December 3, 2023 11:17 am

களு கங்கை நீர்மட்டம் உயர்வு வெள்ள அபாயம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் களு கங்கை பெருக்கெடுத்தமையினால், மில்லகந்த பகுதியில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளிலும் அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் களு கங்கை புட்டுபாவுல , எல்லேகாவ மற்றும் மங்குர ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.மழையுடனான வானிலையினால் குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.புலத்சிங்கள மோல்காவ வீதியில் நாலியத்த பிரதேசத்தில் 10 அடி உயரத்திற்கு வெள்ளம் நிறைந்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அவித்தாவ, வலல்லாவிட்ட , கித்துல்கல்வில, கல்லனமுல்ல, புலத்சிங்கள மேல் வெல்கம, பரகொட மொரவக்க தோட்டப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதேவேளை இரத்தினபுரி – எலபாத்த, பட்டுகெதர பிரதேசங்களில் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நீர்ப்பாசன திணைக்களம் இந்த நிலையில், மழையுடனான வானிலையால் அத்தனகலு ஓயா, நில்வலா கங்கை, கிங் கங்கை என்பன தொடர்ந்தும் வௌ்ளமட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.இதனால் குறித்த ஆறுகளை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றன.
எவ்வாறாயினும், சில இடங்களில் படிப்படியாக நீர் வடிந்தோடி வருவதை காணமுடிகின்றது.

நிலவும் மழையுடனான வானிலையால் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.​காலி, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, பல பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் கூறியுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்