சிறுகதை | சபிக்கப்பட்ட நாயின் சாவு . . .| மாயன்

 

நிறங்கள் என் கண் முன்னே மாறிற்று. அழுத்தி மூடிக்கிடந்த பலூனின் வாய்க்கதவை என் தலை தள்ளத் தொடங்கிற்று.

யாரோ என்னை இழுக்கிறார்கள்….

பேரருவியாய் நீர் பலூனின் வாய் வழியே வழிய….குகை வாய் இடுக்கையகற்றி தலையை யாரோ இழுக்க, முனகி… முக்கி… யாரோ எனை வெளித்தள்ள…..

“ ஐயோ…. பயமாக் கிடக்கு… கண்முழுக்க வெளிச்சமடிக்குது… வாயத் திறந்து நான் கத்தப் போறன்”

பிரசவ அறையிலிருந்து பீறிட்டுச் சிறுகுரலில் ஓர் குழந்தையின் அழுகை உலகில் வரவைப் பதிவு செய்தது.

“ இஞ்சபார்… உண்ட பிள்ளைய…கொழுக்கு மொழுக்கெண்டு கனமாத்தான் இருக்கிறார்” கிழட்டு மருத்துவிச்சியின் குரலில் பெருமிதம் தெளிவற்றுக் கிடந்தது. “என்ன பிள்ளையெண்டு படமெடுத்துப் பாத்திருப்பியல் தானே… பொடியன் தான்….பால வடிவாக் குடு…. அவனுக்கும் நல்லம்… உனக்கும் நல்லம்”

போகின்ற போக்கில் ஏனோ தானோ என்று சலிப்போடு பேசியதைப் போல மருத்துவிச்சியின் குரல் அவளுக்குக் கேட்டது.

“என்ர பிள்ளை… …என்ற மகன்…” இழந்த இரத்தம் எல்லாம் ஒரு சேர ஊற்றெடுத்து உடல் முழுவதும் சுழன்றோட உத்வேகம் கொண்டு அவள் “என்ர பிள்ளை” என்று தன் மார்போடு இறுக்கினாள்.

“நான் என்ர கத்தலை நிப்பாட்டிப் போட்டன்”

அமிர்தம் என் வாயினுள் சுரக்கும் போது அழுகை எதற்கு?

அது ஒரு நீண்ட தெரு… கரையோரங்களிற் கல்லுப் பெயர்ந்து மழை நீரால் மண்ணரிக்கப்பட்டு.. அவலட்சணமாய் இருந்தாலும்… பயணம் செய்பவரின் பலவர்ணத் துப்பல்களால் சிவப்பும், மஞ்சளும் வேறு ஏதேதோ எல்லாம் நிறம் படிந்து கிடக்கும் தெரு.

தெருவோர அந்தங்களின் வீடுகளிலிருந்து தூக்கியெறியப்படும் குப்பைகள் யாவும் சேர்ந்து புழுத்துப்போன மணமும்… புழுக்களும் சேர்ந்த குப்பைக் கிடங்கின் அருகே….. உறுமல்….

…… நிறங்கள் பல கொண்ட நாய்கள்… சீழ் பிடித்த புண்களுடன்… மயிர் கழன்ற தோல்களுடன் …. நாற்றமடிக்கும் நாய்கள்… எறியப்படும் புதிய குப்பைக்காய் சண்டையிட்டுக் கொண்டிருக்க… ஓரமொன்றில் சபிக்கப்பட்ட பெண் நாயொன்று சோனை பிடித்த குட்டி நாயொன்றைப் பெற்றுப் போட்டது… இறந்து பிறந்ததைப் போல் அசைவற்றுக் கிடந்தது.. அந்த நாய்க்குட்டி…. இருள் கவிந்த பின் ஓர் சிணுங்கலை மட்டும் செய்தது.

 

மருத்துவச் சாலையிலிருந்து மூன்றாம் நாள் நான் வீடு வந்தேன். அம்மாவை அசைய விடாமல் பாட்டியும் சித்தியும் பற்றி காரிலிருந்து கீழே இறக்கினார்கள். என்னைக் காவிச்செல்ல ஆயிரம் கைகள்… அங்கங்கள் ஒவ்வொன்றையும் பற்றிய சிலாகிப்பு… “கண் அப்பரை மாதிரியே இருக்கு”… “காதுச் சுளியலைப் பாத்தியலே… தாத்தாவின்ற அதே சேப்” யாரோ சொல்ல பாட்டி சுவரில் சட்டமிட்டுப் பொட்டுவைத்திருந்த தாத்தாவின் படத்தை ஏக்கத்துடன் நோக்கினாள். பின் சிறுமூச்சொன்று விம்மியடங்க முகம் திருப்தியாய் பொக்கை வாயால் என் கால்களை எச்சில் படுத்தினாள்.

 

“கொட்டாவி விடுறான் … பசிக்குது போலக் கிடக்கு… தம்பி இஞ்ச வா… மகனக் கொண்டுபோய் மனிசீட்டக் குடு…” மீண்டும் கைமாறக் கதகதப்பான அணைப்பு…கணப்பொழுதில் அமிர்தம்… கண்களை இமை மூடக் கறுப்பிருட்டில் கனவுகள்….

 

விடியலில் சோணை பிடித்த குட்டிநாய் மெதுவாய் எழும்பியது. நடை தள்ளாட உறுதியின்றிப் போய் மலைக்குவியல் குப்பையில் விழுந்தது. மீள மெதுவாய் எழும்பி நாக்கைத் தொங்கவிட்டு புழுப்பிடித்த பண்டங்களை எல்லாம் நக்கத் தொடங்கிற்று…. திடீரென அருகே உறுமல்… சோணை நாயை அது நக்கிய புழுப்பிடித்த பண்டங்களின் சொந்தக்கார நாய் சினமேறிப் பார்த்துக்கொண்டிருந்தது…

உறுமல்…. அனுங்கல்….

உறுமல்;…. ஊளை….

உறுமல்… உறுமல்…..

குட்டி நாயின் சீவ மரணப் போர்… உயிர்வாழ்வதற்கான உணவுப் போர்…. அக்கணம் தொடங்கிற்று.

Baby_Crawling__Front_View__by_eivvy

 

“இஞ்ச பாரன் … முகத்தப்பாத்துப் பாத்து சிரிக்கறத… கொப்பர்… கொம்மாட முகமெல்லாம் பொடிக்கு விளங்குது தானே…”

 

“இஞ்சாருங்கோ… எங்க நிக்கிறியள்… இஞ்ச ஓடி வாங்கவன்… இவனப் பாருங்களன் குப்பிறத் திரும்பீட்டான்…” அம்மாவின் குரல் குதூகலக் காண்டாமணியாய் ஊரெங்கும் அச்சேதி பரப்பிற்று.

“ அடிக்….அடீக்… இதென்ன புதுசா ஒரு குட்டி நாயொண்டு வாசல்ல வந்து நிக்குது … இப்பயே அதுக்குக் கழுத்துப் பக்கத்தில சிதல் வடியுது புண்ணால….” …. “அடிச்சுக் கலையுங்கோ…” “அடீக்…அடீக்” கல்லொன்று எழும்பி காற்றில் இலக்கின்றிப் பறந்தது. அந்தக் குட்டி நாய் மீண்டும் குப்பை மேட்டை நோக்கி ஓட்டமெடுத்தது.

 

“ இஞ்சாருங்கோ… சாப்பாடு தீத்தேக்க கையக் கடிக்கிறான்… ஓம் பல்லு முளைச்சிட்டுது”

குடையின் நடுவே நான் குந்தியிருந்தேன். உறவுகள் கூடி வீட்டு விறாந்தையை நிறைத்திருக்க குடை மீது எதுவெதுவோ கொட்டப்பட்டது. எதுவுமே என் விரல்களுக்குள் அடங்கா வடிவங்கள்…  ஒன்று மட்டும் பிடிபடவே நான் அதை எடுத்து வாய்க்குள் ஓட்டினேன்.

“ அம்மாடி …. இப்பவே பொடியன் பென்சில எடுக்கிறான்… கடும் கெட்டிக்காரந்தான்….” யாரோ சொல்ல முத்தங்களை அள்ளித் தெளித்தார்கள் உறவுகள்.

 

மிஞ்சிப்போன கொத்துரொட்டிப் பறியொன்று குப்பை மேட்டில் வீசப்பட்டது. அந்தத் தெருவின் அந்தமொன்றிலுள்ள வீட்டில் பல் முளைத்த விழாவில் எறிபவற்றைச் சாப்பிடக் கூடியிருந்தன நாய்கள்…. குப்பையில் எறியப்பட்ட பறியின் முன்னே எஞ்சி நிற்கின்றது சபிக்கப்பட்ட சத்தியிழந்த பெண்நாயும் … சோணை பிடித்த நாய்க் குட்டியும்….

உறுமல்;; ….. தக்க வைப்பதற்கான உறுமல்….

ஊளை….. நாக்கு நுனியல் வழியும் எச்சில் துளிகளின் ஊளை…

நேருக்கு நேர் மோத வலுவற்ற நாயிரண்டும் உறுமிக் கொண்டே ஆளுக்கோர் பக்கமாய் ரொட்டிப் பையை இழுத்துப் பிய்த்தன… கிடைத்ததைக் கொண்டு ஓரங்களுக்குள் ஒதுக்கிக் கொண்டன…. கிடைக்காதததையிட்டு ஊளையிட்டன.

 

“ ஆ…. வெட்டுங்கோ… கேக்கை வெட்டி அப்பாக்குத் தீத்துங்கோ… எங்க…எங்க…. இந்தா… இந்தா… அச்சாக்குட்டி” .

அன்றும் வீட்டின் மூலையில் எறிபவற்றைச் சாப்பிட ஒன்றாகின நாய்கள்… கழுத்திற் சிதல் வடியும் புண் கொண்ட நாயொன்று  தனது பங்கைப் பிரித்துச் செல்லும் வைராக்கியத்துடன் உறுமத் தொடங்கிற்று….

 

எனக்கான விழாக்கள் ஆண்டொன்றில்  பல வந்தது. அரிசியில் எழுதிய ஒரு நாள்…. ஆரம்பப் பாடசாலைக்கொருநாள்…. நிறக் காட்சட்டைக்கும் வெண்ணிறச் சேட்டுக்கும்…. ஆண்டுகள் இறந்து அகவைகள் பிறக்க ஒன்று… புலமைப்பரிசிற் பரீட்சைக்கொன்று….பத்தாம் வகுப்புப் பெறுபேற்றுக் கொன்று…  விழாக்களின் போதெல்லாம் சிரித்தும் சந்தோசித்திருந்தும் நான் காலம் சில உறவுகளின் பெயரை அழித்த போதெல்லாம் மட்டும் அழுதேன்…

நாய்களோ அவ்வனைத்து நாட்களிலும் எறியப்படுபவைக்காய் கடித்துக் குதறிக் கொண்டன…

அவர்கள் காக்கி உடை அணிந்திருந்தார்கள்… பச்சை நிறத் தொப்பி… புரியாத மொழி… கைகளிலோ கொலைக்கருவி….

அவர்களால் எனது பயணம் அன்று நிறுத்தப்பட்டது…. கிலி கால்களை நடுங்கச் செய்ய குதித்திறங்கினேன் சைக்கிளிலிருந்து….

“புரியாத மொழி”

“ எங்க போறாய்” ….

“…….”

“பாக்கில என்ன”

“ புக்ஸ்”

“ எங்க இருக்கிறனி”

“………”

அருகில் அவர்கள் நெருங்க நாக்குக் குளறத் தொடங்கிற்று… “ என்ர பேர்….. நான் ஒரே பிள்ள…. அம்மா டீச்சர்… அப்பா வயச் செய்ரார்….. இஞ்ச பக்கத்தில தான் இருக்கிறன்….சந்தியால திரும்பி நீல கேட்…..மூண்டாவது வீடு… கோயிலுக்கு முன்னுக்கு….” வார்த்தைகள் தெளிவற்றுப் புலம்பலாய் விழுந்தது…

சந்தேகம் வலுத்தது அவனுக்கு… கேள்விகள் கொத்தாக விழுந்தன..

“ எந்த ஸ்கூல்… ஆர் டீச்சர்… எத்தனை வயசு… அவனுகள் வாறவங்களா ஸ்கூலுக்கு… நீ என்ன கொண்டு போய்க் குடுக்கிறனி… காச்சட்டைக்க என்ன வச்சிருக்கிறாய்….”

“ பயப்பிடுறான்…. நாய்… இவனுக்குத் தொடர்பிருக்கு… இல்லாட்டிப் பயப்பிட மாட்டான்….”

 

“ உனக்குச் சம்பந்தமிருக்கு…. இல்லையா…. ஓமா……இல்லையா…. ஓமா…… இல்லையா…. ஓமா…… ஓம்தானே…. ஓம்தானே…. ஓம்தானே….”

 

கேள்விகளின் முடிவில் ஓங்கியறைந்து என்னை நிலத்தில் வீழ்த்தினார்கள்.

 

“ ஆரும் என்ற பிள்ளைக்கு அடிக்கக்கூடாது… சரியா….”

“ அவன் நடந்து பழகுறான்… கீழ விழாமப் பாத்துக்கொள்ளுங்கோ…”

“ குழந்தைக்கு ஏதும் நடந்துதெண்டா … வீட்டில இருக்கமாட்டீர்”

South Vietnamese Woman Running Past Dead Body

நிலத்தில் குப்பிற வீழ்ந்து கிடந்த அவனின் முகத்தைத் திருப்பி அவர்கள் அவன் கண்ணின் ஊடே உண்மையைத் தேடினார்கள்…

மிருகம்….. அவர்கள் தேடிய மிருகம்…. அவர்களுக்கென்னவோ அவன் கண்ணினுள்ளே அந்த மிருகம் தெரிந்தது….. அரச மரத்தையும்… அதனினத்தையும்… கருவறுக்கும் மிருக முகம்…

 

திரும்பிக்கிடந்த முகத்தின் மீது கொலைகருவிப் பிடியினால் ஒரேயடி…

“அம்மோவ்” பீறிட்டுப் பெருங்குரலில் ஓரழுகை…

உடைந்து தெறித்தன பற்கள்…

“கொட்டின கொழுக்கட்டய பிள்ளையாருக்கும் கொட்டினதால என்ற பிள்ளைக்கு முத்து முத்தாப் பல்லுகள் …. பாத்தியலே”

எனக்கு உலகம் இருண்டது…. கால்கள் இரண்டையும் பற்றி யாரோ இருள் சூழ்ந்த முகாமினுள் இழுத்துச் சென்றார்கள்….

Indian woman mourns death of her relative killed in tsunami in Cuddalore

அம்மா அந்த முகாம் வாசலில் மண்ணுக்குள் பிரண்டு அழுகின்றாள்.. “ ஐயோ… என்ர பிள்ளைய விட்டிருங்கோ… அவனுக் கொண்டும் தெரியாது…அவன நாங்கள் பொத்திப் பொத்தி வளத்தம்…ஐ….யோ…..என்….ர …பி…ள்…ளைய விட்….டிருங்கோ….”

 

அதே முகாமின் வாசலில் சத்தியிழந்து சபிக்கப்பட்ட பெண் நாய் செத்துக் கிடந்தது..

 

அந்த இரவில்… எனது தெருவின் குப்பை மேட்டுக்கருகில் கைகள் பின்னால் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டு நான் வீசியெறியப்பட்டேன்….

நாய்கள் எவையுமில்லை அங்கு…

கழுத்தில் சீழ் பிடித்து…. தோல் மயிர் எல்லாம் இழந்த சொறிநாயொன்று மட்டும் எனது உதிரத்தை நக்கியபடி அருகிலிருந்தது….

 

kannan  மாயன்

15.04.2012

 

 

 

 

 

 

 

 

 

ஆசிரியர்