September 22, 2023 3:57 am

சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

சங்க காலத்தில் நடைபெற்ற போர்களில் மிகச் சிறப்புடையதாக இந்த தலையாலங்கானப் போர் காணப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் புறநானூறு, அகநானூறு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி போன்றவற்றில் அதிகமாக பாடப்பட்ட போர்க்களம் இதுவே ஆகும். இந்த மிகப்பெரும் போர்க்களம் பற்றி எவ்வாறெல்லாம் பாடப்பட்டது என்று இந்தப் பதிவில் காணலாம்.

ஒரு அரசு இன்னொரு அரசனை எதிர்த்துப் போரிடுவது என்பது வழமை. ஆனால் ஒரு சிறுவனாக இருக்கும் அரசனை எதிர்த்து மூவேந்தரில் இருவர் சேர்ந்து ஏழு படைகளாக நின்று போரிட்டது என்பது மிகப்பெரும் அதிசயமாகப் பார்க்கப்பட்டது. பல புலவர்கள் பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரத்தையும் சிறப்பையும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

சிறுவன் பாண்டியனை மிகவும் சுலபமாக போரில் வெல்லலாம் என எண்ணிய சோழன், சேரனையும் துணைக்குச் சேர்த்து அத்தோடு ஐந்து வேளிர்களைக் (குறுநில மன்னர்கள்) கொண்டு எழுவராகச் சேர்ந்து போரிட்டனர். இதில் படு தோல்வி அடைந்தனர்.

இந்தப் போர் நடந்த இடமான “தலையாலங்கானம்” என்பது இப்போது திருவாரூர் கும்பகோணம் சாலையின் அருகே தெக்கூருக்கு அடுத்து இருக்கும் “தலையாலங்காடு” என்பதாகும். தலையாலங்கானம் என்பது மருவி “தலையாலங்காடு” என்ற வழக்கில் இப்போது உள்ளது. இந்த இடத்தில் திருநாவுக்கரசரால் பாடல் பாடப்பட்ட திருத்தலம் ஒன்றும் “திருத்தலையாலங்காடு” என்னும் பெயரில் உள்ளது .

இனி சங்கப் பாடல்கள் வழி தலையாலங்கானப் போரையும் பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்பையும் நாம் உற்று நோக்கலாம்.

புறநானூறு 76

இடைக்குன்றூர் கிழார் என்பவர்,
“ஒருவனை ஒருவர் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை”
என்று பாடும் பாடலில் ஒருவனை ஒருவன் கொல்லுதல் அல்லது ஒருவனுக்கு ஒருவன் தோற்றலும் இந்த உலகின் புதுமை அன்று. ஆனால் நெடுஞ்செழியனின் வலிமையை அறியாதவராக தாம் ஒன்றாகக்கூடி இருபெரும் வேந்தரும் ஐம்பெரும் வேளிரும் போரிட்டு நின்றனர். அவர்களைத் தானொருவனாக நின்று போரிட்டு கொல்லுதலைச் செய்தானே நெடுஞ்செழியன், அதுதான் புதுமை என்று இவர் பாடுகின்றார்.

புறநானூறு-19

குடபுலவியனார் என்பவர்
“இமிழ் கடல் வளை இய ஈண்டு அகல் இடக்கைக்
தமிழ்தலை மயங்கிய தலையானங்கானத்து” எனப் பாடுகின்றார்.
ஒலிகடலாற் சூழ்ந்த உலகில், தலையாலங்கானத்தில் மன்னர் பலர் நின்றனர். அங்கு விழுந்தாரோ கணக்கற்ற வீரர். அவர் உயிர் குடித்தவன் கூற்றுவனோ! அல்லது நீயோ! என ஒப்பிட்டனர். அத்தகைய வெற்றி வேல்ச் செழியனே நீ! என்று அவர் பாடுகின்றார்.

இவ்வாறு புறநானூற்றில் பல பாடல்களின் தலையாலங்கானத்துப் போர்க்களமும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது சிறப்புகளையும் நாம் காணலாம்.

நெடுநல்வாடை

பதினெண் மேற்கணக்கில் இருக்கும் பத்துப்பாட்டில் ஒன்று நெடுநல்வாடை. நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் எனும் புலவரால் இந்தப் பாடல் பாடப்பட்டது. இது வாடைகாலத்தில் நிகழ்வதாலும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட நெடுவாடை ஆகவும் போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது நல்லதொரு வாடையாகவும் அமைந்ததால் இது நெடுநல்வாடை எனப் பெயர் பெற்று விளங்கியது.

மதுரைக்காஞ்சி

பத்துப்பாட்டில் ஒன்றான இதை மாங்குடி மருதனார் பாடியுள்ளார். இதுவே பத்துப்பாட்டில் மிகப்பெரும் பாடல் ஆகும். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியலை உணர்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
நாற்படையின் துணை கொண்டு சேரர், சோழர், வேளிரையும் வென்றான் என்று பாடப்படுகின்றது. காற்றைப் போல் விரைந்து சென்று தலையாலங்கானத்துப் போரில் வெற்றி பெற்ற பின் அந்த நாட்டை அழித்தான் என விரிவாக இந்த இலக்கியம் கூறுகின்றது. இவ்வாறு கூறி வாழ்வு நிலையில்லாதது நல்லறங்கள் செய்து மலைபோல் புகழைத் தேடிக் கொள், எனப் பாண்டியனை பார்த்து இந்த புலவர் பாடுகிறார்.

இப்படியாக, தலையாலங்கானத்துப் போர் பற்றியும் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றியும் மாங்குடி மருதனார், நக்கீரர் போன்ற பல புலவர்கள் பல சங்க இலக்கியங்களில் பாடியுள்ளார்கள்.

இறுதியாக, இந்த தலையாலங்கானத்துப் போர்க்களம் என்பது ஒருவரை எதிர்த்து பல அரசுகள் அண்மையில் நடத்தி முடித்து, மிகப்பெரும் தமிழ் இன அழிவை ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் போர்க்களத்தை எம் மனத்தில் கொண்டு வந்து நிறுத்தி, வருத்துகிறது அல்லவா?

அடுத்து வரும் பதிவில், சங்க காலத்தின் இரண்டு மிகப்பெரும் போர்க்களங்களின், இன்னொரு போர்க்களமான “வெண்ணிப் பறந்தலைப்” போர்க்களத்தை நாம் காணலாம்.

ஜெயஸ்ரீ சதானந்தன்

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்