யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
யுத்த காலத்தில் பாதுகாப்புத் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சில பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 2,030 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், இதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றம் தாமதமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் பகுதியில் சுமார் 290 ஏக்கர் காணி பொன்னாலை–பருத்தித்துறை வீதியில் சுமார் 1,500 மீற்றர் நீளமான மூடப்பட்ட பகுதி வசாவிளான் கிழக்கில் 511 பிரிகேட் முகாம் அமைந்துள்ள பகுதியில் 45 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 17 ஏக்கர் தனியார் காணி; மயிலிட்டித்துறை தெற்கில் சுமார் 130 ஏக்கர் பரப்பில் இதுவரை ஏறக்குறைய 5 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளமை; மயிலிட்டித்துறை வடக்கில் சுமார் 40 ஏக்கர் காணி;பலாலி வடக்கில் இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான சுமார் 400 மீற்றர் நீளமான அணுகல் பாதை ஆகியவை தொடர்பில் அவர் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அத்துடன், மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையின் மைதானம், மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம், கிறிஸ்தவ மயானம், பிள்ளையார் ஆலயம், பொதுமக்களின் வழிபாட்டு மற்றும் சமூகப் பயன்பாட்டு இடங்கள், ஐஸ் பெக்டரி உள்ளிட்ட முக்கிய இடங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலாலி தெற்கு பகுதியில் அமைந்திருந்த தோலகட்டி பழச்சாறு தொழிற்சாலை மற்றும் அதனருகிலுள்ள சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
காணிகளை விடுவிப்பது என்பது வெறுமனே நிலங்களை மீளக் கையளிப்பது மாத்திரமல்ல.
நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், பொதுப் போக்குவரத்து, வழிபாடு மற்றும் சமூக–பொருளாதார நடவடிக்கைகளை மீள இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.
எனவே, ஜனாதிபதி இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.