வழுதுணங்காய் என்பது கத்தரிக்காய் ஆகும். அதன் இன்னொரு பெயர் வழுதலை ஆகும். காய்களில் மிகவும் வழுக்கையாகப் பளபளப்பது கத்தரிக்காய் ஆகும். ஆதலால் தான் வழுதலை எனவும் வழுதுணங்காய் எனவும் இது பெயர் பெற்றது. மிகவும் சுவை தரும் இந்த வழுதுணங்காய் எவ்வாறெல்லாம் சங்க இலக்கியத்தில் பெருமை பெற்றது என இங்கு காணலாம்.
ஔவையார் பாடல்
வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முர முரவென்றே புளித்த மோரும்
புல்வேளூர் பூதன் புகழ் பரிந்திட்ட
சோறெல்லா உலகும் பெறும்.
என ஔவையார் பாடுகின்றார்.
“உப்புக்கும் பாடி கூழுக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் எந்தன் உள்ளம்”
என எளிய உணவை உவந்து அளித்தாலும் பாடிக் கொண்டிருந்தவர் ஔவையார் என பல சங்க இலக்கியப் பதிவுகள் மூலம் தெரிய வருகின்றது.
அவர் ஒரு வேளை, புல்வேளூர் எனும் ஊரில் பூதன் என்பவன் அளித்த எளிய உணவைப் புகழ்ந்து பாடுகிறார். அதாவது உச்சி வேளையில் அரும்பசி வாட்டும் நேரத்தில், பூதன் என்பவன் எளிமையாக வர கரிச்சோறும் கத்தரிக்காய் வாட்டலையும் அதன் மேல் முர முரவென புளித்த மோரையும் ஊற்றி உணவாக ஔவையாருக்கு அளித்தான். அந்த விருந்துக்கு இந்த உலகத்தைக் கொடுத்தாலும் தகுமோ? என்று பாடுகின்றார்.
இதில் “வழுதுணங்காய் வாட்டல்” என்பது நாம் தீயில் சுட்டு அதன் பின் பச்சை மிளகாய், வெங்காயம், மோர் விட்டு பச்சடியாகச் (கத்தரிக்காய் சம்பல்) செய்யும் உணவை குறிக்கின்றதோ எனக் கூட எண்ணத் தோன்றுகின்றது.
மதுரைக்காஞ்சி
மாங்குடி மருதனார் என்னும் புலவர் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உலகியலை உணர்த்துவதற்காக பாடப்பட்ட பத்துப்பாட்டு நூல் இது.
இந்த மதுரைக் காஞ்சியில் பெரிய நகரங்களில் அறச்சாலைகள் நிறுவப்பட்டிருந்தன. அங்கு ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டன. பல வகை உணவுகளை விருந்தினர்களுக்கு அளித்தனர். பலா, வாழை, முந்திரி முதலியவற்றை தானமாகவும் பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய் எனப்படும் கத்தரிக்காய் வகைகளும் கீரை வகை, இறைச்சி சேர்த்து சமைத்த சோறு அதாவது ஊன் சோறு, கிழங்கு வகைகள், பால், தயிர், மோர் போன்றன வழங்கப்பட்டன என மதுரைக்காஞ்சி கூறுகிறது.
நாலடியார் 264
வட்டும் வழுதுணையும் போல் வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து.
என்று இந்தப் பாடல் வருகின்றது. வட்டுக் காயும் வழுதுணங்காயும் எளிதில் கிடைக்கத் தக்க சாதாரண பொருட்கள் ஆவன. இவை போன்ற அற்பர் பட்டும் துகிலும் உடுத்து செல்வராயிருக்க அறிவுள்ளவர்களோ தரித்திரர்களாக இருப்பார்கள் என்பது இதன் கருத்து.
“காயிலே கெட்டது கத்தரிக்காய்” என்ற ஒரு தவறான புரிதலும் எம்மில் உண்டு. மிக எளிதில் கிடைப்பதும், எத்தனையோ சத்துக்கள் நிறைந்ததும், நோய் நிவாரணியுமான இந்த வழுதுணங்காய் எனும் கத்தரிக்காய் ஔவையின் சங்கப்பாடல் மூலம் இன்னும் எமக்கு நாவூற வைத்து விட்டது என்பதில் ஐயமில்லை.
வழுதலங்காய் என மருவிய வழுதுணங்காய்
வழுதுணங்காய் என்ற சங்க காலச் சொற்பதம் இன்று வழுதலங்காய் என்ற பெயரில் மட்டக்களப்பில் அனைத்து மக்களாலும் அழைக்கப்படுகின்றது என்பதை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது. அதுபோலவே “வட்டு” என்று வரும் பதம் ஆனது இப்பொழுது வட்டுக்காய் என்றும் வட்டுக் கத்தரிக்காய் என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகின்றது. இந்தச் சிறிய அளவிலான உருண்டைக் கத்தரிக்காய் காடுகளில் காய்க்கும். அதோடு இதைப் பயிர்ச் செய்கையும் செய்கின்றார்கள்.
ஆக எம்மோடு பின்னிப் பிணைந்திருக்கும் சங்ககால வாழ்வியல் எச்சங்களை இன்னும் தோண்டத் தோண்ட வற்றாத ஊற்றாக பெருகி வரும் என்பதில் ஐயமில்லை.
ஜெயஸ்ரீ சதானந்தன்
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்