December 7, 2023 8:59 am

நிலவில் இன்று தரையிறங்குகிறது “சந்திரயான்-3”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கடந்த 2008-ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் அது உறுதிசெய்தது.

அதன்பிறகு, 2019-ம் ஆண்டு நிலவின் தென்துருவத்துக்கு ‘சந்திரயான்-2’ விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால் அதன் ‘லேண்டர்’ கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது.

ஆனால் ‘சந்திரயான்-2’-ல் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ கருவி தற்போதும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை தந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் திகதி ‘சந்திரயான்-3’ விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.

ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது.

பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது.

இந்த ‘லேண்டர்’, இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது.

‘லேண்டர்’ கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கினால், விண்வெளி ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தை பெறும். நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் படைக்கும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்