
எங்கள் பேராசான் புவியிலாளன் பேராசிரியர் .அ. கணபதிப்பிள்ளை வன்னி மண்ணுக்கு பெருமை சேர்த்த உயர் கல்வியாளன். தமிழார்ந்த புவியியலை அணுகி அறிவார்ந்த பார்வை பதித்த எங்கள் ஆசான்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் புவியியல் துறை பேராசிரியர் கணபதிப்பிள்ளை சேரின் மரணச் செய்தி மனதை உறைய வைத்து நிற்கிறது.
ஒரு ஆசானாக மட்டுமல்லாமல் ஒரு நண்பனாய் தோழமை உணர்வுடன் பழகிய நல் ஆசான் அவர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னோடிகளில் ஒருவர். பல்கலைக்கழக முதலாம் வருட கற்கையில் புவியியல் பாடத்தை கற்ற நாட்கள் சுவாரஸ்யம் மிக்கவை.எப்போதும் சிரித்த முகத்துடன் விரிவுரை மண்டபத்துக்குள் நுழைந்து கடைசி வரை கலகலப்பு குறையாத பொழுதுகளாய் அமைந்த நாட்களை எப்படி மறக்க முடியும்.
பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒவ்வொரு நாளும் புலவர் வளவில் சாப்பாட்டு நேரச் சந்திப்பும் அரசியல் சமூகம் பற்றிய கலந்துரையாடல்களும்.பல வேளைகளில் பேராசிரியர்.சிவசாமி, பேராசிரியர்.சிவநாதன் முதலானவர்களுடன் இணைந்த சந்திப்பு பொழுதுகளை நினைத்துப் பார்க்கிறேன்.
முற்போக்கு மன நிலையும் சமூக நோக்கும் கொண்ட ஒரு கல்வியாளனாய் அவரைப் பார்க்கிறேன்.
அண்மைக் காலத்தில் அவருடனான அலைபேசி உரையாடல்களும் இணைய வழிச் சந்திப்புகளும் பல்கலைக்கழக ஆரம்ப நாட்களை திரும்பவும் கொண்டு வந்ததாக உணர்ந்தேன்.
ஈழத்தின் அறிவார்ந்த தமிழ் ஆளுமைகளில் ஒருவராக நம் மத்தியில் வலம் வந்த எங்கள் ஆசானின் இழப்பு எங்களுக்கும் அவர் குடும்பத்துக்கு மட்டுமானதல்ல தமிழ் அறிவுலகின் இழப்பு என நான் சொல்வேன்.அண்மையில் இணைய வழியில் அவரது வன்னி மண் பற்றிய உரையானது மிக சிற்ப்பு வாய்ந்ததாய் அமைந்தமையை நான் இங்கு மீட்டிப் பார்க்கிறேன்.
பாலசிங்கம் சுகுமார்