கனடாவில் தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஒரு இலங்கைத் தமிழர், மறுநாள் படகு விபத்து ஒன்றில் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை நெகிழச்செய்துள்ளது.
செப்டம்பர் 3ஆம் திகதி இலங்கைக்கோன் பல்லவநம்பி தனது நண்பர்களுடன் Woodbine கடற்கரைக்கு சென்றுள்ளார்.
ரொரன்றோ தீவுகளுக்கு படகில் சென்று பார்பிக்யூ முறையில் சமையல் செய்து கோடையின் முடிவைக் கொண்டாடுவது நண்பர்களின் திட்டம்.
ஆனால், புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் படகு கட்டுப்பாட்டை இழந்து பாறைகளில் மோத, அங்கேயே உயிரிழந்துள்ளார் நம்பி.
நம்பியின் மனைவி அனிதா தன் மூத்த மகன் ஜெய்சனின் (15) கைகளை இறுகப்பற்றியபடி கண்ணீருடன் தமிழில் கணவரின் இழப்பு குறித்து கூற, மகன் அதை ஆங்கிலத்தில் விளக்குகிறார்.
அவர் வேண்டும் என்கிறார் அம்மா, அவர் புன்னகைப்பதை மீண்டும் பார்க்க ஆசைப்படுவதாகவும், அவர் இல்லாமல் வாழ முடியாது என்றும் அம்மா கூறுவதாக தெரிவிக்கும் ஜெய்சன், 15 வயதே ஆகும் நிலையில், தற்போது திடீரென குடும்ப பாரத்தை தோளில் சுமக்கும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, நான் பள்ளிக்கு செல்வதா, அம்மாவைக் கவனித்துக்கொள்வதா என்று தெரியவில்லை என்று கூறும் ஜெய்சன், நல்ல வேளையாக உறவினர்கள் கூட இருப்பதால் கொஞ்சம் உதவியாக இருக்கிறது என்கிறார்.
நேற்று முன்தினம் ரொரன்றோ பொலிசார், படகை செலுத்தியவரான தமிழகன் ஆலிவர் நிக்கோலசை (46) கைது செய்துள்ளர்கள்.
கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழகன் மீது கோபமாக இருக்கிறீர்களா என்று கேட்டால், இல்லை, கோபப்படுவதால் என்ன பலன், அப்பா திரும்ப வந்துவிடுவாரா என்கிறார் ஜெய்சன்.