Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் ஒற்றையாட்சி ஆரோக்கியமானதல்ல; ஞா.ஸ்ரீநேசன் நேர்காணல்

ஒற்றையாட்சி ஆரோக்கியமானதல்ல; ஞா.ஸ்ரீநேசன் நேர்காணல்

6 minutes read

“கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது போன்று இருக்கின்ற அதிகாரங்கள் போதாது என்று ஆயுத போராட்டம் நடந்து முடிந்தும், ஜனநாயக போராட்டம் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றபோது, இருக்கின்ற அதிகாரங்களை பறிக்கின்ற செயற்பாடுகள் காணப்படுகின்ற படியால் அரசாங்கம் கொண்டு வருகின்ற 19 ஆவது திருத்தத்தை அகற்றுவதென்பது ஒரு அரசின் மேலாதிக்கத்தை உயர்த்துகின்ற செயற்பாடாக அமைவதோடு மட்டுமல்லாமல் 13 ஆவது திருத்தத்தில் கை வைப்பதென்பது இருக்கின்ற அதிகாரங்களையும் இல்லாமல் செய்து ஒற்றையாட்சி முறையின் வலுத்தன்மையை அதிகரிக்கின்ற போக்காக அமையும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். தினக்குரலுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறினார். அந்தச் செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கேள்வி :- ஜனாதிபதி குடும்பத்திற்காகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதை கூட்டமைப்பு ஏற்கின்றதா?

பதில் :- பொதுஜன பெரமுன புதிய அரசாங்கம் பாராளுமன்றத்தில் கன்னி அமர்வினை நடாத்திய நிலையில் அடுத்தகட்ட முதல் வேலையாக என்ன செய்யப்போகின்றார்கள் என்ற பரபரப்பும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் இருக்கின்றது. அமைச்சரவையில் 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தினை நீக்குவதற்கான அனுமதி கிடைத்திருக்கின்றது என்ற முதல் செய்தி ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துள்ளது.

தற்போது பொதுஜன பெரமுனவின் ஊடாக வடகிழக்கில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களெல்லாம் கூட்டுப் பொறுப்பு என்ற தத்துவத்தின் அடிப்படையில் அரசாங்கம் எந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்த்து வாக்களிக்க முடியாத நிலையில் சரணாகதி அரசியல் அடிப்படையில் இரண்டு கைகளையும் தூக்க வேண்டிய நிலைமை ஏற்படப் போகின்றது. இந்த விடயங்களை சொல்லப் போனால் ஆத்திரப்படுவார்கள். எனவே அரசாங்கம் எந்த ஒரு திருத்தத்தை கொண்டு வந்தாலும் இவர்கள் அதற்கு சாதகமாக பேச வேண்டும் சாதகமாக கையுயர்த்த வேண்டும்.

சாதகமாக பேசுவதற்காக சில விடயங்களை அதில் உள்ளடக்கி பல விடயங்கள் ஜனநாயகத்திற்கும் தமிழ் பேசும் மக்களிற்கும் அல்லது மனித உரிமைகளுக்கும் எதிரான விடயங்கள் கொண்டு வருவதற்கும் வாய்ப்பிருக்கின்றது.

ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா 1978 இல் கொண்டு வந்த போது ஆணை பெண்ணாக்கவும் பெண்ணை ஆணாக்கவும் முடியாது, வேறு அனைத்தையும் செய்யக்கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாக சிலாகித்து பேசியிருந்தார். ஆனால் 18 ஆவது திருத்தமென்பது ஆணை, பெண்ணாக்கலாம் பெண்ணை, ஆண் ஆக்கலாம் என்ற வகையில் அமைந்திருப்பதாக ஜெ.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித கேரத் பாராளுமன்றத்தில் கூறியிருந்ததை நினைவுபடுத்தக்கூடியதாக இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு ஜனநாயக நாட்டில் அமெரிக்க ஜனாதிபதிக்கு இருக்க முடியாத பலவற்றை 02 ஆம் குடியரசு அரசியல் யாப்பு கொண்டிருந்த படியால் பல மனித உரிமைகளுக்கு எதிரான தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் கடந்த காலத்திலே தாராளமாக அரங்கேற்றப்பட்டது. அரசியல் யாப்பில் காணப்பட்ட அசிங்க அதிகார துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தக்கூடியளவிற்கு இருக்கின்ற 19 ஆவது திருத்தத்தினை அகற்றுவது, எமது தலைகளில் மண்ணை அள்ளிக் கொட்டுவதற்கும் உரிமைகளை நாங்களே காட்டிக்கொடுப்பது போலவும் அமையும்.

கேள்வி :- 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை நீக்குவதற்கோ மாற்றம் செய்வதற்கோ இந்தியாவின் அனுமதி தேவையில்லையா ?

பதில் :- வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் பால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக கொண்டுவரப்பட்டு மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.
மாகாண சபை முறை கூட வடகிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வடக்கும் கிழக்கும் இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த நிலையில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைந்திருந்த தீர்வுத்திட்டம் இப்போது பலவீனப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

மாகாண சபைக்கு காணி, காவல் மற்றும் நிதி அதிகாரம் இல்லையென உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரான சரத் வீரசேகர கூறியுள்ளார். அதன்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது போன்று இருக்கின்ற அதிகாரங்கள் போதாது என்று ஆயுத போராட்டம் நடந்து முடிந்தும், ஜனநாயக போராட்டம் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றபோது ,இருக்கின்ற அதிகாரங்களை பறிக்கின்ற செயற்பாடுகள் காணப்படுகின்ற படியால் அரசாங்கம் கொண்டு வருகின்ற 19 ஆவது திருத்தத்தை அகற்றுவதென்பது ஒரு அரசின் மேலாதிக்கத்தை உயர்த்துகின்ற செயற்பாடாக அமைவதோடு மட்டுமல்லாமல் 13 ஆவது திருத்தத்தில் கை வைப்பதென்பது இருக்கின்ற அதிகாரங்களையும் இல்லாமல் செய்து ஒற்றையாட்சி முறையின் வலுத்தன்மையை அதிகரிக்கின்ற போக்காக அமைந்திருக்கின்றது.

எனவே அரசாங்கம் இனப்பிரச்சினையினை மேலும் இடியப்பச் சிக்கலாக்க
மாற்றுவதற்குரிய செயற்பாட்டில் இறங்கியிருக்கின்றதா என்கின்ற நியாயமான சந்தேகம் இருக்கின்றது. அது மாத்திரமல்ல 19 ஆவது திருத்தத்தை அகற்றி 20 ஆவது திருத்தம் கொண்டு வருகையில், மேலும் ஜனாதிபதியின் சர்வாதிகார தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை உச்சப்படுத்தக்கூடிய ஒரு நிலைமை ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

எனவே சிறுபான்மையின கட்சிகள், ஜெ.வி.பி கட்சிகள், ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுனவில் இருந்து திண்டாடிக்கொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜனவில் இணைந்துள்ள பொதுவுடமை சார்ந்த கட்சி என்பன 19 ஆவது ,13 ஆவது திருத்தத்தில் கவனமாக இருக்க வேண்டும். 19 ஆவது திருத்தத்தை வலுவிழக்கச் செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதே போன்று 13 ஆவது திருத்தத்தை வலுவிலக்கச் செய்வது, தமிழ்பேசும் மக்களின் உரிமை அதிகாரப பகிர்வினை காவு கொள்ளுகின்ற செயற்பாடாக இருக்கும். எனவே ஒன்றில் 19 ஆவது திருத்தம் இருப்பது போல் இருக்கலாம். மற்றையது 13 ஆவது திருத்தம் இருக்கின்ற அதிகாரங்களோடு மேலும் காணி, காவல், நிதி அதிகாரங்களை கொண்டுவந்து சமஸ்டி முறைமைக்கேற்ப இருக்கின்ற போதுதான் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை தீர்த்துக்கொள்ள முடியும். அவ்வாறு இல்லாதுவிட்டால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகின்ற செயற்பாடகவே இருக்கும்.

ஆகவே அரசியல் யாப்பு, ஆட்சியிலுள்ளவர்களால் விளையாடப்படுவதற்குரிய பொம்மையாக மாறுவதற்குரிய சூழ்நிலை தொடர்ந்தும் இருக்கின்றது. அன்று 2/3 ஐ பயன்படுத்தி 18 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தார்கள். பின்னர் 19 ஐ கொண்டு வந்தார்கள். தற்போது 20 ஆவது திருத்தத்தை கொண்டு வரப்போகின்றார்கள். எனவே ஆளும் வர்க்கத்தின் ஆளுகின்ற அரசாங்கத்தின் தேவைக்காக செய்யப்படுகின்றதே ஒழிய மக்களுக்காகவோ நாட்டுக்காகவோ செய்யப்படுகின்ற விடயங்களல்ல.

கேள்வி :- தமிழர் தாயகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவினை சந்தித்துள்ளதே?

பதில் :- வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது என்று பரவலாக பேசப்படுகிறது. பேரினவாத அரசாங்கங்கள் நீண்ட காலமாக தமிழர்களின் இனப்பிரச்சினையினை தீர்க்காமல் இருப்பதும் சிறிய பிரச்சினைகளைக் கூட தீர்ப்பதில் அக்கறையீனமாக செயற்படுகின்ற போது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது கொண்டிருக்கின்ற அதிருப்தியை, நாங்கள் ஏன் அரசாங்கத்தை பிடித்து செய்துகொடுக்கவில்லை என்ற பிடிமானத்தை எங்களில் வைத்துக்கொண்டு எங்களுக்கு வாக்களிக்கின்ற விடயத்தில் கூட தமிழ்மக்கள் சற்று தவிர்த்திருக்கலாம். அதிலும் குறிப்பாக விக்னேஷ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் சார்பான கட்சிகள் போட்டியிட்டு இருவரும் மூன்று ஆசனங்களை பெற்றுள்ளனர்.

கடந்த தேர்தலில் கூட்டமைப்பு 16 ஆசனங்களை பெற்றிருந்தது. இம்முறை 10 ஆசனங்களும் தமிழ் தேசியம் சார்ந்து பேசுகின்ற விக்னேஷ்வரன், கஜேந்திரகுமார் போன்றோர்களின் ஆசனங்களையும் சேர்த்து 13 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றது என்றால், மொத்தத்தில் மூன்று ஆசனங்கள் குறைந்திருக்கின்றது. ஆனால் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் 06 ஆசனங்கள் குறைந்திருப்பதாக சொல்லலாம்.

அரசாங்கம் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் தேவைகளை ஏமாற்றி இழுத்தடிப்பு செய்த விடயங்களும் கூட்டமைப்பின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாய் அமைந்துள்ளது. அதாவது கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் சர்வ சாதாரண விடயம். இந்த விடயத்தில் கூட அரசாங்கம் கடந்த காலத்தில் இதய சுத்தியாக செயற்படவில்லை. தமிழ் மக்களுக்கு செய்து தருகின்றோம் என்று சொல்லுகின்ற அதே வேளை செய்யாமல் விட்டால் முஸ்லிம்களை திருப்திபடுத்தலாம் என்ற நோக்கில் செயற்பட்டனர்.  அதையும் விட தேர்தல் களத்தில் அதிகமான கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும்போது வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. அதையும் விட வாக்குச் சீட்டு கணிப்பீடும் நிலையங்களில் வேண்டுமென்றே புள்ளிகளை வைத்து நிராகரிக்கின்ற செயற்பாடுகள் என்று பல்வேறு மோசடிகள் இடம்பெற்றிருந்தது.

காணாமலாக்கப்பட்டவர்களுக்குரிய பிரச்சினை தீர்க்கப்படாதது, அரசியற் கைதிகள் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படாதது, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றும் செய்யவில்லை என்ற பரப்புரைகளை மக்கள் நம்பி ஏமாந்து இருக்கிறார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி கவிழ்ந்துவிட்டால் அதை விட சிறப்பாக செயற்படக்கூடிய கட்சிகள் எதுவுமில்லை என்ற நோக்கில் கூட்டமைப்பு இணைந்து செயற்பட்டது. தற்போதைய பொதுஜன பெரமுன அரசாங்கம் இப்போது நடந்து கொள்ளுகின்ற செயற்பாடுகளை பார்க்கின்றபோது இந்த அரசாங்கத்திடம் ஆட்சியை கொடுத்தால் ஐக்கிய தேசிய கட்சி காலத்தில் பெறக்கூடிய விடயங்களை கூட பெறமுடியாமல் போகும் என்ற காரணத்தினால் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் சார்பு நிலையில் செயற்பட்டதன் காரணமாக பல்வேறுபட்ட விடயங்களை செய்திருந்தோம். ஆனால் மக்களுக்கு நாங்கள் செய்த பணிகள் போதியளவு தெளிவாக சென்றடையவில்லை என்று கூறலாம்.

கடந்த கால அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தட்டிக் கேட்டும், தட்டிக் கேட்கவில்லை என்ற நிலையிலேயே மக்கள் செயற்பட்டிருந்தனர். அரசாங்கத்தின் பக்கமாக கேட்க வேண்டிய கேள்விகளை கூட்டமைப்பின் பக்கமாக ஒதுக்கிவிட்டதும் ஒரு காரணமாகும்.

புதிய கோத்தபாய ஆட்சியில் தமிழ் மக்களுக்கெதிரான எதிர்மறையான செயற்பாடுகள் பல நடந்திருக்கிறது. தொல்லியல் இடங்களை அடையாளம் காணுதல், கலை கலாசார பாரம்பரிய மொழிக்குரிய அந்தஸ்து இழக்கப்பட்டமை, சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடலாம் என்ற நிலைப்பாடு, தைப்பொங்கலை தேசிய பண்டிகையாக கொண்டாடாத நிலைப்பாடு, காணாமல் போனவர்களை மண்ணை தோண்டிப் பாருங்கள் என்ற பரிகாச முடிவு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட கைதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படல் இப்படியாக அரசு எங்களுக்கு எதிர்மறையான செயற்பாடுகளை செய்கின்றபோது அரசு சார்ந்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக்கூடிய நிலையில்லை.

கடந்த காலங்களில் எங்களுடைய அரசியல் தலைவர்களை அழித்த விதம், போராட்டத்தை அழித்த முறைமை, கல்வி, பத்திரிகையாளர்களை அழித்த விதம், முன்னாள் போராளிகளை கடத்தி காணாமலாக்கியமை, அங்கவீன போராளிகளை கொலை செய்த விதம், தொண்டு நிறுவனப் பெண்களை கடத்திச் சென்று கொலை செய்தமை போன்ற இவற்றையெல்லாம் மக்கள் சிந்திக்காமல் அரசாங்கம் சார்ந்த கட்சிகளுக்கு வாக்களிக்கும் மனநிலை எப்படி ஏற்பட்டதென்பதையெல்லாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. எனவே ஒரு பகுதி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அரசாங்கத்தின் கடும்போக்கான செயற்பாடுகளையும் சிறுபான்மை மக்களுக்கெதிரான செயற்பாடுகளையும் விளங்கிக் கொள்வதற்கான கால அவகாசம் இன்னும் குறைந்த காலத்தில் இருக்கிறது. அதன் பின்னர் நாங்கள் செய்தது பிழை என்பதை உணர்ந்து மக்கள் தெளிவடைவார்கள்.

எனவே தமிழ் மக்களை பொறுத்தமட்டில் சுயமரியாதை உரிமையோடு கூடிய அபிவிருத்தியை விரும்புகிறார்களே ஒழிய கண்களை விற்று ஓவியம் வாங்குகின்ற அரசியலுக்கு செல்லவில்லை, அத்திவாரத்தை இடித்து கட்டடம் கட்டுகின்ற ஒரு நிலைக்கு தமிழ் மக்கள் தயாரில்லை, மரத்தின் ஆணிவேரை அறுத்துவிட்டு அரசியல் செய்கின்ற நிலையினை தமிழ்மக்கள் விரும்பவில்லை. எனவே தன்மானத் தமிழர்கள் எல்லோரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பக்கமாக நிற்பார்களேயொழிய எந்த நிலையிலும் தங்களுடைய தன்மானத்தை மாற்றானுக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஆகவே உரிமையில்லாத அபிவிருத்தி நிரந்தரமற்றவை என உணரும் காலம் வெகு தொலைவிலில்லை. எனவே மக்கள் உணர்ந்து திருந்தி மீண்டும் கூட்டமைப்பின் பக்கம் வருவார்கள்.

  • நேர்காணல் – பாக்கியராஜா மோகனதாஸ்

நன்றி – தினக்குரல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More