கனடாவைப் போன்ற முடிவை இந்தியாவும் எடுக்கவேண்டும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து கனடாவைப் போன்ற முடிவை இந்தியாவும் எடுக்கவேண்டும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து

“இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதில்லை என சுயநலத்தைக் கருத்தில் கொள்ளாமல் கொள்கையின் அடிப்படையில் கனடா எடுத்துள்ள தீர்மானத்தைப் போன்று இந்தியாவும் எடுக்கவேண்டும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உணர்வுகள் உள்ளிட்ட எல்லாக் காரணிகளையும் கருத்தில்கொண்டே இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் முடிவெடுப்பேன் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். அதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கனடா பங்கேற்காது என்று அந்த நாட்டுப் பிரதமர் கடந்தவாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். வெளிநாட்டுப் பிரதமர்களின் இந்தக் கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றுத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது: இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதில்லை என சுயநலத்தைக் கருத்தில் கொள்ளாமல் கொள்கையின் அடிப்படையில் கனடா எடுத்துள்ள தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. இதைப் போன்று இந்தியாவும் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும். மனித உரிமைகள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் கனடா தனிச்சிறப்பைக்கொண்டது. கடந்த காலங்களில் இவ்வாறான நல்ல தீர்மானங்களைக் கனடா எடுத்துள்ளதை நாம் மறக்கக்கூடாது. பொதுநலவாயத்தின் அடிப்படைக் கொள்கைகளை இலங்கை மீறி இருக்கின்ற படியால்தான் கொழும்பில் இடம்பெறும் மாநாட்டில் கனடா பங்குபற்றமாட்டாது என்று அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். உண்மையில் பொதுநலவாயத்தின் அடிப்படைக் கொள்கைகளை இலங்கை அரசு அப்பட்டமாக மீறி இருக்கின்றது. இதில் எந்தவிதமான சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் இடமில்லை. இதேவேளை, பொதுநலவாய அமைப்பில் உள்ள நாடுகள் ஏனைய நாடுகளும் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பங்குபற்றுவதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றன.

இலங்கை அரசு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமையால்தான் இலங்கை தொடர்பில் வெளிநாடுகள் தீர்மானங்களை எடுக்கின்றபோது தீவிரமாக ஆராய்கின்றன. இவ்வாறு சர்வதேச அரங்கில் அவமானப்பட்டுக்கொண்டிருக்கின்றது இலங்கை அரசு. இந்நிலையில், இலங்கையில் பொதுநலவாய உச்சி மாநாடு தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது – என்றார்.

ஆசிரியர்