உலங்குவானூர்தியில் குழந்தையைப் பிரசவித்த கொரோனா பாதிப்புக்குள்ளான பெண்

இத்தாலியின் லம்பெதுசா தீவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அவர் பிரசவத்திற்காக உலங்குவானூர்தி மூலம் அழைத்துச் செல்லப்படும் போது அதில் குழந்தையைப் பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் தீவிரம் பெற்றுள்ள நிலையிலும் வடக்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இவ்வாறானவர்கள் தரையிறங்க அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய நாடுகளிடம் மனிதாபிமான கோரிக்கையை விடுத்துள்ளது.

இதற்கமைய இத்தாலிய கடலோர காவற்படையால் காப்பாற்றப்பட்ட 353 சட்டவிரோத குடியேறிகள் நேற்று முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், அங்கிருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

எனவே, அவரை பாதுகாப்பான பிரசவத்திற்கு அனுமதிக்கும் வகையில் வைத்தியசாலைக்கு மாற்ற அதிகாரிகள் தீர்மானித்தனர். உடனேயே மாற்ற வேண்டிய தேவையிருந்ததால், உலங்குவானூர்தியில் அப்பெண் ஏற்றப்பட்டார். ஒரு மணி நேர பயணத்தின் இடையில் குறித்த கர்ப்பிணி குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

தற்போது, தாயும் சேயும் நலமுடன் வைத்தியசாலையில் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த சட்டவிரோத குடியேற்றவாசி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விபரம் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆசிரியர்