நியூஸிலாந்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு ஒருவர் உயிரிழப்பு

நியூஸிலாந்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு ஒருவர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

ஒக்லாந்தின் மிடில்மோர் மருத்துவமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 50 வயதான ஒருவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நபர் நியூஸிலாந்தில் கொவிட்-19 தொற்றினால் இறந்த இளையவர் என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் ஒக்லாந்தில் தோன்றிய இரண்டாவது அலை தொற்றுநோய்களின் ஒரு பகுதியாக இந்த நபர் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உயிரிழப்பு, நியூஸிலாந்தின் உயிரிழப்பு எண்ணிக்கையை வைரஸிலிருந்து 23ஆகக் கொண்டு சென்றுள்ளது. முன்னதாக மே 24ஆம் திகதி உயிரிழப்பு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுகாதாரத் தலைவர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நியூஸிலாந்தர்கள் இன்றைய செய்திகளைப் பற்றி கவலைப்படக்கூடும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பரந்த சமூகத்திலும், இந்த உயிரிழப்பு குறித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் துக்கப்படுகிறார்கள்.

இழப்பு மற்றும் வருத்தத்தின் இந்த நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் சமூகத்துடனும் உள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் பசிபிக் தேசத்தில் 102 நாட்கள் சமூக பரவல் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த ஒகஸ்ட் மாதம் ஒக்லாந்து நகரில் கொவிட்-19 பரவல் ஏற்பட்டது.

நியூஸிலாந்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 2 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மேலும் 3 பேர் ஒக்லாந்து சமூக பரவலால் பாதிக்கப்பட்டவர்கள்.

ஆசிரியர்