Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை குழந்தைகளின் மூளையைக் குறிவைக்கும் கேம்ஸ்கள்!

குழந்தைகளின் மூளையைக் குறிவைக்கும் கேம்ஸ்கள்!

5 minutes read

‘வளரும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பார்கள். ஆனால், அந்தப் பயிரை முளைக்கும்போதே கிள்ளி எறிந்துவிட்டால் எப்படி? ஆம், இன்றைய நிலையில் விஞ்ஞானம் எனும் பெயரில் குழந்தைகள் மத்தியில் கணினி வளர்ச்சி விஷத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது.

அவர்கள் ‘நெட்’ மூலம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை விட, மனதைக் கெடுப்பனவற்றைத்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுள் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்று ‘நெட்’டைத் திறந்தால் உலக விஷயங்கள் அனைத்தும் கொட்டிக் கிடக்கிறது. இதில் ஆற்றுத் தண்ணீரைவிட வேகமாகப் பரவும் தீயைப்போல் தீயவைகளும் வரிசையில் அணி வகுக்கின்றன. நல்லனவற்றைவிட கெட்டவைதனே இளம்தளிர்களை எளிதாகக் கவரும்.

பாலுணர்வைத் தூண்டும் விசயங்கள் ‘நெட்’டில் பாரபட்சம் இன்றி விதைக்கப்பட்டு இருப்பதால், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் எல்லாம் அதில் தங்கள் பார்வையைப் பதித்து விடுகிறார்கள். இந்த இணையதள வக்கிரத்தால்தான் பெருவாரியான தவறுகள் நிகழ்வதாக அண்மைக்கால ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக்காட்டுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உயிரை வாங்கும்…
அண்மையில் ‘புளூவேல்’ எனும் இணையதள விளையாட்டு எந்த அளவுக்கு இளைஞர்களை, இளம் பெண்களைப் பாதித்தது என்பதைக் கண்டிருக்கிறோம். பாதித்தது மட்டும் அல்ல; உயிர்களையும் பலிகொண்டுள்ளது என்பதை அறிகிறபோது பெற்றோர்கள் மனம் அலறித்துடிக்கத்தான் செய்கிறது. ‘நெட்’டை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த இறுதி விளையாட்டில் முடிவில் வெற்றி பெற்றது மரணம்தான்.

இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டு துணிந்து பலர் இறங்கி மீள முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்டு இருக்கின்றனர். விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் வேகமாகச் சுழலும் இன்றைய காலகட்டத்தில் கணினியின் அவசியம் உணரப்படுகிறது என்பது உண்மைதான். அதேவேளையில், அழிவுப் பாதைக்கு வழிவகுத்தால் எப்படி?

கையில் மொபைல்…
இன்று ஐந்து வயதுக் குழந்தைகூட மொபைலைத் தாறுமாறாகப் பயன்படுத்துகிறது. பெற்றோர்களே, இன்று குழந்தைகளுக்கு மொபைல் கொடுத்து விளையாட வைக்கிறார்கள்.

முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார வைத்தால் குழந்தைகள் பெற்றோர்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால், இன்று மொபைலைக் கையில் கொடுத்தால்தான் குழந்தையின் தொந்தரவு பெற்றோர்களுக்குக் குறைகிறது.

ஆகவே, குழந்தையின் கையில் மொபைலைக் கொடுத்து மகிழ்கிறார்கள் பெருவாரியான பெற்றோர்கள். அந்தக் குழந்தை மொபைலை அழுத்தும்போது நல்லதும் வரும், கெட்டதும் தெரியும். சிறுவயதிலேயே மொபைலைப் பயன்படுத்திய குழந்தைக்கு, தன் அடிப்படைத் தேவைகளில் ஒன்று மொபைல் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறது.

இதனால், பள்ளி செல்லும்போதுகூட மொபைல் தேவைப்படும் சூழல் ஏற்படுகிறது. ஆகவே, குழந்தையின் பக்குவத்தின் அடிப்படையில்தான் அதற்கான பொருட்களை நிர்ணயம் செய்ய வேண்டும். அதைவிடுத்துப் பத்து வயதில் ஒரு குழந்தை அழகாகக் கார் ஓட்டினாலும், அது சட்ட விதிமீறல் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

அதேபோல்தான் கணினி, மொபைல் போன்றவற்றில் உள்ள இணையதளப் பயன்பாட்டிலும் இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள்தான், அந்தப் பிள்ளைகள் வளரும்போதே தங்களுக்குத் தெரியாமலேயே அதளபாதாளத்தில் தள்ளி விடுகின்றனர்.

லேட்டஸ்ட் டிரண்ட்!
அன்றைய காலத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டு முதல் ஆடிப்பாடி, ஓடியாடி விளையாடும் விளையாட்டுகள் எனப் பலவகையான விளையாட்டுகளை விளையாடினார்கள்.

இதனால், உடலும் மனதும் ஆரோக்கியம் ஆனது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் நமக்குக் கிடைத்த சாபங்களில் ஒன்றுதான் கணினி விளையாட்டுகள். இன்டெர்நெட்டில் பலர் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள்தான் இந்தத் தலைமுறையின் லேட்டஸ்ட் டிரண்ட்.

வாழ்க்கையை விழுங்கும்…
சில கேம்ஸ்கள் அதை விளையாடுகிறவர்களின் முழு வாழ்க்கையையும் வளைத்துப் போடும். சில கேம்ஸ்கள் உயிரையே விலையாகக் கேட்கும். வீடியோ கேம்ஸ்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று தனி நபர் விளையாட்டு.

இதில் எதிரில் விளையாடுபவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் இந்த விளையாட்டுகள் முற்றிலுமாக முன்பே வடிவமைக்கப்பட்டு இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள சவால்களை ஒவ்வொன்றாக முடிக்கும்போது வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அடுத்த சவாலைச் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இன்னொரு வகையான விளையாட்டுப் பலர் சேர்ந்து விளையாடும் விளையாட்டு. இதனை ஆன்லைனில்தான் விளையாட முடியும். இதில் உங்களுக்கு என்ன ரோல், கேரக்டர் செய்ய வேண்டிய வேலை, செய்ய வேண்டிய முறை ஆகியவை சொல்லப்படும். நீங்கள் உங்கள் வேலையைச் செய்தால் அடுத்த லெவல்.

இதில் ஆபத்து இல்லாத விளையாட்டுகள் என்றும் பல வகை உண்டு. கராத்தே, குங்பூ போன்ற விளையாட்டுகள், டேரட் கார்டுகளைக் கொண்டு விளையாடும் விளையாட்டுகள், சினிமா நாயகர்களின் கார்டுகளை மையமாக வைத்து விளையாடும் விளையாட்டுகள், இளவரசியை மீட்டு வருதல், கொடூர மிருகங்களுடன் போரிடுதல் போன்ற சகச விளையாட்டுகள், கார் ரேஸ், பைக் ரேஸ், சைக்கிள் ரேஸ், சுடோகு போன்ற விளையாட்டுகளை இணையதளத்தில் இருக்கின்றன. இவைகள் ஆபத்தில்லாதவை.

எப்போதாவது குழந்தைகளின் மனம் சோர்ந்திருக்கும் நேரத்தில் விளையாடினால் உற்சாகம் கிடைக்கும். குழந்தைகளின் மூளையின் செயல்திறன் மேம்படுத்த சுடோகு, செஸ் போன்ற விளையாட்டுகள் பயன்படும்.

குழந்தைகள் மனம் ஓர் குறிப்பிட்ட சூழ்நிலையில் தொடர்ந்து இருக்கும்போது அவர் ஓர் கட்டுக்குள் அடங்கி, முடங்கி இருக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கு ஓர் விளையாட்டுப் பிடித்துவிட்டால் பசி, தூக்கம் பாராமல் அதிலேயே ஆழ்ந்து போகின்றனர்.

இதுபோன்ற வீடியோ கேம்ஸ்களை விளையாடும்போது ஒரு கட்டத்தில் மூளை அதற்கு அடிமையாகி விடுகிறது. அந்த விளையாட்டில் என்ன நிபந்தனையாக இருந்தாலும் அதைச் செய்ய குழந்தைகள் தயாராகி விடுகின்றன.

கொலை முதல் தற்கொலை வரை சகலவிதமான பாதகங்களுக்கும் மனம் தயாரகி விடுகிறது. வீடியோ கேம்ஸ்கள் விளையாடாமல் இருக்க முடியாது எனும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இப்படி ஆழ்ந்துபோய் கேம்ஸ் விளையாட்டில் வீழ்ந்து கிடப்பவர்களை ‘கேம்ஸ் அடிக்ட்’ என்றே சொல்லலாம்.

உளவியல் சிக்கல்…
ஒது ஒரு தீவிரமான உளவியல் சிக்கல். இந்தப் பழக்கம் தீவிரமானால் மருத்துவரைத்தான் பார்க்க வேண்டியிருக்கும்.

போதை அடிமைகள், மது அடிமைகள் போன்ற தீவிரம் இதில் இல்லையென்றாலும் மூளையை வேலை செய்ய விடாமல் ஒரே நிலைக்குள் வைத்திருகும் சக்தி இதுபோன்ற கணினி விளையாட்டுகளுக்கு உண்டு.

இதுபோன்ற இணையதள விளையாட்டுகளை விளையாடுகிறபோதும் மட்டுமின்றி, விளையாடாத போதும் சதா அந்த நினைவோடு குழந்தைகள் இருந்தால் அதற்கு அவர்கள் அடிமையாகி விட்டார்கள் என்று அர்த்தம். இதுபோன்ற முறையற்ற கேம்ஸ்களில் இருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி என்பதுதான் பெற்றோர்கள் தவிப்பாக இருக்கிறது.

விளையாட்டின் விபரீதம்
தொடர்ந்து குறிப்பிட்ட நேரம் விளையாடவில்லை என்றால் சலிப்பு, வெறுப்பு, எரிச்சல், கோபம், சோகம் எல்லாம் சூழ்ந்துகொள்ளும்.

அவர்கள் மனமே அவர்களை வெல்லும்! ஒவ்வொரு முறை விளையாடும்போதும் அதற்கான நேரத்தை அதிகரித்துக்கொண்டே போவது, இன்னும் இன்னும் என்று நேரத்தை நகர்த்திச் சலிக்காமல் விளையாடுவது என்பதெல்லாம் அவர்களின் தூக்கத்தையே தொலைக்க வைத்துவிடும்.

விளையாடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதைச் செய்யவிடாமல் மனதுக்குள் தீவிரமாகிவிட்ட கேம்ஸ் எனும் ஓநாய் குரைத்துக்கொண்டே இருக்கும். தினசரி செய்ய வேண்டிய செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்வது, தள்ளிப்போடுவது போன்றவை இந்த விளையாட்டின் மறைமுக உணர்வாக மாறும்.

இந்த விளையாட்டின் மூலம் தூக்கம் பாதித்தாலும், வேலை பாதித்தாலும், வருமானம் பாதித்தாலும், உறவுகள் பாதித்தாலும்… இதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால், முன்னேறவிடாமல் அந்தத் தீவிரமான ‘கேம்ஸ்’ எனும் நண்டுதான் பின்னால் இழுத்துக்கொண்டு இருக்கிறதே!

பிரச்சனைகளைப் புறந்தள்ளி…
குழந்தைகளுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் ஏன் வீடியோ கேம்ஸ் விளையாடும் பெற்றோர்களுக்கும் கூட எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்.

ஆனாலும், தங்கள் பிரச்சனைகளை வீடியோ கேம்ஸ் விளையாடுவதன் மூலம் திசை திருப்பிக் கொள்வார்கள். வெற்றி முனையில் இருந்து தன்னைப் பொழுதுபோக்கு திசைக்குத் திருப்பிக் கொள்வார்கள்.

தங்கள் வாழ்வில் மோகன ராகத்தைவிட முராரி ராகத்தையே வரவழைத்துக் கொள்வார்கள். யாராவது இதுபற்றிக் கேட்டால், தன்னைப் பார்த்துக் கேட்காததுபோல் ஒன்றும் தெரியாத ஊமைபோல் நடந்து கொள்வார்கள். ‘செவிடன் காதில் சங்கு’ கதைதான் இது!

வாய்ப்புகளைத் தவிர்ப்பது, நல்ல வாய்ப்பு வந்தாலும் அதை ஏற்க முடியாமல் தவிப்பது, புதிய மனிதர்களை, புதிய உறவுகளைப் புறந்தள்ளுவது, புதிய பொறுப்புகள் கிடைத்தாலும், அதில் வெறுப்பைக் காட்டுவது போன்ற நிகழ்வுகள் இந்த ‘கேம்ஸ்’ நோயாளிகளால் நிகழும்.

அக்கறை காட்டாதவர்கள்…
குழந்தைகளும், வளர்கின்ற இளம் பருவத்தினரும் இந்த கேம்ஸ் விளையாட்டால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஒடியாடி விளையாடும் விளையாட்டுகளை பெரும்பாலான டாக்டர்கள் பரிந்துரைக்க முனைப்புக் காட்டுவதில்லை.

காரணம், குழந்தைகள் ஆரோக்கியமாகி விடுவார்களோ, தங்கள் வருமானம் குறைந்துவிடுமோ என்கின்ற கவலைதான்! குழந்தைகளிடமும், சிறுவர்களிடமும் வீடியோ கேம்ஸ் பழக்கம் ஏற்படும்போது அவர்கள் ஓடியாடி விளையாடுவதற்கான நேரமின்மை ஏற்படுகிறது.

இதனால், அவர்கள் உடம்பில் வளர்சிதை மாற்றம் பாதிக்கிறது. மேலும், தொடர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் மூளையில் ஏற்படும் ரசாயான மாற்றங்கள் அவர்களைப் பாதிக்கின்றன.

நமது நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத நிலையில் இப்போது குழந்தைகளுக்கும் ‘ஒபிலிடி’ எனப்படும் உடல்பருமன் நோய் அதிகரித்துக்கொண்டே போகிறது. எனவே பெற்றோர்களே! குழந்தைகளுக்குத் தினமும் ஒரு மணிநேரம் மட்டுமே வீடியோ கேம்ஸ் விளையாட அனுமதியுங்கள்.

அந்த ஒரு மணி நேரத்தைத் தாண்டி அவர்கள் ஓடிக்கொண்டு இருந்தால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை சூனியத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது!

நன்றி – தாமிரவர்ணி

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More