பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு, கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.
வேரவில், கிராஞ்சி, பூநகரி, நல்லூர், சாமிப்புலம், நீவில், குஞ்சுப்பரந்தன், செருக்கன், பெரிய பரந்தன், கண்டாவளை, கரவெட்டித்திடல் யாவும் வன்னிப் பெருநிலப்பரப்பில் மிகப் பழமை வாய்ந்த கிராமங்கள். இக்கிராமங்களில் சிறிய குளங்கள், கேணிகள், பள்ளங்கள், மோட்டைகள் பல காணப்பட்டன. இவற்றில் பழமையை வானளாவ உயர்ந்து நின்ற பனை மரங்கள் பறைசாற்றின. ஆனால் இப்போது அப்பனைச் செல்வத்தில் தொண்ணூறு வீதம் அழிந்து போய் விட்டன. இக்கிராமங்கள் யாவும் சுய நிறைவு பெற்ற கிராமங்களாகத் திகழ்ந்தன.
காட்டுவளம்
இக்கிராமங்களைச் சூழக் காட்டு வளம் அமைந்திருந்தது. வேட்டையும் இக்கிராம மக்களின் ஒரு தொழிலாகத் திகழ்ந்தது. உடும்பு, முயல், பன்றி, மரை, மான் போன்ற மிருகங்களின் சுவை மிக்க இறைச்சி வகைகள் இக்கிராமத்தவரைத் திடகாத்திரமாக வைத்திருந்தன. அவர்களால் வளர்க்கப்பட்ட ஆடு, பசு, கோழி, எருமை போன்றன அவர்களின் செல்வத்தின் அளவுகோலாக இருந்தது.
பனங்கிழங்கு, ஒடியல், பனாட்டு, ஒடியல் மாப்பண்டங்கள் இவர்களை மேலும் வலுவுள்ளவர்கள் ஆக்கிற்று. காட்டு மரங்களாலும், தடிகளாலும், பனைமரங்களாலும் வீடுகளை ஆக்கிக் கொண்டார்கள்.
கடல்வளம்
கடல்வளமும் இவர்களுக்கு மிக அருகே காணப்பட்டது. மீன், இறால், நண்டு, திருக்கையென கடல் உணவும், நன்னீரில் வளர்ந்த விரால் போன்ற மீன்களும் உணவாகப் பயன்பட்டன.
பதின்ம வயதினர் காடை, கௌதாரி, காட்டுக் கோழி போன்றவற்றை வேட்டையாடி உணவிற்கு மேலும் சுவையூட்டினர்.
முட்டை, பால், தயிர் போன்றவை அபரிதமாக உற்பத்தியாயின. தேன், நெய் போன்றவற்றை எடுத்துச் சென்று சந்தைப்படுத்தலும் ஒரு தொழிலாயிற்று.
ஆனால் நெற்செய்கை, மந்தை வளர்ப்பு, மீன்பிடி என்பனவே இக் கிராம மக்களின் பிரதான தொழில்களாகும். உளுந்து, பயறு, எள்ளு, வரகு, சாமை போன்ற பயிர்களையும் காலமறிந்து பயிர் செய்தனர்.
கிராமங்களின் அமைவு
கிராஞ்சி, வேரவில், பூநகரி, நல்லூர், சாமிப்புலம் போன்ற கிராமங்கள் பின்தங்கிய பூநகரி பிரதேச செயலரின் கீழ் வருவதால் அவை இப்போது முன்னேற்றப் பாதையில் செல்வதை அவதானிக்கலாம். கண்டாவளை, கரவெட்டித்திடல் போன்ற கிராமங்கள் கண்டாவளைப் பிரதேசச் செயலர் பிரிவில் உயர்ச்சி அடைந்து வருகின்றன.
ஒரு காலத்தில் பரந்தன் கிராம விதானை பிரிவிலும் பின்னர், பரந்தன் கிராமசேவையாளர் பிரிவிலும் இருந்த குஞ்சுப்பரந்தன், செருக்கன், பெரியபரந்தன் கிராமங்களை தற்போது வெவ்வேறு கிராமசேவையாளர் பிரிவுகளுக்கு மட்டுமல்ல வெவ்வேறு பிரதேசசெயலர் பிரிவுகளுக்கும் சென்று விட்டன. குஞ்சுப்பரந்தன், செருக்கன், உருத்திரபுரம் கிராமசேவையாளர் பிரிவிற்கும் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவிற்கும் சென்றன. பெரிய பரந்தன், பரந்தன் கிராமசேவையாளர் பிரிவிற்கும் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்கும் சென்றது. ஏனைய கிராமங்களோடு பலவிதத்திலும் ஒத்திருந்த பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன் கிராமங்களிற்கு 1953, 1954ம் ஆண்டுகளின் டி8, டி10 உருத்திரபுரம் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு முழுமையாகச் செயற்படும் வரை 8ம் வாய்க்கால், 10ம் வாய்க்கால் தண்ணீர் ஏகபோக உரிமையாக இருந்தது. இதனால் இந்த இரண்டு கிராமங்களிலும் முப்போகம் நெற்செய்கை பண்ணப்பட்டது. அதனால் வளமும் கொழித்தது.
எருமை மாடுகளின் பயன்
உழவுக்குப் பெரும்பாலும் எருமை மாடுகள் பயன்பட்டன. அவை ஒன்றன்பின் ஒன்றாக சால் கட்டி உழும் அழகே அழகு. அனுபவம் வாய்ந்த முதிர்ந்த எருமையை அனுபவசாலியான உழவர் முன்னே செலுத்த ஏனையவை அவரின் பின்னே அணி வகுத்துச் சென்றன. மக்கள் எருமைப் பசுக்களை உழவிற்குப் பயன்படுத்தாத பண்பு கொண்டவர்களாக இருந்தனர். நாம்பன்கள் மட்டுமே உழவிற்குப் பயன்படுத்தப்பட்டன.
பலகை அடித்தல்
தெரிவு செய்யப்பட்ட விதை நெல்லை நல்லநேரம் பார்த்து நீரில் ஊறப்போட்டு அவை முளை வந்த பின் பலகை அடித்து மட்டம் தட்டப்பட்ட கூழான மண்ணின் மேல் முளை நெல் விதைக்கப்பட்டது. கிராமத்தவர் யாவரும் ஒன்று சேர்ந்து வயல்களின் மேட்டுத் தன்மை, பள்ளம் இனங்கண்டு கூட்டு முறையிலேயே பலகை அடித்து விதைத்தார்கள்.
பலகையடித்தல் மிகவும் கோலாகலமாக நடைபெறும். யாரின் காணியில் பலகை அடிபடுகின்றதோ, அவர் வீட்டில் கிராமத்தின் ஏனையவர்களுக்கும் சாப்பாடு. காலை தோசை, சம்பல், மதியம் ஒரு பெரிய கிடாரத்தில் சோறு, ஒரு பெரிய சட்டியில் மீன் அல்லது இறைச்சிவத்தலும் கத்தரிக்காயும் போட்ட கறி, ஒரு சொதி. சிறுவர்கள் பாடு ஒரே கொண்டாட்டம் தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்வார்கள். பலகை அடிக்கும் போது பலகையை அழுத்த சுமை தேவைப்படும். அநேக சந்தர்ப்பங்களில் என்னைச் சுமையாகப் பயன்படுத்துவர். மண் நீர்மட்டத்திற்கு மேல் தெரியும் இடங்களில் பலகையில் ஏறி நின்று அம்மண் திடலை அமத்தி விட வேண்டும்.
பன்றி, மான், மரை, யானை முதலியவற்றினால் ஏற்படும் அழிவைத் தடுக்கும் காவல் கடமை
பலகை அடித்து முதல் மூன்று நாட்கள் “சிறகை” என்றொரு வகைச் சிறிய தாராக்களிலிருந்து நெல்லைக் காப்பாற்ற வேண்டும். ஒரு வயலில் சிறகைக் கூட்டம் இறங்கினால் அந்த வயலின் முளை நெற்கள் யாவற்றையும் குடித்து விட்டுச் சென்று விடும்.
பயிர் முளைத்து அறுவடை வரை பறவைகள் மிருகங்களிலிருந்து அவற்றைக் காப்பாற்றுதல் மிகப்பெரிய கடமையாகும்.
நெல் முற்றும் காலத்தில் பகலில் மயில், கௌதாரி போன்றவை கூட்டமாக வந்து அழிவை ஏற்படுத்தும். பால் பிடிக்கும் காலத்தில் பச்சைக்கிளிகள் கூட்டமாக வந்து நெல்லின் பாலைக் குடித்துச் சென்று விடும்.
இரவில் யானை, பன்றி, மான், மரை, குழுவன் மாடுகளினால் பெரும் அழிவு ஏற்படும். இதற்காக ஒவ்வொரு விவசாயியும் காட்டுக் கரைகளில் காவல் கொட்டில், காவற்பரண் அமைத்து இரவில் அதில் தங்கி மணிகளை அடித்து விலங்குகளை விரட்டுவார்கள்.சீன வெடிகளைக் கொளுத்தி எறிவார்கள். விவசாயிகளின் நன்மைக்காக அரசாங்கம் ஒவ்வொரு விவசாயிக்கு ஒவ்வொரு துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் என வழங்கி அவர்களுக்கு ஒவ்வொரு துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை வழங்கியது. சில சந்தர்ப்பங்களில் காவல் கடமையிலிருக்கும் போதே பன்றி வேட்டை வாய்த்து விடும். மான், மரை, யானை போன்றவற்றைச் சுடுதல் சட்டப்படி குற்றம்.
தமது பரண், காவற் குடிலைச் சுற்றி காட்டு மரங்களைப் போட்டு எரித்து விடுவார்கள். காட்டு மிருகங்கள் நெருப்புக்கு அஞ்சி பரண், குடிலை நாடுவதில்லை. ஓரிரவு காவற் கடமையிலிருந்த நான் காலை இரண்டு மணியளவில் அயர்ந்து தூங்கிவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் பரணுக்கு மிக அருகில் இருந்த வயல் யானைக் கூட்டத்தால் துவம்சம் செய்யப்பட்டிருந்தது. வரம்பில் யானை லத்தி சூடாகக் காணப்பட்டது.
காவற்கடமையின் போது சில விவசாயிகள் மணி அடிப்பதுடன் நன்கு இராகம் எடுத்துப் பாடுவர். ஒரு காவற்காரர் மணியடிக்க, பக்கத்திலுள்ளவன் தாமும் முழிப்பு என அடுத்து அடிக்க, அடுத்தவர் தொடர இரவு பயத்துடன் ஒருவித இனிமை கலந்ததாக இருக்கும். மணியடித்த இடைவெளியைக் கருத்தில் கொண்டு எந்தக் காவற்காரர் நித்திரை கொண்டு விட்டார், எந்த நேரத்தில் என்று துல்லியமாகக் கூறி விடுவார்கள்.
தொடரும் …