தங்கத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் வெளிநாடு சென்றுள்ளதாகவும், இந்த மாதத்தில் மாத்திரம் ஐந்து தடவைகள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:–
“ஒவ்வெரு மாதமும் குறைந்தது இரண்டு தடவைகளேனும் இவர் பிரமுகர் நுழைவாயில் ஊடாக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். இந்த மாதத்தில் மாத்திரம் ஐந்து தடவைகள் வெளிநாடு சென்றுள்ளார்.
வாக்கெடுப்பு தினத்தன்று வந்தார். அரசுக்கு எதிராக வாக்களிக்கிறார். நான் அந்தத் தலைவருக்குக் கூறினேன், இந்தத் தலைவருக்கு கூறினேன், அவர்கள் அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால், அரசுக்கு எதிராக வாக்களித்ததாக அவர் கூறுகின்றார்.
மிகவும் அழகான கதை ஒன்றே இது. சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு வழங்கப்பட வேண்டும். இவர் அடுத்த நாளே டுபாய்க்குச் சென்றுள்ளார். அவருக்கு மனச்சாட்சி இருந்தால் பதவியிலிருந்து விலக வேண்டும்.” – என்றார்.