தஞ்சாவூரில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் கோயில் வெண்ணி என்னும் ஊர் ஒன்று இன்றும் உள்ளது. இதில் “வெண்ணிநாதர் அல்லது வெண்ணிக்கரும்போல்வர்” என்ற பாடல் பெற்ற தலம் ஒன்று உள்ளது. இங்கு பெருவெளி ஒன்று இன்னும் உள்ளது. இந்த வெண்ணி என்னும் ஊரிலேயே இந்த வெண்ணிப் பறந்தலைப் போர் நடந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஏனெனில் சோழ நாட்டில் இதைத் தவிர “வெண்ணி” என்ற பெயரில் வேறு எந்த ஊர்களும் இருந்ததாக சான்றுகள் இல்லை. பறந்தலை என்பது பொட்டல் வெளி அல்லது போர்க்களம் என்ற பொருளாகும்.
வெண்ணி என்ற ஊர் பற்றி நற்றிணை 390 இலும் குறிப்புகள் இருக்கின்றன. “வெண்ணி ஊர் வயல்களில் வெள்ளாம்பல் பூத்துக் கிடக்கும்” என்று வருகின்றது.
வெண்ணிப்போர் ஆனது கரிகால் சோழனுக்கும் அவனை எதிர்த்து வந்த பதினொரு வேளிர்களுக்கும் (குறுநில மன்னர்கள்) மற்றும் இருபெரும் மன்னர்களுக்கும் இடையே நடந்தது. இதற்கு முந்தைய பதிவில் நாம் பார்த்த தலையாலங்கானப் போர் ஆனது வெளிப்பகைவர்களால் ஏற்பட்டது. இந்த தலையாலங்கான போர்க்களத்தில் “எரிபரந்தெடுத்தல்” என்ற போர்முறையை பாண்டியர்கள் கையாண்டுள்ளனர். அதாவது போர் நடக்கும் வேளை படை முன்னேறி வரும் போது வழியில் எதிரிகளின் நகர்களை எரித்துக் கொண்டு செல்வர். மக்கள் வெளியேறிச் செல்ல எதிரிப்படை முன்னேற முடியாது தடை செய்யும். அது குழப்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறான ஒரு முறையை பாண்டியர்கள் கையாண்டார்கள்.
ஆனால் வெண்ணிப் பறந்தலைப் போரானது உட்பகைவர்களாலேயே அரசுரிமை பெறுவதற்காக வெண்ணி என்ற ஊரின் பெரு வெளியில் நடை பெற்றது. இதுவே அரசு உரிமைக்காக நடந்த முதலாவது போராகக் கணிக்கப்படுகின்றது.
கரிகாலன்
பொருநராற்றுப்படைக்கும் பட்டினப்பாலைக்கும் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகால் பெருவளத்தான். இவன் தாய் வயிற்றில் கருவாக இருக்கும்போதே இவனது தந்தை இறந்தான். ஆதலால் இவன் கருவில் இருக்கும்போதே அரசுரிமை பெற்று பின்னர் பிறந்தான் என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது. இளமையிலேயே முடிக்கு அரசனாகி நன்கு தனது நாட்டை ஆட்சி செய்து வந்தான்.
மிகப்பெரும் பகைவருடன் போர் புரிந்து இளமையிலேயே பெரும் பகைவரைக்கொன்றான், என்று இந்த இலக்கிய நூல் கூறுகின்றது.
பகைவரின் வஞ்சகத்தால் இவனை சிறையில் அடைத்தார்கள். பகைவர் சிறையில் தீயை மூட்டி விட அந்த தீப்பற்றிய சிறையிலிருந்து கரிகாலன் தப்பி வெளியேறினான். இந்த முயற்சியின் போது அவன் கால் தீயில் கருகியது என்ற காரணத்தினால் கரிகாலன் என்ற பெயர் அவனுக்கு ஏற்பட்டது.
இவன் காலத்திலேயே காவிரிக்கு கல்லணை கட்டப்பட்டது என வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.
சங்க காலப் போர்க்களங்களில் மிகவும் பேர் போன வெண்ணிப் பறந்தலையில் மிகப் பெரும் பேரரசுகளான பெருஞ் சேரலாதனுக்கும் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானுக்கும் இடையில் நடந்த பெரும் போர் இது. இதில் சோழ நாட்டை வெற்றி பெறுவதற்காக சேர மன்னனும் பாண்டிய மன்னனும் பதினொரு வேளிரும் (குறுநில மன்னர்களும்) ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாகப் பெரும்படையோடு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தனர். அதிக படையோடு வந்த பகைவரை வென்று கரிகால்சோழன் வெற்றி வாகை சூடினான். இந்த வரலாற்று செய்திகளைப் பல சங்க இலக்கியங்களில் வழி நாம் காணலாம்.
புறநானூறு 66
வெண்ணிக் குயத்தியார் என்னும் பெண் புலவர் இந்தப் பாடலை பாடுகின்றார். இவர் போர் வீரர்களுடனும், அரசர்களுடனும் நெருங்கிப் பழகியதால் வெண்ணிப் பறந்தலைப் போர்க்களம் பற்றிச் சிறப்பாகப் பாடுகின்றார். இந்தப் போர்க்களம் பற்றி பாடியதாலேயே “வெண்ணிக் குயத்தியார்” எனும் பெயர் பெற்றார்.
” நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக” என்று இந்தப் புறநானூற்றுப் பாடல் வரிகள் ஆரம்பிக்கின்றன.
வெண்ணிக் குயத்தியார் கரிகாலனைப் போற்றி பாடும் பாட்டில்,
களிப்புடன் நடைபோடும் யானை மேல் தோன்றும் கரிகால் வளவ!
கடலில் நாவாய் (பெரிய கலம்) கப்பலோட்டி காற்றையே ஆண்டவரின் வழி வந்தவன் நீ. இந்த வெண்ணிப் பறந்தலைப் போரில் வென்றாய். அதனால் நீ நல்லவன்.
ஆனால் வெண்ணிப்பறந்தலைப் போர்க்களத்தில் உனது வலிமை மிக்க தாக்குதலால் மார்பில் அம்பு துளைத்தாலும் முதுகு வரை சென்றதால் புறப் புண்ணாகக் கருதி, இது தனக்கு ஏற்பட்ட அவமானம் என்று நினைத்து நாணி, உண்ணா நோன்பிருந்து அந்தப் போர்க்களத்திலேயே உலகத்திலேயே புகழ்பெறுமாறு வடக்கிலிருந்து உயிர் நீத்தனன் பெருஞ் சேரலாதன். புறப்புண் நாணி வடக்கிலிருந்து உயிர்துறந்த அவன் புறத்தே அம்பு ஏவிப் போர் முறை பிறழ்ந்த நின்னை காட்டிலும் நல்லவன் அல்லனோ அவன்! எனப் பயமின்றி வெண்ணிக் குயத்தியார் பாடுகின்றார்.
கரிகால் சோழனும் தனது இழி செயலை நினைந்து வருந்தினான். இதனால் வெண்ணிப் பறந்தலைப் போர்க்களத்தில் சோழன் கரிகாலனது வெற்றி முரசு கூட முழங்கவில்லை என்று கூறப் படுகின்றது.
புறநானூற்றுப் பாடல் 65 இலும் கரிகாலனும் சேரமான் நெடுஞ்சேரலாதனும் புரிந்த போர் பற்றிக் கழா அத்தலையார் என்னும் புலவர் பாடுவதாவது, உழவுகள் ஒலி அடங்கின. யாழ் இசை துறந்தன. தயிர்ப் பானைகள் வெறும் பானைகளாகக் கிடந்தன. சுற்றத்தினர் மதுவை மறந்தனர். உழவர் ஓதையும் (ஆரவாரம்) அடங்கின. ஊர் உலாவும் ஒழிந்தன. சேர மண் ஒளி இழந்தது. இனிப் பகல் தான் நமக்கு எவ்வாறு இன்பமுடன் களியுமோ? என மிகப் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய வெண்ணிப் பறந்தலைப் போரின் வடுக்களைப் பாடுகின்றார்.
இந்த வெண்ணிப் பறந்தலைப் போர்க் களமும் கூட முள்ளிவாய்க்கால் போர்க்களத்தை எம் கண்முன் கொண்டு வருகின்றது. ஒரு தலைமை பல பகைவர்களுக்கு எதிராகப் போரிட்டதையும், உட் பகைவர்களின் வஞ்சத்தையும் கூட எமது முள்ளிவாய்க்கால் போர்க்களம் கண்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம் அல்லவா!
ஜெயஸ்ரீ சதானந்தன்
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்