அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் எங்களது உறவுகள் போன்றே காணாமல் போகின்றன

கடந்த பதினொரு வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகின்றோம். இதில் கடந்த நான்கு வருடங்களாக வீதியில் நின்று போராடுகின்றோம். இந்த காலத்தில் பிள்ளைகளை தேடிய 74 அம்மாக்கள் இறந்துள்ளனர். ஆனால் எங்களது விடயத்தில் தமிழ் அரசியல் வாதிகள் கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் உறுதிமொழிகள் என்பன எங்களது உறவுகள் போன்றே காணாமல் போய்விடுகின்றன. என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.

புதிய அரசு உருவாகியுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் மாபெரும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

ஆம்,நாங்கள் முகாம்களிலிருந்து வெளியேறி வந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி பல உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஊடாக தேடிவந்தோம் அனால் அதன் மூலம் எங்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் நாம்; எங்களது உறவுகளை தேட தனித்துவமாக போராட வேண்டும் எனத் தீர்மானித்து 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் 20 ஆம் திகதி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம். அன்றிலிருந்து இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி வீதிகளில் போராடி வருகின்றோம். நான்கு வருடங்களாக வடக்கு கிழக்கில் நாம் போரடி வருகின்றோம்.

ஜனநாயக ரீதியாக போராடுகின்ற உறவுகளுக்கு இந்த ஆட்சி மாற்றம் ஒரு பயத்தை, அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் கூட யுத்தம் முடிவுக்கு வந்த போது ஆட்சியில், அதிகாரத்தில் இருந்தவர்கள்தான் இன்று ஆட்சியில் இருக்கின்றார்கள். இவர்கள் கடந்த 2015 வரை ஆட்சியில் இருந்தார்கள் இந்தக் காலத்தில் எங்களது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் அவர்கள் எவ்விதமான தீர்வையும் தரவில்லை. எங்களது உறவுகளை மீள ஒப்படைக்கவில்லை.

அதன் பின்னர் நல்லாட்சி அரசிடமும் எங்களது கோரிக்கைகளை முன் வைத்து உறவுகளை தாருங்கள் என கோரினோம். அவர்களும் தங்களது பதவிக் காலத்தில் பதவியை தக்க வைத்துக்கொண்டார்களே தவிர எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தில் புதிய ஜனாதிபதி யுத்தம் முடிவுக்கு வந்த போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் பொறுப்பேற்றுள்ளார், அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் இப்போது பிரதமராக இருக்கின்றார் இந்த நிலையில் யுத்தம் முடிந்து 10 வருடங்களை கடந்தும் எந்த தீர்வையும் தராத அரசு இனியும் எங்களது விடயத்தில் தீர்வை தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கில்லை.

எனவேதான் நாம் சர்வதேசத்தை நோக்கி குறிப்பாக ஜநாவை நோக்கி எமது போராட்டத்தை முன்னெடுத்தோம். ஜநாவின் 36 வது கூட்டத்தொடரிலிருந்து எமக்கான நீதியை கோரி ஜநா முற்றத்தில் நின்றும் போராடி வருகின்றோம். ஆனால் ஜநாவும் இலங்கை அரசை காப்பாற்றும் நோக்கில் இரண்டு வருடகால அவகாசத்தை இரு தடவைகள் வழங்கியுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசை காப்பாற்றி எமக்கான தீர்வை இழுத்தடித்து வருகின்றார்கள்.

இந்த ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் நாம் சர்வதேசத்திடமே எமது கோரிக்கையினை முன்வைத்து எமது விடயத்தில் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று எமக்கான தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் மட்டகளப்பிலும் எமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு சர்வதேசம் மீது எந்தளவுக்கு நம்பிக்கையுள்ளது?

எங்களுக்கு வேறு வழியில்லை சர்வதேசமே எங்களது ஒரேயொரு நம்பிக்கை. இலங்கை அரசு எமக்கான தீர்வினை வழங்காது என்பது தெட்டத்தெளிவாக தெரியும். யுத்தம் முடிந்த போது 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வு அளித்து சமூகமயமாக்கியதாக கூறுகின்றார்கள். ஆனால் அவர்களில் பலர் இன்னும் குடும்பத்தோடு இணையவில்லை, போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்று கூறுகின்றார்கள். இவற்றையெல்லாம் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்காது சர்வதேசம் நிச்சமாக நல்லதொரு தீர்வை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

அத்தோடு எங்களது புலம்பெயர் உறவுகள் அங்கேயே பிறந்து வளர்ந்த எமது உறவுகள் அந்தந்த நாடுகளில் பல காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.உதாரணமாக கனடாவில் நீதிக்கான நெடும் பயணம் எனும் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளனர் 500 கிலோமீற்றர் தூரத்திற்கு நடக்கவிருக்கின்றார்கள். இவ்வாறு பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மன் என பல நாடுகளில் எமக்கு ஆதரவாக போராட்டங்களை நடாத்த முன்வந்திருகின்றார்கள். இதுவும் எங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் சர்வதேச நாடுகள் ஏனைய பல நாடுகளில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம், இன அழிப்பு யுத்தங்களின் போது தலையிட்டு நீதியை பெற்றுக்கொடுத்துள்ளனர் அந்த வகையில் எமது விடயத்திலும் அவர்கள் தலையிட்டு நீதியை பெற்றுத் தர வேண்டும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கடந்த 10 வருடங்களாகச சர்வதேச அமைப்புக்கள், மற்றும் சர்வதேச நாடுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் எந்த தீர்வையும் பெற்றுதரவில்லை. இந்த நிலையில் எந்த அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வருகின்றீர்கள்?

இதுவரை எதுவும் செய்யாத போதும் எங்களுடைய ஒரேயொரு நம்பிக்கை சர்வதேசமே. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவே எங்களுக்கான நீதி கிடைக்க முடியும். எனவே சர்வதேசம் தொடர்ந்தும் இலங்கை அரசை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை விடுத்து பாதிக்கப்பட்டு நீதி கோரி போராடிவருகின்ற எங்களுக்கு நீதியை பெற்றத் தருகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எங்களுடை விடயம் சர்வதேச பரப்பில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே நம்பிக்கை அவர்களே.

ஜநா உட்பட சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனரா?

அப்படி நாங்கள் அறிந்ததாக இல்லை. ஜநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தவிர வேறு எதுவும் நடந்ததாக இல்லை. அந்த தீர்மானமும் மூலமும் எமக்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.?

நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அரசு எதுவும் செய்யவில்லை. மாறாக நாம் ஏற்றுக்கொள்ளாத காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை உருவாக்கினார்கள். அதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடித்து தருவதாக தெரிவித்தார்கள். எங்களது விருப்பத்திற்கு மாறாக எங்களோடு பேசாது தாங்களாகவே மாத்தளையிலும், மன்னாரிலும், யாழ்பாணத்திலும் அந்த அலுவலகத்தை திறந்தார்கள். அந்த அலுவலகம் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தை காணாமல் போகச் செய்வதும், மரணச்சான்றிதழ் வழங்கவும், இடைக்கால நிவாரணத்தை வழங்கவும் முன் வந்தார்கள் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ் அரசியல் தரப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தை முன்னிலைப்படுத்தி பேசி வருகின்றார்கள், உறுதிமொழிகளை வழங்குகின்றார்கள். எனவே அவர்கள் இந்த விடயத்தில் என்ன ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.?

ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும், எங்களுக்கு உறுதிமொழிகளை அளித்தார்கள். ஆனால் அந்த உறுதிமொழிகள் தேர்தலில் வாக்குறுதிகளை பெறுவதற்கு மட்டும்தான். அதன் பின்னர் அந்த உறுதிமொழிகள் எங்களது உறவுகள் போன்று காணாமல் போய்விடும். எங்களது பிரதிநிதிகளுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைத்திருந்தன. ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் நழுவவிட்டுவிட்டார்கள். எங்களுடைய பிரதிநிதிகளும் அரசை காப்பாற்றும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டனர். அரசு ஏமாற்ற இவர்களும் ஏமாந்தார்கள். அரசு தன்தை காப்பாற்ற எங்களது பிரதிநிதிகளை பயன்படுத்தினார்களே தவிர மாறாக எங்களுடைய பிரச்சினைகளை முன்னிருத்தி தீர்வை நோக்கி செல்லவில்லை. இந்த தேர்தலில் மக்களும் அதனை புரிந்துகொண்டு அதனை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே இனிவரும் காலங்களில் என்றாவது தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் எங்களது விடயத்திலாவது பிரிந்து நில்லாது ஒருமித்து ஒற்றுமையாக நின்று செயற்பட வேண்டும். இன்றைய அரசு முன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் உள்ளது எனவே இந்த நிலையில் எங்களுடைய பிரதிநிதிகள் அனைவரும் ஒற்றுமையாக நின்று செயற்பட்டு எங்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுத்தர உழைக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு அதனையாவது அவர்கள் நிறைவேற்றுவார்களாக என்பதும் சந்தேகமே.

ஊடகங்கள் வாயிலாக இதனை நாம் வினயமாக கேட்கின்றோம்; கட்சி வேறுபாடுகளை கடந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் என்றாவது தமிழ்தரப்புக்கள் ஒற்றுiயாக நில்லுங்கள். இவர்கள் ஒற்றுமையாக ஓரணியாக இருந்தால் அதுவும் ஒரு பெரும் செய்தியாக கொழும்பு உட்பட சர்வதேசத்திற்கு செல்லும் அது எமக்கான நீதியை பெறவும் வழிசமைக்கும்.

கடந்த ஆண்டுகளில வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் தமிழ்த் தரப்புகள் நடந்துகொண்ட விதம் பற்றி

உண்மையான மக்கள் பிரதிநிதிகள் என்றால் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும், அதற்காக அவர்கள் மக்களைச் சந்திக்க வேண்டும். அவர்களுடன் பேசி அவர்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும் வெளியிலும் பேச வேண்டும். எனவே கடந்த நான்கரை ஆண்டுகளில் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டவர்கள் இனி எமக்கான தீர்வை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. பதினொரு வருடங்களாக உறவுகளை தேடி போராடி வருகின்றாம் நான்கு வருடங்களாக தெருவில் நின்று போராடுகின்றோம். எனவே இந்த பதினொரு வருடத்தில் எமக்கான தீர்வை பெற்றுத் தர முடியாதவர்கள் இனி பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கில்லை. 22 பேருடன் போனார்கள், பின்பு 16 பேருடன் போனார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்போது 10 பேருடன் போயிருக்கின்றார்கள் எனவே ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவேதான் நாம் கோருகின்றோம் எமது விடயத்தில் முதலில் இந்த 10 பேரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அது மாத்திரமன்றி தமிழ் தரப்புக்கள் அனைவரும் ஒரணியாக எமது விடயத்தில் சேரவேண்டும் என.

அத்தோடு கடந்த அரசு எங்களது விடயத்தில் கழுவுற மீனில் நழுவுற மீனாக தங்களுடைய பதவிக் காலத்தை முடித்து சென்று விட்டனர். எங்களுடைய பிள்ளைகள் திருவிழாவில் காணாமல் போகவில்லை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனவே நீதியை பெற்றுத்தருவோம் என்று சொன்னவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்.

முல்லைத்தீவு, ஓமந்தை மற்றும் முகாம்களில் வைத்து கையளிக்கப்பட்ட உறவுகள் யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் உள்ளதா?

ஆம் நிச்சயமாக உள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இந்த அரசுதான் ஒரு நாயைக் கூட கொல்லக் கூடாது என சட்டத்தை கொண்டுவந்தவர்கள். மிருகங்கள் மீது இரக்கம் காட்டுகின்றவர்கள் புத்த பகவானை வணங்குகின்றவர்கள் எங்களுடைய பிள்ளைகளை கொன்றிருப்பார்கள் என்று நாம் நம்பவில்லை.எங்களை பிள்ளைகளை அவர்கள் எங்கோ இரசிய இடங்களில் மறைத்து வைத்திருக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் நாம் போராடி வருகின்றோம்.

புதிய அரசின் மீது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்?

தற்போதைய அரசு எங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட போது அதிகாரத்தில் இருந்தவர்கள்தான் எனவே எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது இவர்களுக்கு நன்றாக தெரியும். எனவே இந்த அரசு எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த நல்லாட்சி அரசையும், இந்த அரசையும் எப்படி நோக்குகின்றனர்.?

அந்த அரசு கொளுக்கட்டை என்றால் இந்த அரசு மோதகம் அவ்வளவுதான்

புதிய அரசை சந்தித்து உங்களுடை பிரச்சினைகளை முன்வைக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடவடிக்கைகள் எதேனும் முன்னெடுக்கப்பட்டதா?

உங்களிடம் எம்மால் ஒரு பொருள் வழங்கப்பட்டது. அதனை நீங்கள் மீண்டும் எங்களிடம் திருப்பி தரவில்லை எனவே நாம் அதனை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றோம். இந்த நிலையில் அவர்களை சந்தித்து என்ன பயன்கிடைக்கப் போகிறது.?

நன்றி தமிழ்

ஆசிரியர்