன். கணபதியாற்றை மகன் எஸ்.எஸ்.சி பாஸ் பண்ணிப்போட்டு தகப்பனோடை கமவேலைகளை செய்யிறான். அவனுக்கு பொன்னம்மாவை கேக்கினம்” என்றான்.

அதற்கு வேலர் “அதுக்கென்ன யோசிப்பம். பிள்ளை இந்த வருசம் எஸ்.எஸ்.சி சோதினை எடுக்கப் போறாள். சோதனை முடிய பார்ப்பம்” என்றார். அதற்கு செல்லையர் “மாமா, ஆறுமுகத்தார் கடுமையான வருத்தமாய் இருக்கிறாராம். அது தான் அவசரப்படுகினம்” என்றான். அதற்கு வேலர் “பிள்ளை சோதனை எழுதாமல் கலியாணத்துக்கு சம்மதிப்பாளோ தெரியாது. எதுக்கும் நான் மகளோடை ஆறுதலாக கதைத்துப் பார்க்கிறன். செல்லையரிட்டை மறுமொழி சொல்லி விடுறன். இப்ப போட்டு வாருங்கோ” என்றார்.

(தான் படித்து ஒரு ஆசிரியையாக வரவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பொன்னம்மா மகாலிங்கனை கலியாணம் செய்ய சம்மதிப்பாளா?)

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More