தமிழ் தேசிய இலக்கியங்களுக்கு வீழ்ச்சி இல்லை: விரிவுரையாளர் தி. செல்வமனேகாரன்

தி. செல்வமனோகரன், ஈழத் தமிழ் இலக்கியத்தின் விமர்சகர். பழந்தமிழ் இலக்கியத்தில் மாத்திரமின்றி நவீன இலக்கியத்திலும் மிகவும் நுண்மையான பார்வையைக் கொண்டவர். தமிழ் தேசிய ஈடுபாடு மிகுந்த தி. செல்வமனோகரன், துண்டி என்ற கலை இலக்கிய இதழின் ஆசிரியருமாவார்.  கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமை புரிந்த இவர், தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக்த்தில் விரிவுரையாளராக  பணிபுரிகின்றார்.  

தூண்டி கலை இலக்கிய வட்டத்தின் மூலம் பல்வேறு ஆய்வரங்குகளை நடாத்திய இவர், எஸ். பொ. எனப்படும் எஸ். பொன்னுத்துரை மற்றும் முத. தளையசிங்கம் தொடர்பில் முன்வைத்த ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. தமிழர்களின் பண்பாடு, அடையாளம் சார் ஆய்வுகளில் ஈடுபட்டும், ஊக்குவித்தும் வருபவர். 

விமர்சனச் செயற்பாடுகளுடன், பதிப்பு முயற்சிகளும் இவரது மற்றுமொரு முக்கிய பணியாகும். பழந்தமிழ் இலக்கியங்களை தேடிப் பதிப்பித்தும் வருகின்றார். “காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்” , “சொற்களால் அமையும் உலகு” “தமிழில் மெய்யியல்” என்பன இவரது நூல்களாகும். உரிமை பத்திரிகைக்கு செல்வமனோகரன் வழங்கிய நேர்காணல் இது

தி. செல்வமனோகரன், ஈழத் தமிழ் இலக்கியத்தின் விமர்சகர். பழந்தமிழ் இலக்கியத்தில் மாத்திரமின்றி நவீன இலக்கியத்திலும் மிகவும் நுண்மையான பார்வையைக் கொண்டவர். தமிழ் தேசிய ஈடுபாடு மிகுந்த தி. செல்வமனோகரன், துண்டி என்ற கலை இலக்கிய இதழின் ஆசிரியருமாவார்.  கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமை புரிந்த இவர், தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக்த்தில் விரிவுரையாளராக  பணிபுரிகின்றார்.

தூண்டி கலை இலக்கிய வட்டத்தின் மூலம் பல்வேறு ஆய்வரங்குகளை நடாத்திய இவர், எஸ். பொ. எனப்படும் எஸ். பொன்னுத்துரை மற்றும் முத. தளையசிங்கம் தொடர்பில் முன்வைத்த ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. தமிழர்களின் பண்பாடு, அடையாளம் சார் ஆய்வுகளில் ஈடுபட்டும், ஊக்குவித்தும் வருபவர்.

விமர்சனச் செயற்பாடுகளுடன், பதிப்பு முயற்சிகளும் இவரது மற்றுமொரு முக்கிய பணியாகும். பழந்தமிழ் இலக்கியங்களை தேடிப் பதிப்பித்தும் வருகின்றார். “காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்” , “சொற்களால் அமையும் உலகு” “தமிழில் மெய்யியல்” என்பன இவரது நூல்களாகும். செல்வமனோகரன் வழங்கிய நேர்காணல் இது. 

உங்களைப் பற்றிய சிறிய அறிமுகத்தைத் தாருங்கள். 

எனது வீட்டில் யாவரும் நல்ல வாசகர்கள் என்பதால் சிறுவயது முதலே தீவிர எழுத்துக்களில் பரிச்சயமேற்பட்டது. நான் கற்ற பாடசாலைகள், கற்பித்த ஆசிரியர்கள், பண்டித மரபுக் கல்வி, 1994இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலக்கிய ஆய்வரங்கினூடாக நவீன இலக்கியகாரர்களுடன் ஏற்பட்ட ஊடாட்டம் என்பன எம்மை இலக்கியத்தின் பாற்படுத்தின. பத்தொன்பது வயதில் தூண்டி எனும் சஞ்சிகையை நடத்தினேன். ஈழத்தின் அடையாளத்தைப் புலப்படுத்தும் ஆய்வரங்குகள் பலவற்றை நடத்தி வருகின்றேன். கலை இலக்கியத்தோடு தத்துவத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. அ.யேசுராசா, சோ.கிருஷ்ணராஜா போன்றவர்களுடனான நட்பு மார்க்சியத்திலும் ஈடுபாட்டைத் தந்தது. தமிழ்த் தேசிய உணர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வழி வந்தது.

image.png

இந்து நாரிகத்துறை விரிவுரையாளராக இருந்து கொண்டு தமிழ் இலக்கிய விமர்சனத் துறையிலும் ஈடுபடுவது எத்தகைய அனுபவம்?

விஞ்ஞானம் கற்கக் கூடிய வாய்ப்பிருந்தும் தமிழ் கற்பதற்காகவே கலைத்துறையை தெரிவு செய்தேன். பல்கலைக்கழகம் செல்வதற்கு முன்பே பண்டித கற்கை நெறியையும் பூர்த்தி செய்திருந்தேன். ஆயினும் சில முரண்பாடுகளால் முதலாம் வருடத்துடன் தமிழ்க் கற்கையை கைவிட்டுவிட்டு இந்து நாகரிகத்துறையில் இந்து மெய்யியல் சிறப்புக்கலையை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. நவீன இலக்கியம், மெய்யியலுடன் இயைந்தது தானே. மார்க்சியம், இருத்திலியம், யதார்த்தவாதம், அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் என இலக்கியக்காரர்கள் கொள்கை வகுப்பது தத்துவத்தளத்தில் தானே. நான் தத்துவத்தளத்தில் நின்று இலக்கிய விமர்சனம் பேசுகிறேன் அவ்வளவு தான். அதேவேளை இந்து தத்துவத்துறை சார்ந்தவர் இலக்கிய விமர்சனம் செய்வதா? என விமர்சிப்போரும் உண்டு. முருகையனும் சிவசேகரனும் தமிழ்த்துறை சார்ந்தவர்களல்லவே.

தற்காலத்தில் ஈழத்தின் தமிழ் விமர்சனப் போக்கு எப்படி இருக்கிறது?

சமகால ஈழத்து இலக்கிய விமர்சனம் ஆரோக்கியமானதாக இல்லை. அ.யேசுராசா, நுஃமான், சிவசேகரம் போன்ற சிலர் ஆங்காங்கே விமர்சனங்களை முன் வைத்தாலும் அவர்கள் எழுதுவது குறைந்து விட்டது. தற்போதைய பெரும்பாலான விமர்சனங்கள் பக்கச்சார்புடையன@ சந்தர்ப்பவாத குரல்களாக உள்ளன. தரவுகளின் கோவையாக உள்ளன. கோட்பாட்டு ரீதியான – பன்முகத் தன்மை வாய்ந்த விமர்சனம் என்பது காணாமற் போய்க் கொண்டிருக்கின்றது. புதிய தலைமுறைசார்ந்து நம்பிகை தரும் விமர்சகர்கள் எழவில்லை என்பது எமது துரதிஷ்டம்.

அண்மைக்கால ஈழக் கவிதைகள் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் தமக்கான தனித்துவத்தை உடையவை. தொண்ணூறுகளில் வந்த அஸ்வக்கோஷ், பா.அகிலன் தொடங்கி சித்தாந்தன், தானாவிஷ்ணு, முல்லைக்கமல், போராளிக் கவிஞர்கள் என நீளும் பட்டியல் யுத்தத்தின் வாழ்வியலை மிகுந்த கவித்துவத்தோடு தருகின்றனர். பஹீமாஜகான், மனோகரி, அனார் போன்ற பெண் கவிஞர்கள் தமது தளத்திலான புதிய பரிமாணத்தைக் காட்டுகின்றனர். புதிய நூற்றாண்டுகளில் தீபச்செல்வன், ஆமிரபாலி, கிரிஷாந், பிரியாந்தி போன்றவர்கள் ஆரோக்கியமாக எழுதத் தலைப்பட்டுள்ளனர். அதேவேளை கடந்த பத்து வருடங்களுள் ஒப்பீட்டு ரீதியில் ஆரோக்கியமற்ற, மலினமான ‘கவிதைகள்” எனும் பெயரில் எண்ணுக்கணக்கான நூல் தோற்றம் பெற்றுள்ளன. அவர்கள் மாறிமாறித் தமக்குத்தாமே ‘கவிச்சக்கரவர்த்தி” பட்டத்தைச் சூட்டிக்கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. ஒருமை, பன்மை போன்ற பல்வேறு மொழிச்சிக்கல்களோடு வரும் கவிதைகள் தவறற்றவை எனச் ‘சில மகா கவிஞர்களும் சில விமர்சகர்களும்’ வாதிடுகின்றனர். வாழ்ந்து போமின்!

image.png

நிறைய நாவல் வெளியீடுகளில் பேசுகிறீர்கள். தமிழ்த் தேசிய நாவல்கள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள். உண்மையில் ஈழத்தில் நாவல்துறை ஆரோக்கியமாக நகர்கிறதா?

வென்றவன் எழுதியதே இலக்கியம் என்ற மரபு ரீதியான வாய்பாடு உடைபட்டு யுத்தம் தின்ற வாழ்வின்பின் நவீன தொடர்பாடற் சூழலின்வழி நாவல்கள் பல எக்காலத்தும் இல்லாதவாறு உருவாகி வருகின்றன. ஒடுக்கப்பட்ட இனத்தின் வாழ்வியல் துயரத்தை யோகேந்திரநாதன், தீபச்செல்வன், வெற்றிச்செல்வி, குணாகவியழகன், தாமரைச்செல்வி போன்ற பலர் எழுதி வருகின்றனர். அதேவேளை இதனைக் கொச்சைப்படுத்தி தன் மன வடுக்களின் வழி ஷோபாசக்தி போன்றோர் எழுதுகின்றனர். ஈழத்து தமிழ் நாவலாசிரியர்களுள் ஷோபாசக்திக்கு தனியிடமுண்டு. அவரின் மொழி, நாவல் கட்டமைப்பு, வெளிப்பாட்டு முறை என்பன தனித்துவமான சிறப்பு வாய்ந்தவை. ஆனால் கருத்துநிலை ‘நோயிலிருத்தலின்” வெளிப்பாடு. குணாகவியழகனின் எழுத்துக்களும் வசீகரமானவை. தமிழ்த் தேசிய நோக்கில் மிக முக்கியமானவை. ஆனால் அவரது இறுதி நாவல் ஜனரஞ்சக வாசிப்புக்குத் தீனிபோட எத்தனிக்கிறது. அது ஆரோக்கியமானதல்ல. பெரும்பாலான ஈழத்து நாவலாசிரியர்களின் மொழி தட்டைத்தனமானதே. அவர்கள் மொழியில் கவனம் செலுத்துவார்களாயின் ஈழத்து நாவல் வரலாறு புதிய தடத்தில் இன்னும் ஆரோக்கியமாகப் பயணிக்கும்.

தமிழ்த் தேசிய இலக்கியம் எழுச்சி அடைந்துள்ளது எனச் சொல்வீர்களா? அல்லது வீழ்ச்சியை அடைந்துள்ளது என்று சொல்வீர்களா?

தமிழ்த் தேசிய இலக்கியங்கள் காலங்காலமாக எழுச்சி பெற்று வருகின்றன. ஆனால் அவற்றின் இலக்கியப் பெறுமானங்கள் தொடர்பாகத்தான் வாதிக்க வேண்டியுள்ளது. எழுதப்படுபவை எல்லாம் இலக்கியங்கள் ஆகா. மாறாகத் தமிழ்த் தேசியத்துக் கெதிரான இலக்கியங்கள் பெருகி வருகின்றன. அவை ஆரோக்கியமானவையா என்பதைச் சிந்திக்க வேண்டும். அவ்வெழுத்துக்கள் தமிழில் வெளிவந்தவுடனேயே சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்படுகின்றன. அவை தமிழர்களின் வாக்கு மூலங்களாக சிங்கள மக்களால் நம்பப்படுகின்றன. ஆதலால் தான் அவை சிங்களத்தில் இரண்டாம் மூன்றாம் பதிப்பைப் பெறுகின்றன. இது ஆரோக்கியமானதல்ல. ஆகவே தமிழ்த் தேசியர்கள், தமிழ்த் தேசிய இலக்கியங்களை – ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின் குரலாக சிங்கள மக்கள், மேலைத்தேசம் புரிந்து கொள்ள அவற்றை மொழிபெயர்க்கவும் அவ்வவ் மொழிகளில் வெளியிடவும் முன்வர வேண்டும். அத்தோடு இன்றைய தொடர்பாடல் மற்றும் பொழுது போக்கு இளைய தலைமுறையைத் தேசிய உணர்வின்பால் செல்லவிடாது தடுக்கின்றன. ஆதலால் அது சார்ந்து வருகின்ற படைப்புக்களும் அருகத் தொடங்கியுள்ளன என்பது கவனத்திற்குரியது.

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் மீது இளைஞர்களின் ஆர்வம்; குறைந்து மேலைத்தேச கலாசாரத்தில் உருவான மென்பந்து போட்டிகள் மீதான ஆர்வம் அதிகரித்தமை என்ன மாதிரியான விளைவுகளைத் தரும்?

புதியன புகுதல் வழுவல்ல.  அது, குறித்த இனக்குழுவின் அடையாளம் இழத்தல் ஆகிவிடக்கூடாது. இன்றைய பல்லினக் கலாசார சூழலில் சிறுபான்மை இனங்கள் தம் அடையாளங்களை இழத்தலுக்கான வாய்ப்பே உள்ளன. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வணிகப் படையெடுப்பு – ஊடக வல்லாதிக்க அதிகாரம் இவற்றைத் தீர்மானிக்கின்றன. சிறுபான்மையினர் விருத்தியுறுவதையோ தம் அடையாளத்தைப் பேணுவதையோ அவர்கள் விரும்புவதில்லை. நாமும் விளம்பரங்களின் வழி மேலைத்தேச வாழ்வினை அவாவும் மனப்போக்கினராக உள்ளோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது உலக வணிகச் சமூகம் எம்மடையாளத்தை அழித்து தாம் விரும்பும் அடையாளத்தை எம்மில் உருவாக்க முனைப்புடன் செயற்படுத்தலின் ஒரு பகுதி நிலையாகும். நவீன அடிமைச் சமூக உருவாக்கமாகவே இதனை என்னால் தரிசிக்க முடிகிறது.

நேர்காணல் – பார்த்தீபன்

ஆசிரியர்