Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

6 minutes read

 

காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்ற நம்பிக்கையும், காக்கைக்கு சோறிடுவதும் எமது பண்பு ஆகும். இந்த வழக்கு முறைகளை, சங்கத் தமிழன் எவ்வாறெல்லாம் பாடியுள்ளான் என இங்கு உற்று நோக்கலாம்.

குறுந்தொகை 210

“பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்று
விருந்து வரக்கரைந்த காக்கையது பலியே”
என காக்கை பாடினியார் எனும் புலவர் பாடுகின்றார். நச்செள்ளையார் எனும் இயற்பெயர் கொண்ட இந்தப் பெண் புலவர், காக்கை பற்றிப் பாடியதால் காக்கை பாடினியார் எனும் பெயர் கொண்டார்.

இந்தப் பாடலில் தலைவி பிரிந்திருந்த போது நீ அவளுக்கு ஆறுதல் கூறி அவள் வருந்தாமல் கவனித்துக் கொண்டாய் என தோழியைத் தலைவன் பாராட்டுகின்றான். அதற்குத் தோழி “நான் அப்படி ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. காக்கை கரைந்த போதெல்லாம் அதைச் சுட்டிக் காட்டினேன். தலைவியும் காக்கை கரைவது உன் வருகையின் அடையாளம் என்று நினைத்து நம்பிக்கையுடன் பொறுமையாக இருந்தாள்” என்றாள்.

மேலும் பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு தொண்டி ஊரின் வயல்களில் முற்றும் ஒருங்கே விளைந்த வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையுடைய சோற்றை ஏழு பாத்திரங்களில் ஏந்திக் கொடுத்தாலும் என் தோழியின் துன்பம் நீங்க விருந்தினர் வரும்படி கரைதலைச் செய்த காக்கைக்குரிய அந்தப் பலியானது மிகவும் சிறியதே ஆகும் என்று தோழி கூறுகின்றாள்.

காக்கைக்கு உணவிடும் ( பலியிடும்) வழக்கம் சங்ககாலத்தில் இருந்தது என்பதற்கு இப்பாடல் சான்றாக உள்ளது. காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்ற நம்பிக்கையும் சங்ககாலம் தொடக்கம் இருந்து வந்திருக்கின்றது என்பது புலன் ஆகிறது. அத்தோடு காகம் கத்துவதை “கரைதல்” என்று கூறும் மரபையும் இந்தப் பாடல் மூலம் நாம் இங்கு கவனிக்கலாம்.

ஐங்குறுநூறு-392

“மறு இல் தூவி சிறுகரும் காக்கை அம்சில் ஓதிய வர கரைந்துமே” என இந்தப் பாடல் வருகிறது. அதாவது காகம் கரைவதை விருந்தினர் வருவதற்கு நிமித்தமாகச் சங்க காலத்தில் கொள்வர் என அந்தப் பாடல் விளக்குகின்றது.
இதே ஐங்குறுநூறில் “சிறுவெண்காக்கை பத்து” என்ற பத்துப் பாடல்களில் காக்கையின் சிறப்புப் பற்றி வருகின்றது.

அதே போலவே,
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள”
என்று திருக்குறள் 527 இல் வள்ளுவர் கூறுகின்றார். காகம் உணவு கிடைத்தால் அதனை மறைத்து தான் மட்டும் உண்ணாது, மற்றய காகங்களையும் அழைத்து உண்ணும். அது போன்றவர்களுக்கே செல்வச் சிறப்புக் கிட்டும் என்கிறார் வள்ளுவர்.

நற்றிணை 258

மருங்கூர் பட்டினப் பெண்கள் அன்றாடம் சமைத்த உணவின் சிறு பகுதியை பலியாக வீட்டின் புறக்கடையில் வைப்பர். பகல் பொழுதில் அந்த பலி உணவை காக்கை உண்ணும் என்கிறது.

பொருநராற்றுப்படை என்ற இலக்கியம் உண்ணும் முன் காக்கைக்கு சோறு இடுதல் பற்றிப் பாடுகின்றது.
“கூடு கெழீஇய குடிவயினன்
செஞ்சோற்றுப் பலி மாந்திய
கருங்காக்கை கவ்வு முனையில்”
என்று அந்தப் பாடல் வருகின்றது. இறந்த நம் முன்னோர் அன்று காக்கை வடிவில் நாம் இடும் உணவை ஏற்றுக் கொள்வர் என்ற நம்பிக்கை இருந்திருக்கின்றது. இதை “பலிச் சோறு” வழங்குவது என்று அன்றைய காலத்தில் கூறியிருக்கின்றார்கள்.
ஆக, காக்கைக்கு சோறு இடுதல் என்பது சங்க காலம் தொட்டு இன்று வரை தொடரும் பழக்கங்களில் ஒன்று.

பறவைகளில் அதிக அறிவுத்துடன் கொண்ட காக்கையானது எமது கழிவுகளை உண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கு ஒரு அங்கமாக இருக்கின்றது. சுயநலம் சிறிதும் இல்லாத இந்தப் பறவை பகுத்துண்டு வாழும் பண்பில் சிறந்து விளங்குகின்றது.

ஆஸ்திரேலியப் பூர்வ குடி மக்களின் கருத்துப்படி, கலாச்சாரத்தின் சின்னமாகவும், மூதாதையரின் அம்சமாகவும் இந்தக் காக்கை இனம் கருதப்படுகின்றது. இந்தக் கருத்தை நாம் ஊன்றிப் பார்த்தால், ஆஸ்திரேலியப் பூர்வக் குடி மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கு வலு சேர்க்கும் வகையில் எமது சங்ககாலத் தமிழன், மூதாதையரின் அம்சமாக காக்கையைப் போற்றியிருக்கின்றான். அதற்குப் பலிச்சோறு இட்டு இருக்கின்றான்.
காக்கையை நாம் சிறப்புற வைத்திருக்கும் அம்சம் கூட ஆஸ்திரேலியப் பூர்வ குடிமக்களுக்கும் தமிழனுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லையா?

அது ஒரு புறம் இருக்க, சங்க காலத்திலும் அதற்கு பிறகும் நிறையப் பாடல்கள் காக்கை பற்றி சிறப்பாக வந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது இப்பறவை பற்றிய படைப்புகள் அருகிக் காணப்படுவதாக தெரிகின்றது.

காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது மூடநம்பிக்கையாக இருந்தாலும் கூட 2500 வருடங்களுக்கு முன்பு தொட்டு வழங்கி வந்த நம்பிக்கை இன்றும் விடாமல் எம்மில் தொடர்கின்றது என்பதை நினைத்துப் பெருமை கொள்ள வேண்டும். அதுபோலவே இன்றும் “காகம் கரைகின்றது” என்று தான் சொல்வார்கள்
காகம் கத்துகிறது என்று சொல்ல மாட்டார்கள். அதே சொல்லை சங்க இலக்கியத்தில் நாம் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்று நெய் கலந்து காகத்திற்கு சோறு கொடுத்த தமிழன் இன்றும் காகத்திற்கு சிறப்பு நாட்களில் சோறு வைப்பதைப் பார்க்கின்றோம்.

எமது நம்பிக்கைகளை, எமது பண்புகளை, எமது பழக்க வழக்கங்களை சங்க காலத் தமிழன் தொட்டு இன்று வரை கடைபிடிக்கிறோம் என்பதை மிகப் பெரும் ஆச்சரியமாகவும் அதே நேரம் பெருமையாகவும் நாம் பார்க்க வேண்டும்.

ஜெயஸ்ரீ சதானந்தன்

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More