இருபதாவது திருத்தம்: நாட்டின் ஒட்டு மொத்த ஜனநாயகத்துக்கும் ஆபத்தா

ஆசிரியை ஒருவர் என்னிடம் கேட்டார் “19ஆவது திருத்தத்தை அகற்றினால் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் அகற்றப்படும். அப்படியென்றால் இனி நாங்கள் கல்வித் திணைக்களத்துக்குப் போய் எங்களுடைய சம்பளப்படி உயர்வுகள் தொடர்பாக கேள்வி கேட்க முடியாதா, அரச திணைக்களங்களில் மக்களுக்கு இனி கேள்வி கேட்கும் உரிமை இருக்காதா?” என்று.

19ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்தும் விதத்தில் 20ஆவது திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவரவிருக்கும் ஒரு பின்னணியில் அவர் என்னிடம் இவ்வாறு கேட்டார்.

19ஆவது திருத்தம் எனப்படுவது முதலாவதாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கிறது. இரண்டாவதாக நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகப்படுத்துகிறது. மூன்றாவதாக அது ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூட்டு.

அது எப்படி ஒரே சமயத்தில் ஒரு குடும்பத்திற்கு எதிரான யாப்புப்  பூட்டாகவும் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் ஒன்றாகவும் காணப்படுகின்றது என்பதனை சற்று ஆழமாகப் பார்க்கலாம். அந்தத் திருத்தத்தில் பின்வரும் முக்கிய அம்சங்கள் உண்டு.

முதலாவது, ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக வர முடியாது. இது மஹிந்த ராஜபக்ஷவுக்கு போடப்பட்ட ஒரு யாப்புப் பூட்டு.

இரண்டாவது, ஒரு ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல்கள் வழக்கை தாக்கல் செய்யலாம். முன்பு அவ்வாறு வழக்கை தாக்கல் செய்ய முடியாது. இதனால் ஜனாதிபதி சட்டத்துக்கு உட்பட்டவராக சட்டத்துக்கு பொறுப்புக் கூறும் ஒருவராக ஆக்கப்பட்டிருக்கிறார்.

மூன்றாவது, ஜனாதிபதி அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருக்க முடியாது. முன்பு ஜனாதிபதி ஒருவர் முக்கியமான அமைச்சுகளை தன்வசம் வைத்திருக்கலாம். இதன்மூலம் ஓர் அரசனைப்போல அவர் அதிகாரங்களை அனுபவிக்கலாம், பிரயோகிக்கலாம்.

நான்காவது, ஜனாதிபதியால் பிரதமரை பதவி நீக்கும் ஏற்பாடு நீக்கப்பட்டுள்ளது. முன்பு ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கலாம் என்றிருந்தது. அந்த நிறைவேற்று அதிகாரம் இப்பொழுது இல்லை.

ஐந்தாவது, ஜனாதிபதி நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஒரு சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்கு விட்டு சட்டமாக்கும் ஏற்பாடு அகற்றப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தின் பலத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ஆறாவது, ஜனாதிபதி நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னரே கலைக்கலாம். முன்பு ஓராண்டுக்குப் பின்ன்ர கலைக்கலாம். இதன்மூலம் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் பாதுகாக்கப்படுகிறது. அது மட்டும் அல்லாது முன்பு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையில்லை. இப்பொழுது அது தேவை.

ஏழாவது, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். இதுவும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்கும் ஓர் ஏற்பாடு.

எட்டாவது, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையோடுதான் அமைச்சர்களை நியமிக்கலாம். இதுவும் பிரதமரின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் ஓர் ஏற்பாடு.

ஒன்பதாவது, அமைச்சரவையில் மொத்தம் 30 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும்தான் இருக்கலாம். இது கட்சி தாவும் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்த உதவுவதோடு ஜனாதிபதி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்காக அமைச்சுப் பதவிகளைக் காட்டி ஏனைய கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நிலைமையை கட்டுப்படுத்துகிறது.

பத்தாவது, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையோடுதான் அமைச்சர்களை நியமிக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும். முன்பு பிரதமரின் ஆலோசனை அவசியம் இல்லை. ஆனால், இப்பொழுது பிரதமருக்கு இசைவான ஓர் அமைச்சரவையை உருவாக்கும் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பதினோராவது, தகவல் அறியும் உரிமைச் சட்டம், இது பிரஜைகளின் தகவல் அறியும் உரிமையை பலப்படுத்துகின்றது. அரச திணைக்களங்களின் பொறுப்புக் கூறும் இயல்பை உறுதிப்படுத்துகிறது.

பன்னிரண்டாவது, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு ஆறு ஆண்டுகளாக இருந்தது. இவ்வாறு ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தை குறைத்து அதன்மூலம் அவர் எதேச்சாதிகாரமாக நடந்துகொள்ளும் கால எல்லை குறைக்கப்படுகிறது.

பதின்மூன்றாவது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒருவர் 35 வயதை அடைய வேண்டும் இது நாமலுக்கு போடப்பட்ட பூட்டு.

பதினான்காவது,  இரட்டைப் பிரஜாவுரிமை உடைய ஒருவர் ஜனாதிபதியாக வர முடியாது. இது கோட்டாபய, பசில் போன்றவர்களுக்கு போடப்பட்ட பூட்டு. ஆனால், கோட்டாபய அதைத் தாண்டிவிட்டார்.

பதினைந்தாவது, 10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புப் பேரவையின் சம்மதத்துடன்தான் ஜனாதிபதி உயர் பதவிக்கு ஆட்களை நியமிக்கலாம். உயர்நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், நாடாளுமன்ற செயலாளர் நாயகம், ஓம்புட்ஸ்மன் ஆகிய பதவிகளை ஜனாதிபதி அரசியலமைப்புப் பேரவையின் சம்மதத்தோடுதான் நியமிக்கலாம். இதன்மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டு அரசியலமைப்புப் பேரவையின் பலம் கூட்டப்பட்டிருக்கிறது.

பதினாறாவது, அரசியலமைப்புப் பேரவையின் சிபார்சின்படிதான்  ஜனாதிபதி சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கலாம். தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, இலஞ்சம் ஊழலை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதி அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசின்படி தான் நியமிக்கலாம்.

மேற்கண்டவாறான ஏற்பாடுகளைக் கொண்ட 19ஆவது திருத்தத்தின் மூலம் ரணில்-மைத்திரி அரசாங்கமும் அவர்களைப் பின்னிருந்து பாதுகாத்த மேற்கு நாடுகளும் ராஜபக்ஷவின் மீள் வருகையைத் தடுப்பதோடு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகப்படுத்தலாம் என்று திட்டமிட்டனர். ஆனால், எல்லா எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்கிவிட்டு ராஜபக்ஷக்கள் மறுபடியும் அசுர பலத்தோடு ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.

இப்பொழுது, தமக்குத் தடையாக காணப்படும் 19ஆவது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கு வேண்டிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டார்கள். 19ஆவது திருத்தத்தை மேவி 20ஆவது திருத்தத்தை அவர்கள் கொண்டுவரப்போகிறார்கள்.

20ஆவது திருத்தம் குறித்து இப்பொழுதுதான் யோசிக்கப்படுகிறது என்பதல்ல. ஏற்கனவே 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஓர் உடன்பாட்டுக்கு வந்தன. அதன் பிரகாரம் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவது என்று இருவரும் ஒத்துக்கொண்டு அதன் பிரகாரம் அரச வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

ஆனால், திருத்தம் வரவில்லை. அதன்பின்னர் 2018இல் மைத்திரி ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்ட பின்னர் ஜே.வி.பி. 20ஆவது திருத்தத்தைப் பற்றிக் கதைத்தது. ஜனாதிபதியின் அதிகாரங்களைப் குறைப்பதே அத்திருத்தத்தின் நோக்கமாகும்.

எனினும், உயர் நீதிமன்றம் அதற்கு எதிராகத் தீர்ப்பளித்த காரணத்தால் நகர்வு வெற்றி பெறவில்லை. இப்பொழுது மறுபடியும் பத்தொன்பதைப் பலவீனப்படுத்தும் 20ஆவது திருத்தத்தை ராஜபக்ஷக்கள் கொண்டுவரப் போகிறார்கள். அதில் என்ன உண்டு?, உத்தேச வரைபின்படி 19ஆவது திருத்தத்திற்கு எதிராகப் பின்வரும் அம்சங்கள் உண்டு.

முதலாவது, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அல்லது உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மற்றும் அழைப்பதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது, ஜனாதிபதி, காலத்துக்குக் காலம் பிரகடனத்தின் மூலம் நாடாளுமன்றத்தைக் கூடுமாறு அழைக்கலாம், அமர்வை நிறுத்தலாம், அத்துடன் கலைக்கலாம்.

நாலாவது, அரசியலமைப்புச் சபையில் சிவில் உறுப்பினர்களுக்கு இடமில்லை.

ஐந்தாவது, கணக்காய்வு ஆணைக்குழு நீக்கப்பட்டு  மீண்டும் கணக்காய்வாளர் நாயகம் பதவி உருவாக்கப்படும்.

ஆறாவது, பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.

ஏழாவது, அமைச்சரவையின் எண்ணிக்கை வரையறை நீக்கப்பட்டுள்ளது. இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் எண்ணிக்கைக்கு இருந்த வரையறையும் நீக்கம்.

எட்டாவது, புதிய நாடாளுமன்றம் நியமிக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியும்.

ஒன்பதாவது, அவசர காலச் சட்டம் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படலாம்.

பத்தாவது, ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான குறைந்த வயதெல்லை 30ஆக மாற்றம்.

பதினொன்றாவது, உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் பதில் நியமனங்களை ஜனாதிபதியினால் வழங்கமுடியும்.

பன்னிரண்டாவது, ஜனாதிபதி நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நீக்கலாம்.

பதின்மூன்றாவது, பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைப்பு.

பதினான்காவது, இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஏற்பாடு  நீக்கப்பட்டுள்ளது.

இவைதான் இருப்பதாவது திருத்தத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் அந்த ஆசிரியை அஞ்சியது போல தகவல் அறியும் உரிமைச் சட்டம் அகற்றப்படாது. ஆனால், பிரஜைகளின் ஏனைய உரிமைகளைப் பாதிக்கும் ஏற்பாடுகள் இத்திருத்தத்தில் உண்டு. ராஜபக்ஷக்கள் ஒரு அரசனுக்கு உரிய அதிகாரங்களைப் பெறப் போகிறார்கள்.

அத்தோடு, 19ஆவது திருத்தத்தில் வம்ச ஆட்சிக்குத் தடையாக இருந்த ஏற்பாடுகள் அகற்றப்படுவதன் மூலம் பசில் நாடாளுமன்றத்துக்கு வரப் போகிறார். சட்டவாக்க அதிகாரம் ஜனாதிபதிக்கு அதாவது நிறைவேற்று அதிகாரத்துக்கு கீழ்ப்பட்டதாக மாறப் போகிறது.

சுயாதீன ஆணைக் குழுக்களின் சுயாதீனம் குறைக்கப்படும். மொத்தத்தில் ராஜபக்ஷக்கள் அரசர்களுக்குரிய அதிகாரங்களைப் பெறுவார்கள். ஆனால் மக்கள்?

ஆசிரியர்