செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்

6 minutes read

 

தமிழரின் முதன்மை உணவான சோறு பல சங்க இலக்கியப் பாடல்கள் வழி பெருமை பெற்றிருக்கின்றது.
சோறு என்பதற்கு வல்சி, அடிசில் என்ற சொற்பதங்களையும் உபயோகித்திருக்கின்றனர்.
இந்தப் பதிவில் எவ்வாறெல்லாம் சோறு என்ற உணவு சங்க இலக்கியங்களில் இடம் பிடித்திருக்கின்றது என்பதனை உற்று நோக்கலாம்.

பதிற்றுப்பத்து 5

இந்த பதிற்றுப் பத்து பாடல்கள் அனைத்துமே சேர மன்னர்களைப் பற்றியதாக. இருக்கின்றன. ஒவ்வொரு பத்துப் பாடல்களையும் வெவ்வேறு புலவர்கள் பாடி இருக்கிறார்கள்.
இந்த ஐந்தாம் பத்துத் தொகுப்பில் 10 பாடல்கள் உள்ளன. இவற்றைப் பாடியவர் பரணர் எனும் புலவர் ஆவார். இவர் சேரன் செங்குட்டுவனின் வீரச் சிறப்பை புகழ்ந்து பாடியிருக்கின்றார்.

“சோறு வேறு என்னா ஊன் துவை
அடிசில்
ஒடா பீடர் உள் வழி இறுத்து”
என்று இந்தப் பாடல் வருகின்றது.

சோறு வேறு, ஊன் வேறு என்று பிரித்தறிய முடியாதவாறு இரண்டும் ஒன்றாய்க் குழைந்த சோறு “ஊன் துவை அடிசில்” ஆகும். “அந்த உணவை உண்ணும் உனது வீரர்களுக்குத் தம் உடம்பில் உள்ள ஊன் வேறு, நீ தந்த சோறு வேறு, என்று பிரித்துப் பார்க்காத அளவுக்கு செஞ்சோற்று கடன் என்னும் நன்றி உணர்வு உள்ளது. அதனால் தான் வீரத்துடன் பெரும் போர் புரிகின்றார்கள். வெற்றி வாகை சூடி வருகிறார்கள்” என்று பரணர் பாடுகின்றார்.

இந்த “ஊன் துவை அடிசில் “என்ற உணவு எமக்கு வல்வெட்டித்துறையில் இன்றும் “கோழிப் புக்கை” என்ற பெயரில் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவை ஞாபகப்படுத்துகின்றது. இறைச்சியையும் அரிசியையும் வேறு பல சுவை ஊட்டிகளையும் சேர்த்துத் தயாரிக்கும் உணவு இது. இந்த “புக்கை” என்ற சொல் கூட சங்க காலச் சொல்லான “புற்கை” என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததாகவும் கூழ் போன்ற சோறு என்று பொருள்படும் என இதற்கு முந்தைய பதிவில் நாம் பார்த்திருந்தோம்.

புறநானூறு 33

“ஊன் சோற்றமலை பான் கடும்பு அருந்தும்”
என்று வரும் பாடலில் கோவூர்கிழார் எனும் புலவர் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடுகின்றார். அதாவது பச்சிலை வைத்து கட்டிய மாலைப் பந்து போன்ற கறிச் சோற்றுக் கவளங்களை அரசன் பாணர்களுக்கு போர்ப் பாசறையில் வழங்கிக் கொண்டிருந்தான் என்று பாடுகின்றார்.

இந்த ஊன் சோறு என்பது இன்று உலகில் எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் இறைச்சி சேர்த்து சமைக்கும் “பிரியாணி” என்ற உணவைக் கூட ஒத்ததாக இருக்கின்றது.

அகநானூறு 86

நல்லாவூர்க்கிழார் எனும் புலவர் அன்றைய சங்க கால திருமண முறையை இந்தப் பாடலில் பாடி இருக்கின்றார்.
“உழுந்து தலைப்பெய்த
கொழுங்களி மிதவ” என்று இந்தப் பாடல் வருகின்றது. திருமண விழாவில் விருந்தாக உழுந்து சேர்த்த சோற்றுத் திரளையை விருந்தினர்களுக்கு அளித்திருக்கின்றார்கள் என்று பாடுகின்றார்.

இந்த வேளையில் நாம் இங்கு ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இலங்கையில் வட மாகாண மண்ணில் இன்றும் திருமணம் செய்து வைப்பதை சோறு கொடுத்தல்” என்பர்.
திருமணத்திற்கு வருமாறு சென்று அழைக்கும் போது “இரண்டு பேருக்கும் சோறு கொடுக்கப் போகிறோம். வாருங்கள்.” என்று கூறுவார்கள்.
இந்த சோறு என்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பது எமது வாழ்வியல் அம்சங்களினூடு தெரிகின்றது.

சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்

சோறு என்ற பதத்தை வைத்தே இந்த அரசனை அழைத்து இருக்கின்றனர்.
சேர நாட்டை ஆண்ட சங்க கால மன்னன் இவர். பலருக்கு “பெரும் சோறு” என்னும் உணவு வகையை அளித்ததால் இவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கு முந்தைய பதிவில் நாம் “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
புளித்த மோரும்”
விருந்தாக ஔவையார் சாப்பிட்டதையும் இந்த விருந்தினைப் புகழ்ந்து பாடியதையும் பார்த்திருந்தோம்.

பெருமளவான பாடல்களில் இந்த சோறு என்ற பதம் எம் மூதாதையரிடையே விளங்கி வந்திருக்கின்றது என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன.

குறிஞ்சி நிலத்தில் தினைச் சோறும், மலை நெல் அரிசிச் சோறும், மூங்கில் அரிசி சோறும், மருத நிலத்தில் வெண்நெல் அரிசிச் சோறும், செந்நெல் அரிசிச் சோறும் முல்லை நிலத்தில் வரகரிசி சோறும், சாமை அரிசிச் சோறும், பாலை நிலத்தில் புல்லரிசிச் சோறும், நெய்தல் நிலத்தில் செந்நெல் அரிசிச் சோறும், வேறு சில அரிசிச் சோறும் அருந்தியதாகக் கூறப்படுகின்றது.
இந்த ஐவகை நில மக்களும் தங்களுக்குள் அரிசியைப் பண்டமாற்றாகப் பெற்று சோற்றைப் பிரதான உணவாகச் சாப்பிட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று இந்த “சோறு” என்னும் பதம் எமது மக்களிடையே பேச்சு வழக்கில் குறைந்து வருகின்றது. தமிழ்நாட்டில் சாதம் என்ற சொல்லை உபயோகப் படுத்துகிறார்கள். சாதம் என்ற சொல் வட சொல் ஆகும்.
அத்தோடு இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் சோறு என்பதைத் தவிர்த்து “ரைஸ்” என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துவதையே நமது மக்கள் விரும்புகிறார்கள்.

அதை நாகரிகம் என்றும் நினைக்கின்றார்கள். சோறு என்று கூறுவதைத் தாழ்வாக நினைக்கின்றனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எமது முப்பாட்டன் கூறி வந்த “சோறு” எனும் சொல்லை வழக்கில் இருத்தி எம் பெருமையைக் காப்போம்.

ஜெயஸ்ரீ சதானந்தன்

 

சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More