போரில் இறந்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களின் பெயரும் பெற்ற வெற்றியும் அவர்களது பெருமைகளையும் பொறித்து கல் நட்டு வணங்கும் மரபு தொல்காப்பியர் காலத்திலிருந்தே வந்துள்ளதைப் பல சங்க இலக்கியப் பாடல்கள் எமக்கு சான்று பகர்கின்றன.
பல புறநானூற்றுப் பாடல்களிலும், அகநானூறு, பட்டினப்பாலை, ஐங்குறுநூறு, மலைபடுகடாம் போன்றவற்றிலும் நடுகல் வழிபாட்டு மரபினை நாம் காணலாம். இந்தப் பதிவில் சங்க இலக்கியப் பாடல்கள் வழி நமது நடுகல் வழிபாட்டுப் பண்பினை ஆய்ந்து நோக்கலாம்.
அகநானூறு 35
“நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்”
என அம்முவனார் எனும் புலவர் பாடுகின்றார். அதாவது காதலனுடன் சென்ற தன் மகளை நடுகல் தெய்வம் காப்பாற்ற வேண்டும் என்றும், நடுகல் கடிகை அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் அங்கு நடுகல் தெய்வத்தை உடுக்கு அடித்து வழிபடுவர். துரூஉ எனும்செம்மறி ஆட்டைப் பலி கொடுப்பர். அந்த வழியூடாக மகள் செல்கிறாள் எனப் புலவர் பாடுவதாக அது அமைந்துள்ளது. நம் முன்னோர் தாம் உண்பதை இறைவனுக்கும் படைத்து வந்தனர் என முந்தைய பதிவில் கண்டோம். அது போலவே இறந்த மக்களுக்காக நடுகல் நட்டு இறைவனாக நினைத்து தோப்பிக் கள்ளைப் படைத்து மயில் தோகை சூட்டி படையல் செய்து வழிபட்டு வந்திருக்கின்றனர்.
புறநானூறு 261
“நிரை இவண் தந்து நடுகல் ஆகிய”
என ஆவூர் மூலங்கிழார் பாடுகின்றார். ஆநிரைகளை (அதாவது போர் தொடங்கும் முன் எதிரி நாட்டு செல்வமான பசுக்களை போய் கவர்ந்து வருவர். அந்தப் பசுக்களை மீண்டும் போய் மீட்டுத் தருபவனே ஆநிரை மீட்டவன் ஆவான்.) மீட்டுத் தந்தவன் நடுகல் ஆகிவிட்டதால் அந்த மண்ணே தனிமைப்பட்டு கிடக்கின்றது என்று புலவர் கவலையோடு பாடுகின்றார்.
புறநானூறு 223
நடுகல்லாகியும் இடம் கொடுத்தான்.
பொத்தியார் எனும் புலவர்
“நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடம் கொடுத்து அழிப்ப”
என கோப்பெருஞ்சோழன் சோழன் பற்றி பாடுகின்றார். என் நண்பன் கோப்பெருஞ்சோழன் நடுகல் ஆன பின்னரும் விலகி இடம் கொடுத்தான். அவன் பலருக்கு வாழ்க்கை நிழலைத் தந்து வாழ்ந்தவன். உலகம் புகழ வாழ்ந்தவன் இந்தப் பெருவாழ்வை தொடர்ந்து நடத்த முடியாமல் வடக்கு இருந்து கல்லானவன் எனப் பாடுகின்றார்.
சோழன் இறந்த பின்பு வடக்கிருந்து உயிர் விடத் துணிந்த பிசிராந்தையாருக்கு நட்பின் காரணமாக அருகிலேயே இடம் அளித்தான் என வருகின்றது.
கோப்பெருஞ்சோழன் தன் மக்களால் ஏற்பட்ட பழிக்காக வடக்கிருந்தான். சோழனை நேரில் காணாமலேயே நண்பராக இருந்த பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்ததைக் கேள்வியுற்று அதே இடத்துக்கு வந்து அவருக்காக சோழன் விட்ட இடத்தில் வடக்கிருந்தார். இன்றளவும் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு எம்மிடையே பேசப்படுகின்றது .
இந்த “வடக்கிருத்தல்” என்பது ஏதாவது காரணத்திற்காக உயிர் துறக்கத் துணிந்து தூய இடம் சென்று வடக்கு நோக்கி இருந்து உணவு முதலியவற்றைத் துறந்து கடவுளின் நினைவோடு உயிர் விடுவது ஆகும். வடக்கிருந்த பல முன்னோர்களுக்காக நடுகல் நட்டு மக்கள் வழிபட்டது பற்றி பல பாடல்கள் வழி நாம் காணலாம்.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் அமைத்து வணங்கியதும் சிலப்பதிகாரத்தில் வருகின்றது.
ஆக வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் வேட்டை, ஆநிரை (பசுக்கள் )கவர்தல், ஆநிரை மீட்டல், போன்றவற்றில் வீரமரணம் அடைந்தவர்களுக்காகச் சிறுபாதைகளிலும் வண்டிப் பாதைகளிலும் கூட நடுகல் நாட்டி எமது மக்கள் வழிபட்டிருக்கிறார்கள்.
நடுகற்களுக்கு நாள்தோறும் தீபம் ஏற்றிப் பூசை செய்து வழிபட்டு இருக்கின்றனர். நெய் விளக்கேற்றி படையல் செய்திருக்கின்றார்கள். வேங்கை மரத்தின் நல்ல பூங்கொத்து பனையோலையில் தொடுத்து அலங்கரித்து இலை மாலை சூட்டி நடுகற்களை வணங்கி வந்திருக்கின்றார்கள் எனப் புறநானூறு கூறுகின்றது. மரல் (ஒரு கத்தாழை வகை) நாரில் தொடுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியையும் ( இரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கும் பூ மாலை) அழகிய மயிலினது பீலியையும் ( தோகை) சூட்டி பெயரும் பீடும் (பெருமை) எழுதிப் பெருமை செய்து வழிபட்டு இருக்கின்றார்கள் என்று மலைபடுகடாம் கூறுகின்றது.
நெல்லு பூவும் தூவி மணமக்களை வாழ்த்தினார்கள் என அகநானூறு 86 இல் கூறப்படுகின்றது. அது போலவே நெல்லும் பூவும் தூவி அந்த வீரமறவர்களுக்குப் பிடித்தவற்றைப் படைத்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள். தாம் நினைத்தது கைகூடவும் நல்வாழ்வுக்காகவும் மழை வேண்டியும் கூட இவர்கள் நடுகற்களை வணங்கி இருக்கிறார்கள். இன்றும் அதுபோலவே இறந்த எம் முன்னோரைத் தெய்வமாக வழிபட்டே காரியங்களைத் தொடங்குகின்றோம். இந்த நடுகல் வழிபாட்டு மரபு மாறாது இப்போதும் அதே வழி வந்த நாம் நடுகற்களை நாட்டி வழிபடுகின்றோம்.
தமிழீழத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் வீர மறவர்களுக்கான நடுகல் வழிபாட்டு மரபு இருந்து வந்தது. ஆனால் இலங்கை அரசு அகோரத் தனத்தோடு அனைத்து நடுகற்களையும் அழித்து விட்டாலும் சங்கத் தமிழன் வழி வந்த எம் நெஞ்சில் இருந்து அந்த மறவர்களை அழிக்க முடியுமா? அல்லது எம்மோடு கலந்த அந்த நடுகற்களை, நடுகல் வழிபாட்டை பெயர்க்கத் தான் முடியுமா?
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்