Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கேட்டதும் கண்டதும் | சிறுகதை | ஸிந்துஜா

கேட்டதும் கண்டதும் | சிறுகதை | ஸிந்துஜா

10 minutes read

கிழவரைப் பார்த்தால் அறுபது வயதுக்கு மேல் இராது என்பது போலத் தோன்றிற்று. வழக்கமான பிராமணார்த்தக்காரர்களைப் போல அவருக்கு ஏழு மாச கர்ப்பிணி வயிறோ, எழுந்திருக்கும் போதும் உட்காரும் போதும்  அப்பாடா, அம்மாடி என்று வெளிப்படும் பெருமூச்சோ இல்லை என்பதை நான் முதலிலேயே கவனித்து விட்டேன். ஐந்து ஐந்தேகால் அடி உயரத்தைக் கூன் விழாத முதுகு காண்பித்துக் கொடுத்தது.

நெற்றியில் பளீரென்று மூன்று வெள்ளை வரிகள், நடுவில் வட்டமான சந்தனப் பொட்டு, அதற்குள் அடங்கித் திகழ்ந்த குங்குமம், சற்று நெகிழ்ந்து காணப்பட்ட மார்பு. சின்ன வயசில் இரண்டு பாளங்களாய்க் கிண்ணென்று யார் கண்ணையும் கவர்ந்து இழுத்திருக்கும். வெளேரென்று பஞ்சகச்ச வேஷ்டி,  உலகு அளந்தவன்தன் மார்பின் உத்தரீயம் போல அவரதும் அரவணைத்துக் கொண்டு கிடந்தது.

காசிக்கு வந்திருந்தேன். இந்த வருஷம் என் தகப்பனாரின் சிரார்த்தத்தைக் காசியில் கொடுக்கலாம் என்று திடீரென்று ஒரு நாள் தோன்றி விட்டது வருஷத்தில் பல மாசங்களை உள் தேசத்திலும் வெளி நாட்டிலும் செலவழிக்கும் என் டாக்டர் நண்பர்தான் காசியில் யாரைத் தொடர்பு கொண்டு செய்யலாம் என்று உதவி செய்தார். சிரார்த்தம் செய்து வைக்கும் வாத்தியார் என்றால் ஐம்பது ஐம்பத்தைந்து வயது சாஸ்திரிகளாக இருப்பார் என்று நினைத்துக் கொண்டு வந்தவனை நேரில் வரவேற்ற கல்யாணம் வாத்தியாருக்கு முப்பத்தி ஐந்து வயதுதான் என்று தெரிந்து கொண்ட போது ஒரே ஆச்சர்யம். அவர்களது நூறு வருஷமாகக் காசியில் வசிக்கும் வைதீகக் குடும்பம் என்று சொன்னார்.

வைதீகக் காரியங்கள் முடிய மூன்றரை மணி நேரம் ஆயிற்று. பிராமணார்த்தத்துக்கு வந்த இரண்டு பேரில் என்னைக் கவர்நதது கிழவர்தான். அவர் பல இடங்களில் கல்யாணம் வாத்தியாருடன் சேர்ந்து சுலோகங்களை உச்சரித்து வந்தார். அவருக்கு எல்லாப் பத்ததியும் சரியாகத் தெரிந்திருந்தது. ஒவ்வொரு முறையும் நான் செய்யும் காரியத்தில் மாற்றம் வரும் போது சொல்லிக் கொடுத்தார். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், கல்யாணம் ஒவ்வொருவருக்கும் தட்டில் இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை வைத்துக் கொடுத்தார்.

கிழவர் நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்து எதிரே போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

“எவ்வளவு நாள் இங்கே தாமசம்? கயாக்குப் போறேளா?” என்று பேச்சை ஆரம்பித்தார்.

“நாளைக்கு மத்தியானம் மூணு மணிக்கு ஃபிளைட். எனக்கு மெட்றாஸ்தான். ஆனா பெங்களூர்லே கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு அங்கேர்ந்து மறுநாள் கிளம்பி மெட்றாஸ்க்குப் போயிடுவேன். கயா, பிரயாகை எல்லாம் அடுத்த ட்ரிப்புக்குன்னு வச்சாச்சு” என்றேன்.

“பூர்விகம்?”

“திருவையாறு.”

“அட. காவேரிக்கரையா?” என்று பூரிப்பு எகிறும் குரலில் சொன்னார். “அப்போல்லாம் வருஷா வருஷம் மார்கழி மாச ஆராதனைக்குப்  போயிடுவேன். ஜிலுஜிலுன்னு காத்து உடம்பை சொடக்குப் போட்டுக் கூப்பிடும். காவேரிலே இறங்கி நாலு முங்கு முங்கினாதான் அந்த சொடக்குக்கு நம்ம உடம்பு பதில் சொடக்குப் போட்டு என்ன ஒய்ன்னு கேக்கும். வள்ளுவன் சொன்னதை மாத்திக் காமிக்கிறேன் பாருன்னு நாள் பூரா நாத வர்ஷம், வயத்தைப் பத்திய ஞாபகமே இல்லாம அடிச்சிடும். ஹூம், அது ஒரு காலம்.”

அந்தக் குரலில் தொனித்த ஏக்கம் என்னைத் தொட்டது.

“ஆனா இங்கேதான் கங்கை இருக்கே?”

“ஆமாமா. இன்னிக்கு சாயரட்சை கங்கா ஆரத்தி போய்ப் பாருங்கோ. எங்கம்மா உங்களை வருடின்னா கொடுப்பா! குளிர்ச்சியும் கருணையும் எப்படி ஒரு ஜலத்தில் குடியிருக்க முடியும்னு உங்களை ஆச்சரியப்

படுத்திடுவா!”

அவர் கங்கையை ஓர் உயிருள்ள நடமாடும் பெண்ணாகப் பார்ப்பதைக் கேட்டு எனக்கு லேசாக உடம்பு சிலிர்த்தது.

“இங்கே வரதுக்கு முன்னாலே எங்கே இருந்தேள்?”

“திருச்சிலே ஜாகை. ரயில்வே ஆபீசில் அக்கவுண்டன்ட்டா குப்பை கொட்டிண்டு இருந்தேன். இல்லாத ஆஸ்திக்கு ஒரு பிள்ளை. இருந்த ஏகப்பட்ட ஆசைக்கு ஒரு பொண். அம்பத்தெட்டு வயசிலே ரிட்டையர் ஆனேன். பையனும் பொண்ணும்  படிச்சு வேலைக்குப் போயிண்டிருந்தா. சடசடன்னு ரெண்டு பேருக்கும் கல்யாணமாச்சு. ”

“அப்போ காசியிலே இருக்க ஆரமிச்சது…?”

“போன புரட்டாசிக்கு இருபது வருஷம் ஆயிடுத்து இங்கே பெரியவாளோட கிளம்பி வந்தேன். நானும் என் ஒய்ஃபுமா மோக்ஷம் கிடைக்கிற வரைக்கும்

னுட்டு இங்கேயே தங்கிட்டோம். கங்காவும் என்னை விட்டுட்டுப் போறதான்னு காலைப் பிடிச்சு இழுத்துக் கட்டிப் போட்டுட்டா. கங்கா என்னோட அம்மான்னா! அவளே என்னோட பாட்டி, கொள்ளுப் பாட்டி, பெரியம்மா, சித்தி, மாமி என் பொண்ணு, பேத்தி எல்லாம்தான். அஞ்சு வருஷம் முன்னாலே என் ஆத்துக்காரி போய்ச் சேர்ந்தா. மணிகர்ணிகா காட்லேதான் எரிச்சேன். உடம்பை அக்கினி தகதகன்னு சிவப்பா நக்கறதை நான் பாத்துண்டே இருக்கறச்சேயே என் ஒய்ப் வரட்டான்னு கேட்டுண்டே கங்கைக்குள்ள பாஞ்ச மாதிரி எனக்கு ஒரு சித்ரம்.  இப்பவும் மனசிலே நிக்கறது.”

“இருபது வருஷமா? அப்படின்னா உங்க வயசு?”

“இப்போ எனக்கு எழுபத்தெட்டு வயசாறது!”

பதினெட்டு வருஷத்தை உதறித் தள்ளிவிட்டு நிற்கும் உருவத்தை மறுபடியும் பார்த்தேன்.

என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. “எதுக்கு இங்கே தனியா கெடந்து மன்னாடிண்டு…?”

அவர் என்னை இடைமறித்து “பொறக்கறச்சே எப்படி வந்தோமோ அதே மாதரிதானே போகறச்சேயும் போகணும்.”

நான் இந்த வேதாந்தத்தை ஒப்புக் கொள்ள மறுத்தவனாய் என் தலையை அசைத்தேன்.

“சரி, சரி, சரி. உம்ம வழிக்கே வரேன். நான் பார்த்ததெல்லாம் நீர் பார்த்திருக்க மாட்டீர். பந்த பாசம்னு சினிமாக்குப் பேர் வச்சா, எல்லாம் போய்ப் பாத்துட்டு  ஆகாங்கும், ஒகோங்கும். ஆத்துக்கு வந்தா அத்தனையும் மறந்து போகும். பந்தத்தைப் பார்த்தா, பாசமில்லை, பாராமுகம்தான் வரும். பிள்ளை திருநெல்வேலியிலே இருக்கான். அவன் ஆத்துக்காரிக்குக் கல்டைக்குறிச்சி. அவன் அவாளோட ஐக்கியமாயிட்டான்.

என் ஆத்துக்காரிக்குப்  பிள்ளையைப் விட்டுக் கொடுக்க மனசில்லே. போய் ஒரு கை பார்த்துடறேன்னு போனா. உங்களுக்குத்தான் தெரியுமே. தஞ்சாவூருக்கும், திருநெல்வேலிக்கும் அவ்வளவா ஒத்துக்காதுன்னு. மாட்டுப் பொண் கொஞ்சம் மாடர்ன். தலையெல்லாம் விரிச்சுப் போட்டுண்டுதான் இருப்பா. போன அன்னிக்கி மறுநாள் என் பொண்டாட்டி அவ கிட்டே தலையை வாரிப் பின்னிக்கோயேன்னா  இப்போ சினிமாக்காரா எல்லாம் அப்பிடித்தான் இருக்கா ஸ்டெயிலான்னா. மாட்டுப்பொண்.  இவ அதை அப்படியே விட்டுருக்கணும். ஏன்னா தலைவிரி கோலத்திலே என் பொண்ணே நாட்டுப் பொண்ணு மாதிரிதான். அதுக்குப் பதிலா என் ஆத்துக்காரி ‘அன்னிக்கி ஒருத்தி தலையை விரிச்சுப் போட்டா. நாட்டுலே யுத்தமே வந்தது. இப்போ ஒவ்வொருத்தர் ஆத்துலேயும் பொம்மனாட்டி விரிச்சுப் போட்டுண்டு நிக்கறா.

புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் சண்டை. மாமியாருக்கும் மாட்டுப் பொண்ணுக்கும் சண்டை. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சண்டை’ன்னு சொல்லியிருக்கா. மாட்டுப் பொண் அதைக் காதிலேயே வாங்கிக்காம கோமதி மாமியாத்திலே அப்பளாக் கட்டு ரெடியாயிருக்கு, போய் வாங்கிண்டு வந்துடறேன்னு சொல்லிண்டே வாசப்படிக்கிப் போயிட்டா.  இந்தத் தலைவிரிச்சான் சமாச்சாரத்துக்கு அப்புறம் நாலு நாள் போயிருக்கும். அன்னிக்கி மாமியாரும் மாட்டுப் பொண்ணும்தான் ஆத்திலே. என் ஆத்துக்காரி மாட்டுப்பொண் கிட்டே கேட்டிருக்கா. ‘ஏண்டி பாரு, இதெல்லாம் உனக்கே நன்னாயிருக்கா?  லோகு எங்காத்துப் பக்கம் வரவே மாட்டேங்கிறானே’ன்னாளாம்  ‘என்னம்மா சொல்றேள்? நானா போகக் கூடாதுன்னு அவர்கிட்டே சொன்னேன்? வேலையும் தலைக்கு மேலே இப்போ ஆயிட்டதுன்னு  நேத்திக்குக் கூட சலிச்சுண்டார்.  ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் போறவே மாட்டேங்கறது. அம்மா ஊர்லேந்து வந்திருக்கா. அவளோட பத்து நிமிஷம் சிரிச்சுப் பேசக் கூட டயம் கிடைக்காம என்ன கண்ணறாவின்னு அலுத்துண்டார்ன்னு புருஷனுக்கு சப்போர்ட் வாங்கிண்டு வந்தா.

என் ஆத்துக்காரிக்குப் பத்திண்டு வந்துடுத்து. .எதுக்கு இந்த நாடகமெல்லாம்? உங்காத்துக் கல்யாணம், வளைகாப்பு, ஏன் குழந்தைக்கு காது குத்தறதுக்குன்னு கூட போறான், வரான். எங்களை வந்து பார்க்க அவனுக்கு வாய்க்கலையாக்கும். அதான் ஊரெல்லாம் பேசறதே, நீ உன் புருஷனை இடுப்புத் துணியில் முடிஞ்சு வச்சுண்டு இருக்கேன்னு, அந்தப் பைத்தாரக் கம்மனாட்டியும் அப்படி மாறிப் போயிட்டான்னு என் ஆத்துக்காரி கத்திண்டு இருக்கறச்சேயே, என் மாட்டுப் பொண் கட்டிண்டிருந்த புடவையை உருவிக் கீழே போட்டுட்டு ‘நன்னா பாத்துக்கோங்கோ  என் இடுப்பிலே உங்க பிள்ளையை  சொருகிண்டிருக்கேனான்’னு சொல்லி முறைச்சிருக்கா. என் பொண்டாட்டி ஆடிப் போயிட்டா.

புடவைத் தலைப்பாலே கண்ணையும் முகத்தையும் மூடிண்டு வெளியே ஓடி வந்தவ அன்னிக்கி சாயரட்சையே  மெட்ராசுக்குக் கிளம்பிட்டா. என் பிள்ளை கொச்சின்லே ஆடிட்னு கிளம்பிப் போயிருக்கான். என் ஆத்துக்காரி ட்ரெய்னலே வரச்சே அவன்கிட்டேயிருந்து போன். எடுக்க மாட்டேன்னுட்டா. ”

அவர் பேசுவதை நிறுத்தினார். நான் திடுக்கிட்டு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“சரி, பொண் லக்ஷணம் கேக்கறீரா?”

“அவ எங்கே இருக்கா?” என்று கேட்டேன்.

“அவ உங்க ஊர்லேதான் இருக்கா. அவ கிட்டே போனா ஒரு மாசம் இருக்கலாம் ரெண்டு மாசம் இருக்கலாம். சரி, இன்னும் கொஞ்ச காலம்னா இன்னும் ஒரு ஆறு மாசம் இருக்கலாம். அப்புறம்?”

அவர் பேசட்டும் என்று காத்திருந்தேன்.

“நான் ஒரு வருஷம் இங்கேர்ந்து கிளம்பி அவாத்துக்குப் போனேன். மாப்பிள்ளை ஜெர்மனிலேர்ந்து ஒரு மாசம் லீவில் வந்திருந்தான்.  ஒய்ஃபையும் பொண் குழந்தையையும் இங்கே விட்டுட்டு அவன் மட்டும்தான் அங்கே தங்கியிருக்கான். ஏற்கனவே அவனோட அம்மா அந்த ஆத்திலேதான் வந்து இருக்கா. அவ ஆத்துக்காரர் போய் மூணு வருஷமாச்சு. போனேன். அங்கே இருந்த சமயம் பூரா தினமும் அவனைப் பாப்பேன். சிரிப்பேன்,. அவனும் பாத்துப் பதிலுக்கு ஒரு சிரிப்பை வீசுவான், அவ்வளவுதான் சுமுக உறவு எல்லாம். இவ்வளவுக்கும் ஆபீஸ்லே பம்மிண்டு அவன்கள் காலால் இட்டதைத் தலையால் செய்யற சுபாவம். நம்மகிட்டே வரச்சே மாத்திரம் அவனுக்கு என்னமோ தன்னோட கால் பூமிக்கு இரண்டடி மேலே இருக்கறாப்பிலே நினைப்பு, யுதிஷ்டிரனுக்குத் தம்பின்னு.

பணம் சம்பாதிக்கிறான் கை கால் பை கொள்ளாம. அதுக்காக? கெடியாரத்திலே  ஆறுலேந்து பன்னெண்டுக்குப் போனா உச்சிலே இருக்கோம்னு பெருமையும் சந்தோஷமும் கர்வமும் வரும், ஆட்டம் போட வைக்கும். ஆனா அப்புறமா பன்னெண்டுலேந்து ஆறுக்கு கீழே இறங்கியே ஆகணுங்கறதை மறந்துட்டு ஆட்டம் போட்டு என்ன பிரயோஜனம்?” என்றார்.

அவர் தன் மன வருத்தத்தை எல்லாம் கொட்டித் தீர்க்கிறார் என்று நான் நினைத்தேன். அவரைப் பார்த்து எனக்குப் பரிதாபம் ஏற்பட்டது. ஆனால் அவர் தன் விஷயங்களைச் சொல்லும் போது தெறித்த உறுதியும், முக பாவனைகளும் என் உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ள முடியாதபடி செய்தன.

“அப்ப இங்கே வந்தப்பறம் அந்தப் பக்கம் எட்டியே பாக்கலையா?”

அவர் இல்லை என்று தலையை அசைத்தார். பின்னர் “என் ஆத்துக்காரி தவறினப்போ மட்டும்  பிள்ளையும் பொண்ணும் அவாவா ஜோடியோட சேந்து வந்தா.”

“மனுஷாளைப் புரிஞ்சுக்கவே முடியாது போலிருக்கே!” என்றேன் அவரைச் சமாதானப்படுத்தும்  முகமாய்.

“ஆமா. புரிஞ்சுக்கறதுங்கறது  ஒரு தவம். சரியான வார்த்தை. ஆனா அது கொஞ்சம் கஷ்டமான வழி கூட. பாருங்கோ, இன்னிக்கி நீங்க இவ்ளோ தூரம் வந்து சிரார்த்தம் பண்ணியிருக்கேள். வாத்தியார் சொன்ன மந்த்ரங்களுக்கு உங்களுக்கு அர்த்தம் தெரிஞ்சதோ? சிரத்தையாப் பண்றேன், அது போதும்னு ஆயிடறது” என்றார்.

கடைசியில் கிழவர் தன் கத்தியை உருவி என் கழுத்திலேயே வைக்கிறாரே என்று ஒரு நொடி மனதில் புகைச்சலை ஏற்படுத்தியது.

அப்போது சமையல்காரரின் பையன் போஜன இலையை எடுத்து வந்து வைத்தான்.

கிழவர் “நாழியாயிடுத்து. பேசிண்டே இருந்ததுலே. அப்ப நான் உத்தரவு வாங்கிக்கட்டுமா?” என்று எழுந்தார்.

“ஜாகை எங்கே? பக்கத்திலேதானா?”

“அடுத்த ரோட்லே. பாரதியார் இருந்த வீடுன்னு போர்டு போட்டிருக்கும். அதுக்கு நாலாந் தள்ளி”

“தனியா இருக்கேளே. சமையல் எல்லாம்?”

“சுயபாகம்தான்” என்று சிரித்தார். “அந்த வீட்டுக்குப் பெரியவா வந்தா. அப்போ வீட்டுக்காரரோட பரிச்சயம். பெரிய காம்பவுண்டு  உள்ளே நாலஞ்சு வீடுகள்.  ஒரு ரூம், சின்ன கிச்சன், அதை விடச்  சின்ன பாத்ரூம்ன்னு வீடு. வாடகைன்னு நானா கொடுக்கறதுதான். கொடுக்காட்டாலும் கேக்க மாட்டார். அப்படி ஒரு மனுஷன். “வாடகையை விட்டா ஒத்தக்கட்டைக்கு வேறே என்ன பெரிய செலவு?  சாப்பாடுதான்.  மாசா மாசம் பென்ஷன் வரது. இங்கே மாசத்திலே பதினஞ்சு நாள் தக்ஷணையோட சாப்பாடும் கிடைச்சுடும். பாத்தேளா, தக்ஷனைன்னதும்தான் ஞாபகம் வரது. ஐநூறு ரூபாயை வாத்தியாருக்கு வாபஸ் கொடுக்கணும்” என்றபடி கையிலிருந்த பர்ஸைத் திறந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்தார்.

“வாபஸ்ஸா? கல்யாணம் வாத்தியாருக்கா?”

“ஆமா. தக்ஷணைக்கு வக்யரதிலே பாதியைத் திருப்பிடணும்” என்று பர்ஸை மூடிக் கைப்பைக்குள் வைத்தார். .

“அடக் கடவுளே! அப்ப ஆபீஸோ கிருஹமோ, பம்மிண்டுதான் போகணும்னு சொல்லுங்கோ,” என்றேன். புகைச்சல் அடங்கிக் கீழே போவது போல இருந்தது.

கிழவர் சில வினாடிகள் என்னை உற்றுப் பார்த்தார். பிறகு “பேஷ், பேஷ்” என்று சொல்லிக் கொண்டே  வெளி வாசலைப் பார்க்க நடந்தார். சட்டென்று நின்று “நாளைக்கும் வருவேன், ஒரு பிராமணார்த்தம் இருக்கு. முடிஞ்சாப் பாக்கலாம். உங்க நம்பரைக் கொடுங்கோ” என்றார்.

நான் அவர் நம்பரைக் கேட்டபடி என் போனிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தேன்.

அவர் கிளம்பிச் சென்ற பின் நான் சாப்பிட உட்கார்ந்தேன். கிழவரின் சந்திப்பும் பேச்சும் எப்படி இருந்தது என்று பிரமித்தபடி  சாப்பிட்டு விட்டு எழுந்தேன் .

அப்போது கல்யாணம் வாத்தியார் உள்ளே வந்தார். “சாப்பிட்டேளா? வயித்துக்கு ஈயப்படறதுக்கு மின்னாலே பெரிய பிரவசனம் நடந்திருக்குமே!” என்று சிரித்தார்.

நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“யாராவது மாட்டிண்டா இது நடக்கறதுதான்.”

“ஆனா பரிதாபத்தை ஏற்படுத்தற மாதிரி சொல்லலியே” என்றேன்.

“கிழவர் மனசு இரும்புக் குண்டு. பாறாங்கல், ஆழ்கடல்ன்னு நீங்க என்ன உபமானம் தேடினாலும் அதை மீறி நிக்கும். அவருக்குப் பரிதாபம் ஒண்ணும்  வேண்டாம். ஆனா உங்களுக்கு அது உண்டானா அதைப் பத்தி அவருக்குக் கவலை இல்லை ” என்றார் கல்யாணம்.

அவர் இன்னும் ஏதோ சொல்வது போல இருந்தார்.

“பிள்ளை, பொண்டாட்டி ஆத்துக்காராளோட அர்த்தநாரீஸ்வரம்னு ஆயிட்டான்னு சொல்லியிருப்பாரே, அவன் ஆரம்பத்திலே மெட்றாஸ்லேதான் ஆபீஸ் போட்டானாம்.. ஒண்ணும் சரியா வரலே. அப்படி ஒரு காம்படீஷன். திருச்சி மதுரைன்னு அலசிப் பார்த்தான். கடைசியிலே திருநெல்வேலியில் ஆபீஸ் போட்டா சுத்து வட்டாரம் நாகர்கோயில் வரை போயி அப்படியே கேராளாவுக்குள்ளேயும் போகச் சான்ஸ் இருந்ததுன்னு கிளம்பினான். இப்ப கொழிக்கறான். மெட்றாஸ்லே ஆபீஸ் போட்டிருந்தா பத்தோட பதினொண்ணுன்னு முக்கி முனகிண்டு இருந்திருப்பேன்னான். அவனோட அம்மா காரியம் பண்ண இங்கே வந்தானோல்லியோ, அப்ப பேச்சு வாக்கிலே இதைச்  சொன்னான்” என்றார் கல்யாணம்.

“மாப்பிள்ளை மேலேதான் அவருக்கு ரொம்பக் குறை” என்றேன் நான்.

“அவனும் பாவம்தான். அவன் கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரியா இருந்தாலும் பரவாயில்லேன்னு ஜெர்மனிக்குப் போனான். ஒரே பொண் குழந்தை. அதைப்  பந்ததியோட வளக்கணும். பாட்டு, டான்ஸ், நம்ம பழக்க வழக்கங்கள் எல்லாம் கத்துண்டு அது நன்னா வரணும்னு நினைச்சுன்னா அவன் ஃபாரினுக்குப் போனான். இதையும் அவன்தான் மாமியார் காரியத்துக்கு இங்கே வந்தப்போ சொல்லிண்டிருந்தான்” என்றார் கல்யாணம். அவர் சென்ற பின்னும் என் மனதில் படிந்திருந்த ஒரே கேள்வி கிழவர் என்பவர் யார்!

அடுத்த நாள் காலையில் இருந்த திட்டப்படி காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்மன், அன்னபூரணி அம்மன் , காலபைரவர்  தொந்தி கணபதி  ஆகியோரை அவரவர் இல்லங்களில் தரிசித்து விட்டுத்  தங்குமிடத்துக்கு வந்த போது பத்து மணி இருக்கும். வாசலில் கிழவர் எதிர்ப்பட்டார்.

“உமக்காகத்தான் ஓய் வெயிட்டிங்” என்றார்.

“எனக்காகவா? என்ன விசேஷம்?”

“நீர் எனக்கு ஒரு உபகாரம் பண்ணனும்” என்றபடி கையிலிருந்த பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். அதை பிரித்துக் காண்பித்தார். உள்ளேயிருந்ததை எடுத்து “பாருங்கோ” என்று என் கையில் கொடுத்தார். சிறிய அழகான இரண்டு தாமிரச் சிலைகள். ஒன்று காசி விஸ்வநாதர். இன்னொன்று விசாலாக்ஷி அம்மன். நல்ல கனத்துடன் இருந்ததால் அவை பழைய நாட்களில் கலப்படமற்ற உலோகத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

“எங்க வீட்டுக்காரர்ன்னு சொன்னேன் இல்லியா? அவர்தான் பெரியவாளுக்கும் கூட வந்தவாளுக்கும் கொடுக்கணும்னு செஞ்சு வச்சிருந்து கொடுத்தது. இருபது வருஷச் சொத்து. இவ்வளவு நாள் தினப்படி தேய்த்து அலம்பி பூ போட்டு அலங்காரம் பண்ணி பூஜை பண்ணிண்டு இருந்தேன். இப்பதான் ஒரு மாசமா நமக்கோ எப்போ  வேணும்னாலும் வேளை வந்து தீண்டிடும்ன்னு தோணிண்டே இருக்கு. அதனாலே என் பொண்ணும் பையனும் ஆளுக்கு ஒண்ணா வச்சுக்கட்டும்னு நினைச்சேன். நீங்க நேத்திக்கு மெட்றாசுக்குப் போறேள்னதும் உங்க கிட்டே கொடுத்துட்டா என்னன்னு தோணினது. இதை எடுத்துண்டு போறதிலே  உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லியே” என்றார்.

முதல் தடவையாக லேசாக நடுங்கும் அவர் குரலைக் கவனித்தேன்.

“இதிலே என்ன பிராப்ளம்? பேஷா கொண்டு போய்க் கொடுத்தா ஆச்சு” என்றேன்

“கவர் மேலேயே என் பொண்ணாத்து அட்ரஸ் இருக்கு” என்றார். பார்த்தேன். நான் மந்தைவெளி. அவள் மைலாப்பூர்.

“நான் இருக்கற இடத்துக்குப் பக்கத்திலேதான் அவா இருக்கா. நானே கொண்டு போய்க் கொடுக்கறேன்” என்று சிலைகளைக் கவரில் போட்டு வாங்கிக் கொண்டேன்.

“உங்களுக்கு எதுக்கு அவ்வளோ சிரமம். உங்க நம்பரை அவள் கிட்டே தரேன். அவ வந்து வாங்கிண்டு போவா.”

“நான் அவாத்துக்குப் போயி ஒரு கப் காப்பி சாப்பிட்டுப் பாக்கறேனே ” என்றேன். அவர் வாய் கொள்ளாமல் சிரித்து “நிச்சயமா. ரொம்ப சந்தோஷம். ரொம்ப நன்றி” என்றார்.

நான் ஊருக்குத் திரும்பி இரண்டு நாள் கழித்து ஞாயிற்றுக் கிழமை வந்தது. நான் கிழவரின் பெண்ணுக்குப் போன் பண்ணி இன்னும் அரை மணியில் வருகிறேன் என்றேன். அவளும் கிழவர் அவளிடம் பேசியதாகச் சொல்லி வாருங்கள் என்றாள்.

அவர்கள் வீடு மாதவப் பெருமாள் கோயில் தெருவில் இருந்தது.  நான் சென்ற வீட்டு வாசலில் நின்று அழைப்பு மணியை அடித்தேன். கதவைத் திறந்த பெண் கிழவரின் பெண்ணாக இருக்க வேண்டும் என்று முகஜாடை தெரிவித்தது. நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.

“உள்ளே வாருங்கள்” என்று ஆங்கிலத்தில் அழைத்தபடி உள்ளே சென்றாள். சற்றுப் பெரிதான வீடு. அழகாக வைத்திருந்தார்கள் என்பதை வரவேற்பறை தெரிவித்தது. அங்கு ஒரு சோபாவில் உட்கார்ந்திருந்த சற்று வயதான அம்மாள் என்னைப் பார்த்து “வாங்கோ” என்றபடி எழ ஆரம்பித்தாள்.

“நீங்க உக்காருங்கோ” என்று அவளிடம் சொல்லி விட்டு நான் உட்கார்ந்ததும் கிழவரின் பெண்ணும் என் எதிரில் உட்கார்ந்து கொண்டாள். அவளுடைய தகப்பனரைப் பற்றி விசாரித்தாள்.  நான் அவளிடம் கிழவர் கொடுத்த கவரைக் கொடுத்தேன். அதை பிரித்துப் பார்த்து விட்டு “லவ்லி” என்று சிலைகளைக் கையில் எடுத்துக் கொண்டாள். தன்  மாமியாரை அறிமுகப்படுத்தினாள்

“அம்மா, இதைப் பாருங்கோ. எவ்வளவு அழகா கனமா இருக்கு! சுவாமியையும் அம்மனையும் நேரேயே தரிசனம் பண்றாப்பிலே!” என்றாள்.

பெரியவள் அவற்றைப் பார்த்து விட்டு “யாரானும் இதை இருபது வருஷமா எடுத்துப் புழங்கிண்டு இருந்ததுன்னு சொன்னா நம்ப மாட்டா. ஏதோ நேத்திக்கு வாங்கின மாதிரின்னா உங்கப்பா பளபளன்னு வச்சிருக்கார்” என்று மாட்டுப் பெண்ணிடம் கொடுத்தாள்.

அப்போது  வீட்டின் உள்ளேயிருந்து “ராஜி!” என்று கூப்பிட்டுக் கொண்டே ஒரு பெண் வந்தாள். அயலானைப் பார்த்ததும் திகைத்து நின்றாள்.

“மன்னி, அப்பா சொன்னாரே, காசியிலே பாத்து ஒருத்தர்கிட்டே பார்சல் கொடுத்து அனுப்பறேன்னு. அது இவர்தான். பாவம் எடுத்துண்டு வந்திருக்கார்” என்றவள் என் பக்கம் திரும்பி “இது என் மன்னி, பார்வதி.  திருநெல்வேலியிலே  இருக்கா, நாளைக்கு ஒரு கல்யாணம்னு வந்திருக்கா” என்று அறிமுகம் செய்வித்தாள். அவளிடம் தன்னிடமிருந்த சிலைகளைக் காண்பித்து “ரொம்ப அழகாயிருக்கில்லே . இதுலே ஒண்ணு உங்காத்துக்குன்னு அப்பா சொன்னாரே. நீயே இங்கே வந்துட்டியே!” என்று சிரித்தாள். அவள் வாங்கிப் பார்த்து விட்டு “என்ன லக்ஷணம்! என்ன தேஜஸ் மொகத்திலே!” என்றாள்.

“ஒரு நிமிஷம், இதைப் பூஜா ரூம்லே வச்சிட்டு வந்துடறேன்” என்று கிழவரின் பெண் எழுந்து உள்ளே சென்றாள். அவள் மன்னியும் “காப்பி போட்டு எடுத்துண்டு வரேன்” என்று அவளைப் பின் தொடர்ந்து சென்றாள்.

என் பார்வை அவர்களைத் தொடர்ந்தது. கிழவரின் பெண் தலையில் கொண்டை போட்டு அதைச் சுற்றி அழகாக மல்லிகைப் பூ வைத்துக் கொண்டிருந்தாள். அவள் மன்னியின் இறுக்கமாய்ப் பின்னிய தலை மயிர் நீண்ட ஜடையாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

 

– ஸிந்துஜா

 

நன்றி : சொல்வனம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More