March 26, 2023 9:53 pm

இலங்கையில் திட்டமிட்டு ஏமாற்றப்படும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையில் முதலீடுகளைச் செய்யும்படி புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் நிலையில், இலங்கையில் முதலீடுகளைச் செய்ய முன்வரும் முதலீட்டாளர்களை ஏமாற்றும் செயல்களில் சிலர் ஈடுபட்டுவருவது அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

புலம்பெயர் முதலீட்டாளர்களைக் குறிவைத்து இலங்கையில் செயற்படுகின்ற சில நிறுனங்கள் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது தொடர்பான குற்றச்சாட்டுக்களும் வெளியாகியவண்ணம் இருக்கின்றன.

யாராவது நடவடிக்கை எடுக்க முற்பட்டால், ‘இது புலிகளின் பணம்’ என்று மிரட்டுவது, ‘இலங்கை வந்தால் பாதாள உலக கோஸ்டிகளை வைத்து தூக்கிவிடுவோம்’ என்று மிரட்டுவது, பணம்கொடுத்து இணையங்களில் அவதூறு பரப்புவது போன்ற நடவடிக்கைகளினால், பல புலம்பெயர் வர்த்தகர்களின் முதலீடுகள் மோசடி செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அதேவேளை, விதிவிலக்காக இவ்வாறு ஏமாற்றப்பட்ட ஓரிருவர் மோசடி செய்தவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்க முற்பட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவரை 275 மில்லியன் ரூபாவுக்கு ஏமாற்றினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு பிரபல கொழும்பு வர்த்தகர்களுக்கு எதிரான வழக்கொன்றை பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட ஒரு புலம்பெயர் வர்த்தகர் சிறிலங்கா நீதிமன்றில் தாக்கல் செதுள்ள சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

Blue Ocean Breeze மற்றும் Blue Ocean Realty என்ற நவீன கட்டிட நிர்மாண நிறுவனங்கள் தன்னை 275 மில்லியன் ரூபாய் மோசடி செய்துவிட்டார்கள் என்று, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அந்த தமிழ் வர்த்தகர் சிறிலங்கா நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்.

275 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடங்களை நிர்மாணித்து உரிய நேரத்தில் கையளிக்கத் தவறியதை அடுத்து Blue Ocean நிறுவன உரிமையாளர்களான சிவராஜா துமிலன் மற்றும் சிவராஜா துலானி போன்றவர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஜுலை மாதம் 14ம் திகதி கொழும்பு கல்கிசை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, Blue Ocean நிறுவன உரிமையாளர்களான சிவராஜா துமிலன் மற்றும் சிவராஜா துலானி போன்றவர்களுக்கு எதிராக பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, நேற்று 15.09.2020 இல் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கைகளுக்கு அமைய Blue Ocean நிறுவணத்தின் உரிமையாளர்களான இருவரையும் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்வதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த வருடம் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக இந்த கட்டிடங்களை நிர்மாணித்துக்கொடுக்கவேண்டும் என்று இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, அவர்கள் இருவருக்கெதிரான வெளிநாடுகளுக்கான பயணத்தடையும் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதலீடுகள் செய்யவிளையும் பல புலம்பெயர் வர்த்தகர்களை ஏமாற்றிவரும் இலங்கையிலுள்ள சில வர்த்தகர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதுடன், அப்படியான ஏமாற்றுப் பேர்வழிகளுக்கெதிரான சட்டநடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக இதுபோன்ற குற்றச்சாட்டுக்களைத் தடுக்கமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்