
தினமும் அவனை
பார்க்கிறேன்
சிறுவன்தான்
ஓ எல் முடித்து
ஒரு சில மாதமிருக்கும்
கல்லூரி உணவகத்தில்
கையாள் உத்தியோகம்
தள்ளு வண்டியை
இழுத்தபடி மிச்ச இலைகளை
சேகரித்து கைகளைக் கட்டி மௌனமாய்
நிற்பான்..
அவன் உடைகளில்
பிரபஞ்சம் மறைத்து
வைத்திருக்கும்
குடுப்பத்தின் வறுமை
ஆர்ப்பாட்டம் செய்யும்
ஏதொன்றும் பேசான் !
அவன் வார்த்தைகளையும்
நல்ல விலைக்கு
வாங்கியிருப்பான்
முதலாளி
என் அருகில் வருவான்
என் எச்சில் இலையை
எடுக்க முயல்வான்
தடுமாறியபடியே
நான் தடுப்பேன்..
புன்னகைத்தபடி
இலையைப்
பறித்துக்கொள்வான்
நானும் பதிலுக்கு
புன்னகைப்பேன்
அவனுக்கு கொடுப்பதற்கு
புன்னகையைத் தவிர
வேறென்ன இருக்கிறது
பெறுமதியாய்
இந்த பிரபஞ்சத்தில்..
வில்லரசன்