Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “சர்வதேச விசாரணையைப் புறந்தள்ளி நாட்டை மேலும் வங்குரோத்தடையச் செய்ய வேண்டாம்!”

“சர்வதேச விசாரணையைப் புறந்தள்ளி நாட்டை மேலும் வங்குரோத்தடையச் செய்ய வேண்டாம்!”

2 minutes read
“தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல், அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நிராகரிப்பதாகவும் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அரசின் இத்தகைய செயற்பாடுகள் நாட்டை மேலும் வங்குரோத்து நிலைமைக்கே இட்டுச் செல்லும்.”

– இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டதுடன் பல நூறு பேர் காயமடைந்துமுள்ளனர். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இருந்த காலகட்டத்திலேயே இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றன.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 45பேரும் கொல்லப்பட்டனர். இதனால் சுற்றுலாத்துறையே பாரிய வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக பல நூறு மில்லியன் ரூபாய் அரசுக்கு இழப்பும் ஏற்பட்டது. இது பற்றி விசாரணைகளை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றும், நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுக்களின் அறிக்கைகள் முழுமையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளியிடப்படவில்லை. அவற்றை முழுமையாக வெளியிட முடியாது என்று கூறியும் இருந்தனர். பின்னர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தபோது அவரும் ஒரு விசாரணைக்குழுவை நியமித்தார். அதிலும் எத்தகைய வெளிப்படைத்தன்மையும் இல்லை. மக்களுக்கும் அது பற்றி எதுவும் தெரியாது.

இப்போது மூன்றாவது முறையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க இருப்பதுடன், நீதிபதிகளை உள்ளடக்கிய மற்றொரு விசாரணைக் குழுவையும் நியமிக்கவுள்ளார். ஜனாதிபதியானவர் பாதுகாப்புத்துறையின் அமைச்சராகவும் இருக்கின்றார். ஆனால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட ஆவண வீடியோவைப் பாதுகாப்பு அமைச்சு முற்றாக நிராகரிப்பதாகக் கூறியுள்ளது. இந்நிலையில், ஒருபுறம் உயிர்த்த ஞாயிறு தினக் கொலைகளை முற்றுமுழுதாக நிராகரிக்கும் ஜனாதிபதி மறுபுறத்தில் அதற்கான விசாரணை ஆணைக்குழுக்களை நியமிப்பது வேடிக்கையாகவும் முரண்நகையாகவும் இருக்கின்றது.

ஏற்கனவே சிங்களத் தரப்பில் பல்வேறு கட்சித் தலைவர்களும் பொது அமைப்புகளின் தலைவர்களும் தமிழர் தரப்புகளும் சர்வதேச விசாரணையைக் கோரியுள்ள ஒரு சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் பல மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்து, விசாரணைக்குழுக்களை அமைப்பது அர்த்தமற்றதும் காலத்தை வீணடிக்கும் செயலுமாகும். அதே சமயம் ஜனாதிபதியின் தலைமையில் இயங்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் சர்வதேச விசாரணையை நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இந்த விசாரணைகள் என்பது குறகிய அரசியல் இலாபநோக்கங்களுக்காகச் செயற்படுத்தப்படுகின்றதா? அல்லது இந்த நாட்டின் கௌரவம் சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட வேண்டும், இந்த நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு சர்வதேச முதலீடுகள் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற விடயத்தையாவது குறைந்த பட்சம் கவனத்தில் எடுத்துக்கொண்டு முன்னெடுக்கப்படுகின்றனவா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

ஜனாபதியின் ஆணைக்குழுக்களின் ஊடாக இலங்கை மீது சர்வதேச நம்பகத்தன்மையை உருவாக்க முடியாவிட்டால் இலங்கை இழந்துபோன கௌரவத்தை மீளப்பெற முடியாவிட்டால், இந்த விசாரணைக் கமிஷன்களெல்லாம் அர்த்தமற்றதாகிவிடும்.

யுத்தத்திற்குப் பின்னர், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், மனித உரிமைகள் மீறல் தொடர்பாகவும் தமிழ் மக்கள் ஒரு சர்வதேச விசாரணையை இன்றுவரை கோரி வருகின்றனர். இந்தியா போன்ற அயல் நாடுகளும் நேரடியாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடாகவும் தமிழ் மக்களின் கௌரவம் பாதுகாக்கப்படவேண்டும், சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், அவர்களது அபிலாஷைகளைத் தீர்க்கக்கூடிய வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதுடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் சர்வதேச அரங்குகளில் சுட்டிக்காட்டி வருகின்றன. ஆனால், இலங்கை அரசோ இவற்றைக் காலதாமதப்படுத்துவதிலும் ஒத்திவைப்பதிலும் தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிக்கும் நடவடிக்கைகளிலுமே ஈடுபட்டு வருகின்றது.

ஆகவே, நாட்டின் நன்மை கருதியும் பொருளாதார அபிவிருத்தி கருதியும் இவை எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்தமான தீர்வைக் காணும் முகமாக சர்வதேச விசாரணை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதியும் அரசும் இதனைப் புரிந்துகொண்டு கடமையாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.” – என்றுள்ளது.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More