எல்லைப் பிரச்சினையை தணிக்க 5 அம்ச உடன்படிக்கை

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையை தணிக்க 5 அம்ச கோரிக்கைகள் கொண்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதே மாநாட்டில் பங்கேற்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங்–யீயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போதே மேற்படி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நீடித்து வரும் பதற்றம் மிக்க சூழலை தணிப்பது குறித்து இருநாட்டு அமைச்சர்களும் இதன்போது ஆலோசனை நடத்தினர்.

சீனாவைக் குறித்த இந்தியாவின் அரசுகொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், எல்லையில் பதற்றமான சூழ்நிலை நீடிப்பதை இந்தியா விரும்பவில்லை எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முன்வரிசையில் உள்ள படைகளை இருதரப்பினரும் உடனடியாக திரும்பப் பெற்றால் பதற்ற நிலை தணியும் என சீன வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு தற்போது திசைதவறிவிட்டதை சீனா ஒப்புக்கொண்டுள்ளதுடன் இருதரப்பினரும் சரியான அணுகுமுறையைக் கையாண்டால் மீண்டும் உறவுகள் புதுப்பிக்கலாம் என்றும் சீன அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்