செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 27 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 27 | பத்மநாபன் மகாலிங்கம்

15 minutes read

சைவத்தையும் தமிழையும் பேணுவதற்காக ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணையில் ஒரு சைவப்பிரகாச வித்தியாலயத்தை ஆரம்பித்தார். காங்கேசன்துறை வீதியும் நாவலர் வீதியும் சந்திக்கும் நாவலர் சந்தியில் பாடசாலை அமைந்திருந்தது. பின்னர் அப்பாடசாலை நாவலர் சைவப்பிரகாச வித்தியாலயம் என்று அழைக்கப்பட்டது. மகாவித்தியாலயமாக தரம் உயர்ந்த போது   யா/வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் என்று அதன் பெயர் மாற்றமடைந்தது. நாவலர் சந்தியில் பாடசாலைக்கு குறுக்காக ‘மனோகரா’ தியேட்டர் வந்ததால் சிலர் அந்த சந்தியை ‘மனோகரா’ சந்தி என்றும் அழைத்தனர். யா/வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம் யா/வைத்தீஸ்வரா கல்லூரி, யா/இந்துக்கல்லூரி என்னும் இரண்டு பெரிய பாடசாலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது.

ஒரு திங்கட்கிழமை காலை கணபதியாரும் மீனாட்சியும் மகாலிங்கனுடனும் ஆறுமுகத்தாருடனும் யாழ்ப்பாணம் சென்றனர். முதல் முதல் படிக்க போகும் போது மூன்று பேர் போவது சரியல்ல என்றே ஆறுமுகத்தாரும் சேர்ந்து போனார். போனவர்களை காக்க வைக்காமல் நேரத்தோடையே காரைதீவிலிருந்து (காரைநகர்) வைத்தீஸ்வரக்குருக்கள் வந்து காத்திருந்தார்.

அவர் மகாலிங்கனையும் கணபதியாரையும் பாடசாலைக்கு கூட்டி சென்று, தனது நண்பரான ஆசிரியர் மூலம் தலமை ஆசிரியருடன் கதைத்து மகாலிங்கனை நாவலர் பாடசாலையில் ஆறாம் வகுப்பில் சேர்த்து விட்டு, தான் பெரிய பரந்தன் நோக்கி பயணமானார்.

சைவப் பிள்ளைகள் படிக்கும் பாடசாலை என்ற படியால் மகாலிங்கனுக்கு ஆடை அணிதல் பற்றிய பிரச்சனை ஏற்படவில்லை. பிள்ளைகள் மகாலிங்கனைப் போலவே   வேட்டி கட்டி அரைக் கை சேர்ட் போட்டிருந்தார்கள். எல்லோரும் விபூதி அணிந்து வந்தார்கள். மகாலிங்கன் தேவாரங்களை பண்ணோடு பாடுவான், அதனால் கிழமையில் ஒரு நாள் பாடசாலை ஆரம்பிக்கும் போது தேவாரம் படிக்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது.

கந்தையர் சாஸ்திரத்தை நன்கு கற்று முடித்தார். நல்லதொரு சாஸ்திரியாராக பெரிய பரந்தன் திரும்ப தயாராக இருந்தார்.

குருவானவர் கந்தையரைப் பார்த்து “தம்பி! உனக்கு இப்ப சாதகம் எழுத மையில் தொட்டெழுதும் பேனைகளும் பயிற்சி கொப்பிகளும் வந்து விட்டன. நீ இலகுவாக சாதகங்களை எழுதலாம். நாங்கள் ஆரம்பத்தில் ஏட்டில் எழுத்தாணியால் எழுதினம். பனை ஓலைகளை பதப்படுத்தி ஏடுகளையும் நாங்களே தயாரிச்சம்.

இப்ப நீங்கள் மயிலிறகாலும் தொட்டெழுதும் பேனையாலும் எழுதுறீங்கள். ஒரு சாதகம் எழுதின எழுத்தாணியை சாதகம் எழுதி முடிந்த கையோடை உடைத்து விட வேணும்.  உங்கள் மனச்சாட்சிப் படி கை ரேகை பார்த்து சாஸ்திரத்தை சொல்ல வேணும், சாதகங்களை எழுத வேணும். கொடுக்கிற காசை வாங்கலாம், இவ்வளவு கொடு என்று வியாபாரம் பேசக்கூடாது. சாஸ்திரம் பணம் தேடும் தொழிலில்லை. அதன் மூலம் மனிதர்களுக்கு ஏற்படப்போகும் நன்மை தீமைகளை கூறி, அவர்களை இறைவனிடம் பக்தி கொள்ள வைக்க வேண்டும். எனக்கு தெரிந்த எல்லாத்தையும் உனக்கு நான் சொல்லி கொடுத்திருக்கிறன். சந்தோசமாக போய் வா.” என்றார்.

பெரிய பரந்தன் திரும்பிய கந்தையர் வயல் வேலைகள் இல்லாத நேரங்களில், சாஸ்திரம் சொல்வதற்காக மீசாலை, சாவகச்சேரி, பளை போன்ற ஊர்களுக்கு சென்று விடுவார். இளைஞனாகி பொறுப்பை உணர்ந்து விட்ட கந்தையரை, இப்போது மீனாட்சியும் கட்டுப்படுத்துவதில்லை.

போட்டியில்லாமல் எல்லா பாடங்களிலும் கூடிய புள்ளி பெற்று வந்த மகாலிங்கனுக்கு முதல் முதல் ஏமாற்றம், நாவலர் பாடசாலையில் ஆறாம் வகுப்பில், முதலாம் தவணை பரீட்சையில் ஏற்பட்டது.

கணித பாடத்தில் எல்லாரையும் விட கூடிய புள்ளியைப் பெற்ற மகாலிங்கன், ஏனைய பாடங்களில் இரண்டாவது, மூன்றாவதாக தான் வர முடிந்தது. கூட்டுத்தொகை கூடுதலாக இருந்த படியால் மூன்றாம் பிள்ளையாக வந்தான்.

ஊரில் இருந்தது போல கவனமின்றி இனியும் இருக்க முடியாது என்பதை மகாலிங்கன் புரிந்து கொண்டான். படிப்பில் கூடிய கவனம் எடுக்க தொடங்கினான். இரண்டாம் தவணையில் கணித பாடத்துடன் தமிழ் பாடத்திலும் கூடுதல் புள்ளி எடுத்து இரண்டாம் நிலைக்கு முன்னேறினான்.

இரவு பகல் கவனமாக படித்தால் தான் முதலாம் இடத்தை பிடிக்கலாம் என்று அவனுக்கு விளங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டு புத்தி குறைந்து, பொறுப்பாக படிக்க வேணும் என்ற எண்ணம் மனதில் நன்கு பதிந்தது. கணபதியும் மீனாட்சியும் மகாலிங்கனில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை கண்டு மனதிற்குள் சந்தோசப்பட்டாலும் வெளியில் காட்ட மாட்டார்கள்.

வைத்தீஸ்வரக்குருக்களின் யோசனை எவ்வளவுக்கு சரியானது என்பதை மீனாட்சியும் விளங்கி கொண்டாள். ஊரில் என்றால் தனக்கு போட்டிக்கு ஒருத்தரும் இல்லை என்ற தைரியத்தில் பொறுப்பில்லாமல் இருந்திருப்பான்.

மகாலிங்கன் ஒரு விடுமுறையில் போது, நுணாவிலிருந்து முத்தர்கணபதிக்கு திருமணம் பேசி வந்தனர். பெண் வீட்டார் நல்ல இடம் என்ற படியால் அவனுக்கு திருமணம் செய்து வைக்க முத்தர் தீர்மானித்தார்.

தனது நண்பரான ஆறுமுகத்தாரின் ஆலோசனையை கேட்டார்.  ஆறுமுகத்தார் “முத்தர்கணபதிக்கும் உரிய வயது வந்து விட்டது. இந்த இடம் நல்ல இடம், திருமணம் செய்து வைப்பது தான் சரி.” என்றார்.

பெரியபரந்தனில் இருந்து ஏழெட்டு குடும்பத்தவர்கள் முத்தர்கணபதியுடன் நுணாவிலுக்கு சென்று நாட்சோறு கொடுக்கும் நிகழ்வை நடத்தி வைத்தனர். முத்தர்கணபதி கோயில் காணிக்கு பக்கத்தில் பிள்ளையார் கோவிலுக்கும் காளி கோயிலுக்கும் இடையில் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டி கொடுத்த வீட்டில் மனைவியுடன் குடியேறினார்.

ஏழாம் வகுப்பில் மகாலிங்கன் கணிதம், தமிழ், சைவசமயம் ஆகிய மூன்று பாடங்களில் கூடிய புள்ளியை பெற்றாலும் பெரிய பரந்தனில் எடுத்தது மாதிரி எல்லாப் பாடங்களிலும் கூடிய புள்ளிகளை பெற முடியவில்லை. அதிலும் ஆங்கில பாடத்தில் மிகவும் குறைந்த புள்ளியைப் பெற்றான்.

ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை புத்தகங்களை எல்லாம் படித்து, பாடமாக்கியபடியால் சைவ சமய பாடத்தில் கூடுதல் புள்ளியை எடுக்க முடிந்தது.

முதலில் வன்னியிலிருந்து வந்தவன் என்று மகாலிங்கனுடன் நட்பு பாராட்டாத வகுப்பு தோழர்கள், அவனது உதவி செய்யும் குணத்தினாலும் அவன் நல்லாய் படிப்பவன் என்பதாலும் மெல்ல மெல்ல அவனுடன் நல்லாய் பழகினார்கள்.

சின்னமீனாட்சி உயரமாகவும் மெல்லிய பெண்ணாகவும், அழகாகவும் வளர்ந்திருந்தாள். கணபதியார் தகப்பனிடமும் தாயிடமும் “மீனாட்சிக்கும் வயதாகிக் கொண்டு இருக்குது. அவளுக்கு கலியாணம் செய்து வைத்தால் என்ன?” என்று கேட்டார்.

ஆறுமுகத்தார் “வல்லிபுரத்திற்கு கேட்டாலென்ன?” என்று கேட்டார். விசாலாட்சி “வல்லிபுரத்திற்கு செய்து வைத்தால் நல்லது தான். சொந்தமும் விட்டு போகாது. நீங்கள் கேட்டுப் பாருங்கோ.” என்றாள்.

வல்லிபுரம் ஐந்து வயதிலிருந்தே தகப்பனுடன் மீசாலையிலிருந்து பெரியபரந்தனுக்கு லீவு நாட்களில் வந்து போவான். அவனுக்கு நாட்டுக் கூத்து ஆடுவதில் விருப்பம் அதிகம். மிகவும் சிறிய வயதிலிருந்தே அவன் நாட்டுக் கூத்து ஆடி வருகிறான்.

வல்லிபுரம் இப்போது நாட்டுக்கூத்து பழக்கும் அண்ணாவியாராக இருக்கிறான். வல்லிபுரம் தங்க நகைகளை அணிவதிலும் அதிக விருப்பம் உள்ளவன். வல்லிபுரத்திற்கு சொந்தமாக காணிகள் இருந்தன.

ஆறுமுகத்தாரும் முத்தரும் வல்லிபுரத்தின் தகப்பனிடம் போய் கதைத்தனர்.  அவர் “ஆறுமுகத்தார், உங்கடை பிள்ளையை செய்வதில் எங்களுக்கும் நல்ல விருப்பம்.” என்றார். ஒரு நல்ல நாளில் பல நல்ல காரியங்கள் நடந்த, தியாகர்வயலிலேயே வல்லிபுரத்திற்கும் மீனாட்சிக்கும் திருமணம் நடந்தது. நாட்சோறு கொடுத்தலுக்கு முருகேசரும் சின்னம்மாவும் மகாலிங்கனை கூட்டிக் கொண்டு வந்தனர்.

பேரம்பலத்திற்கு பசுக்களின் மீதும் எருமைகளின் மீதும் மிகவும் விருப்பம் இருந்தது. அதனால் ஆறுமுகத்தார் முழு எருமைகளையும் பசுக்களில் மூன்றிலொரு பங்கையும் அவனுக்கு கொடுத்தார்.

மிகுதியில் ஒரு பங்கை நல்லையனுக்கும் மற்ற பங்கை மகாலிங்கனுக்கும் ஒதுக்கி வைத்து தானே பராமரித்தார். பேரம்பலத்திற்கும் பொறுப்புக்கள் இருக்க வேண்டும் என்றே எருமைகள், பசுக்களை அவனிடம் ஒப்படைத்தார்.

அவரது எதிர்பார்ப்பை போல பேரம்பலமும் அவற்றை நல்லாய் பார்த்துக் கொண்டான். அவரது பசுக்களின் எண்ணிக்கையும் எருமைகளின் தொகையும் விரைவில் அதிகரித்தன.

பேரம்பலம் தமையனான கணபதியாரைப் போல வேட்டையாடுதலிலும் ஆர்வமாக இருந்தான்.

நல்லையன் நல்ல நிறமாக, எல்லோரிலும் அன்பு செலுத்துபவனாக, வளர்ந்து வந்தான். அவன் இப்போது நாலாம் வகுப்புக்கு வந்து விட்டான். ஏனைய மாணவர்களுடன் எவ்வித பிரச்சினைகளிலும் ஈடுபடாது படிப்பில் கவனமாக இருந்தான்.

அவனுக்கு மூத்த தமையன் ஆன கணபதியாரிலும் மீனாட்சியிலும் தான் கூடுதலான விருப்பம் இருந்தது. பாடசாலை இல்லாத நேரங்களில் கணபதியார் வீட்டிலேயே இருப்பான். மீனாட்சி அவனுக்கு விருப்பமான சாப்பாடுகளை செய்து கொடுப்பாள்.

கந்தையர் மீசாலைக்கு சாஸ்திரம் சொல்ல போன இடத்தில் ஒரு பெண்ணை கண்டு விரும்பி விட்டார். தமக்கை மீனாட்சியிடம் “அக்கா, மீசாலையில் எனக்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டது. அவளுக்கும் விருப்பம் தான். முறைப்படி வந்து தகப்பனிட்டை பொம்பிளை கேட்கட்டாம். நீ தான் அத்தானிடம் சொல்லி எங்களுக்கு உதவி செய்ய வேணும்.” என்று தயங்கி நின்றான்.

அன்று மாலை கணபதியார் வீடு திரும்பிய போது மீனாட்சி கந்தையரின் விஷயத்தை கூறினாள். கணபதியார் தன் சம்மதத்தை தெரிவித்ததோடு தன் தகப்பனிடமும் மாமனிடமும் சொல்லி முறைப்படி பெண் வீட்டிற்கு சென்று திருமணம் பேசி அவனது கலியாணத்தை நடத்தியும் வைத்தார்.

கந்தையர் தியாகர்வயலுக்கு அருகே இருந்த தனது காணியில் வீடு போட்டு இருக்க விரும்ப, ஊர் வழமைப்படி ஊரார் எல்லோருமாகச் சேர்ந்து அவருக்கு வீடு கட்ட உதவினார்கள்.

மகாலிங்கன் பாடசாலையில் நடந்த பேச்சுப்போட்டிகளில் பங்கு பற்றி முதலிடம் பெற்று வந்தான். சரஸ்வதி பூசையின் போது தானே, தனது வகுப்பு தோழர்களுக்கு கூத்து பழக்கி ஆட வைத்தான். சின்னம்மாவுடன் வண்ணார்பண்ணை சிவன் கோவிலில் நடைபெறும் பிரசங்கங்களை கேட்க சென்று வருவான். 

ஆறுமுக நாவலர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து பலர், பிரசங்கம் செய்து சமயத்தை காக்கும் பணியில் ஈடுபட்டனர். மகாலிங்கன் பிரசங்கங்களைக் கேட்டு கேட்டு பல விசயங்களை அறிந்து கொண்டான். அதனால் அவனுக்கு பேசுவதிலும் எழுதுவதிலும் நல்ல திறமை உண்டானது.

எல்லாம் நல்ல படியாய் நடந்து வரும் போது பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மகாலிங்கனுக்கு ஒரு பிரச்சனை வந்தது. அப்போது அவன் பத்தாம் வகுப்பில் முதலாம் தவணையில் படித்துக் கொண்டிருந்தான்.

அவனது தலைமயிர் திடீரென நரைக்க தொடங்கியது. அது இளநரை என்பதை விளங்கிக் கொள்ளாது நண்பர்கள், மகாலிங்கனின் வெள்ளை மயிர்களை தொட்டு தொட்டு கேலி பேசினர்கள். சில பிள்ளைகளுக்கு இளம் வயதில் அவ்வாறு தலைமயிர் நரைப்பது உண்டு என்பது தெரியாது. அதனால் மகாலிங்கனை கிழவன் என்று பகிடி பண்ணினார்கள். இதனால் மகாலிங்கனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

ஒருவாறு முதலாம் தவணை சோதனையை எழுதி முடித்து விட்டு, இனி இங்கு படிக்க வருவதில்லை என்ற தீர்மானத்துடன் ஊர் போய் சேர்ந்தான்.

இளநரையால் மகாலிங்கன் கவலைப்படுறான் என்பது சின்னம்மாவிற்கு தெரியும். லீவுக்கு வீட்டுக்கு போய் வர எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தா.

வல்லிபுரத்தின் வீடு தியாகர்வயலுக்கும் கணபதியின் வீட்டுக்கும் நடுவில் இருந்தது. கணபதியார் வயலுக்கு போகும் போது ஒரு நாளைக்கு ஒருமுறை என்றாலும் அங்கே சென்று தங்கையின் சுகம் கேட்டு விட்டு தான் வருவார்.

லீவுக்கு வரும் மகாலிங்கன் தியாகர்வயலில் இல்லாவிட்டால் மாமியாரான சின்னமீனாட்சி வீட்டில் தான் நிற்பான். தன்னிலும் வயது குறைந்த நல்லையனை “குஞ்சி, குஞ்சி “என்று கூப்பிட்டு தன்னோடு அழைத்து செல்வான்.

(குஞ்சி–> குஞ்சியப்புவின் சுருக்கம்–> குஞ்சியப்பு என்பது கிராம மக்கள் சிறிய தந்தையாரை கூப்பிட பயன்படுத்தும் சொல்), (லீவு–> leave–> விடுமுறை)

மகாலிங்கன் பெரியபரந்தனில் நல்ல சந்தோசமாக லீவை கழித்தான். பாடசாலை இரண்டாம் தவணைக்காக தொடங்கும் நாள் வந்தது. வழக்கமாக பாடசாலை ஆரம்பிக்கும் நாளுக்கு முதல் நாளே வந்துவிடும் மகாலிங்கன், ஆரம்பிக்கும் தினத்திலும் வரவில்லை.

சின்னம்மாவிற்கு ஏதோ பிரச்சினை என்று விளங்கிவிட்டது. முருகேசரிடம் “நேற்றே வரவேண்டிய மகாலிங்கன் இன்றும் வரவில்லை. இளநரையை கண்டு பயந்துவிட்டான். நான் போய் புத்தி சொல்லி கூட்டி வாறன்.” என்று சொல்லிவிட்டு பெரியபரந்தனுக்கு வெளிக்கிட்டு போனா.

சின்னம்மா போய் சேர்ந்தவுடன் மகாலிங்கனை தேடினா. அவன் தியாகர்வயலால் வரவில்லை. சின்னம்மா வந்து நிற்கிறா என்றவுடன் அவனுக்கு காரணம் விளங்கி விட்டது. சின்னம்மா அவன் வர முதலே பிரச்சினையை கணபதியாருக்கும் மீனாட்சிக்கும் சொல்லி விட்டா.

சின்னம்மா வந்திருக்கிறா என்றதும், பேரம்பலத்தையும் நல்லையனையும் தியாகர்வயலில் விட்டு விட்டு, ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் மகாலிங்கனுடன் கணபதியார் வீட்டிற்கு சென்றனர். மகாலிங்கன் தயங்கி தயங்கி பேரன் பேர்த்திக்கு பின்னால் சென்றான்.

சின்னம்மா அவனைக் கண்டதும் “ஏனப்பன் வரேல்லை, வழக்கமாக முதல் நாளே வந்து விடுவாய். இன்றைக்கும் வாற நோக்கத்தை காணேல்லை.” என்று கேட்டா. அதற்கு மகாலிங்கன் “பொடியள் என்னை கிழவன் என்று பகிடி பண்ணுறாங்கள். நான் இனி அங்கை வரேல்லை” என்றான்.

விசாலாட்சி “பொடியள் சொன்னாப்போலை நீ கிழவனே? இளநரை வாறது உடம்பு வாசியாலை தான். அதுக்காக படிக்காமல் விடேலுமே?” என்று அவனுக்கு உற்சாகமூட்டினா.

ஆறுமுகத்தார் “தம்பி நீ படிக்கோணும் எண்டு தானே யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினது. நீ இப்படி இடையில் குழப்பலாமோ” என்றார். எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு மகாலிங்கன் பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றான். அவனுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்து கொண்ட மீனாட்சி “அவனுக்கு விருப்பமில்லை என்றால் விடுங்கோ. அவன் படிச்சது காணும்” என்றாள்.

எல்லாத்தையும் அவதானித்து கொண்டிருந்த கணபதியார் கிட்ட வந்தார். “தம்பி, உனக்கு விருப்பமில்லை என்றால் விடு. எனக்கு பத்து வயதில் ஐயா இறந்து போனார். படிக்க வேணும் எண்ட என்ரை ஆசையை அடக்கிக் கொண்டு, அம்மாவுடன் பெரியபரந்தனுக்கு வந்திட்டன். நான் தான் படிக்கேல்லை. நீயெண்டாலும் படிக்க வேணும் எண்டு ஆசைப்பட்டனான். நீ படிக்க கூடிய பிள்ளை. உன்னாலை ஏலாதெண்டால் நாங்கள் நெருக்கிறது சரியில்லை. சரி விடு.” என்று தான் படிக்க முடியாமல் போன கவலையுடன் சொன்னார்.

ஆறுமுகத்தாரும் விசாலாட்சியும் கணபதியாருக்கு படிக்காத கவலை இப்பவும் இருப்பதை நினைத்து கண் கலங்கினார்கள். இவ்வளவு நேரம் அமைதியாக நின்ற மகாலிங்கன் ஒரு நாளும் கலங்காத தகப்பன் கவலைப்படுவதைக் கண்டு ஏங்கி போனான். உடனே அவன் “ஐயா, நான் போய் படிக்கிறன். நீங்கள் கவலைப்படாதீங்கோ” என்று ஓடி வந்து தகப்பனை அணைத்தபடி கண்ணீருடன் கூறினான்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More