Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம்!

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம்!

3 minutes read

சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், வெளிநாட்டில் உள்ள தமிழர் நலனுக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக தமிழினம்தான் இருக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம் செய்வதற்காக சென்றார்கள், வாழ்வதற்காக சென்றார்கள், வேலை தேடி சென்றார்கள், கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காக சென்றார்கள். புதிய இடங்களை அறிவதற்காக சென்றார்கள். இப்படி பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும். இத்தகைய இடப்பெயர்வுகள் காலம்காலமாக நடந்து வருகின்றன.

எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்தமிழ்நாட்டின் கடமையாகும். இப்படி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ்மக்களின் பிரச்னைகளை தீர்க்கவும், உதவிகளை செய்யவும் தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர் நலன் காக்க, ”புலம்பெயர் தமிழர் நலவாரியம்” அமைக்கப்படும். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரை கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும். ரூ.5 கோடி, “புலம்பெயர் தமிழர் நலநிதி’’ என மாநில அரசின் முன்பணத்தை கொண்டு இந்த வாரியம் உருவாக்கப்படும்.

  • மூலதன செலவினமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும்.
  • புலம்பெயர் தமிழர் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம்,அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.
  • வெளிநாட்டிற்கு செல்லும் குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கப்படும்.
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக தமிழர்கள் புலம்பெயரும்போது, பயண புத்தாக்க பயிற்சி சென்னை மட்டுமின்றி, இனி ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் நடத்தப்படும்.
  • வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலைதளம், கைப்பேசி செயலி அமைத்து தரப்படும்.
  • “கோவிட் 19” பெருந்தொற்று காரணமாக சுமார் 7 லட்சம் தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பலர் வேலையிழந்தும் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • வெளிநாடுவாழ் தமிழர்களில் பெரும்பாலானோர் தங்களது சேமிப்பினை தாய்நாட்டில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, இவர்களது முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.
  • புலம்பெயர்ந்த தமிழர்கள், தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், ஊர்மக்களின் கல்வி மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திடவும் ”எனது கிராமம்” என்கின்ற திட்டம் துவங்கப்படும்.
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று அங்கே நிரந்தரமாக குடியுரிமை பெற்றுள்ள தமிழர்களின் வாரிசுகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை உருவாக்கிடவும், தமிழ்மொழியினை கற்றிட ஏதுவாகவும், தமிழ் பரப்புரை கழகம் மற்றும் தமிழ் இணைய கல்வி கழகம் மூலமாக குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படும்.
  • புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும். இச்சங்கங்களின் மூலமாக நம்முடைய கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு பரிமாற்றங்கள் நடைபெறும். இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கப்படும்.
  • பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் ”புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாகக்’’ கொண்டாடப்படும்.

வெளிநாட்டில் உள்ள தமிழர் நலனை பேணிட, புலம்பெயர் தமிழர் நல வாரியம் மற்றும் புலம்பெயர் தமிழர் நலநிதிக்காக ரூ.6 கோடியே 40 லட்சம், அவர்களுக்கான நலத்திட்டங்களுக்காக ரூ.8 கோடியே 10 லட்சம் மற்றும் வெளிநாட்டில் தமிழ் கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்து பரிமாற்றத்திற்காக ரூ.5 கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தொண்டு செய்வாய் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே என்ற வாசகத்தை நெஞ்சில் நிலைநிறுத்தி, கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு என்றென்றைக்கும், உலக தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விளக்காகவும், அவர்களின் உற்றதோழனாகவும் விளங்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More