இறையாண்மையை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குகின்ற இலங்கைக்கு பாராட்டுக்கள்

தேசிய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குகின்ற இலங்கையின் தீர்மானத்தை வரவேற்பதாக எகிப்து தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான எகிப்திய தூதுவர் ஹுசைன் அல் சஹார்டி, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியமைக்கு இலங்கைக்கு பாராட்டையும் தெரிவித்தார்.

மேலும், இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாகப் பேணப்பட்டுவரும் இருதரப்பு நல்லுறவு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் 1957ஆம் ஆண்டில் இலங்கையுடன் தனது இராஜதந்திரத் தொடர்புகளை ஆரம்பித்த முதலாவது ஆபிரிக்க அரேபிய நாடாக எகிப்து விளங்கியமை குறித்து நினைவுகூரப்பட்டது.

இதன்போது, தற்போதைய சூழ்நிலையில் இரு நாடுகளுமே அடிப்படைவாதம், கொரோனா பரவலின் பின்னரான பொருளாதார நெருக்கடிநிலை, சுற்றுலாப் பயணத்துறையின் பின்னடைவு, காலநிலை மாற்றம், போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற ஒரேவிதமான சவால்களை எதிர்கொண்டிருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், அவற்றை முறியடிப்பதில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை அமைச்சர் எகிப்திய தூதுவரிடம் வெளிப்படுத்தினார்.

ஆசிரியர்