கி.பி.17-ஆம் நூற்றாண்டிலிருந்து வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் வளங்களால் ஈர்க்கப்பட்டு, இங்கிருந்த குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியமைக்க எத்தனித்தனர்.
வெள்ளையர்களுக்கு எதிராக விடுதலை வேட்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமறவர்களுள் முன்னோடியாகத் திகழ்ந்தவர் தீரன் சின்னமலை. இளம்பருவத்திலேயே, சிலம்பப் பயிற்சி, தடிவீச்சு, வாள்வீச்சு, புலிப்பாய்ச்சு, மற்போர் முதலியவைகளில் சிறந்து விளங்கியவர்.
கொங்குநாடு மைசூர் உடையார்களின் ஆதிக்கத்திலிருந்த காலமது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரி வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் சங்ககிரிக் கோட்டைக்கு வந்து, அங்கிருந்து சீரங்கப்பட்டினம் ஐதர் அலியின் கருவூலத்திற்குச் சென்று சேரும். சின்னமலை வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் ஐதர் அலியின் ஆட்கள் வரிப்பணம் வசூல் செய்து கொண்டு போவதைக் கண்டு வெகுண்டெழுந்து, அதனைத் திரும்பப் பெற்று வந்து ஏழை எளியோருக்குப் பிரித்துக் கொடுத்துவிடுகிறான். இப்படி பலமுறை நடந்தது.
ஐதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்பு கர்நாடகத்தின் தலைமைப் பொறுப்பேற்று ஆங்கிலேயருக்கு எதிரான போரை தீவிரப்படுத்தினார். திப்புவின் படையில் சேர கொங்கு வீரர்கள் அழைக்கப்பட்டனர். சின்னமலையின் ஆற்றல் மைசூர் முழுவதும் பரவியிருந்தது.
சின்னமலையின் ஊக்குவிப்பினால் கொங்கு வீரர்கள் பலரும் திப்புவின் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். 1799-இல் நடந்த நான்காம் மைசூர் போரின்போது, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டினம் ஆகிய போர் முனைகளில் சின்னமலையின் கொங்குப்படை திப்புவிற்காகச் சிறப்பாகப் போரிட்டன. குறிப்பாக மழவல்லியில் 40,000 வீரர்களுடன் நடந்தப் போர் ஆங்கிலேயருக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. எனினும் திப்புவின் மைசூர் ஆங்கிலேயரின் உடமையானது.
திப்புவின் வீழ்ச்சிக்குப் பின்னர் கோவை மண்டலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் கோவைக்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதி மட்டும் சின்னமலையின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயர் அதைத் தன்வசமாக்க விரும்பினர். மருது சகோதரர்களும், கொங்கு தலைவர்களும் சேர்ந்து சின்னமலையின் தலைமையில் போராட எடுத்த முயற்சியே கோவைப் புரட்சி என்றானது.
பணத்தாசை பிடித்த சமையல்காரன் நல்லப்பன் இம்மாவீரனை காட்டிக் கொடுத்துவிட்டான். கொங்கு நாடே கதறியழ, பீரங்கிகள் புடை சூழ, சின்னமலையும், சகோதரர்களும் சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சங்ககிரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பத்து வாயில்களும் மூடப்பட்டு, தமிழ் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
மலையின் உச்சியில், பொழுதுகாண்பாழிக்குக் கிழக்கில், ஆலமரத்தின் வடக்கே தயாராக இருந்த நான்கு தூக்கு மரங்கள், சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வரும் மேடையேற்றப்பட்டனர். சின்னமலையின் கண் சைகையை உணர்ந்து விலகினர் தூக்கிலிடும் ஆட்கள். வீரமறவர்கள் நால்வரும் தங்கள் கழுத்தில் தூக்குக் கயிற்றை தாங்களே மாட்டிக் கொண்டனர்.
கொங்கு நாட்டு சுதந்திரச் சுடர் அந்த வினாடி அழிந்தது.
பவளசங்கரி | எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்