ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘பொலிவுட் பாட்ஷா’ ஷாருக்கானின் ‘கிங்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தூ மில் ஜாயே’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான் – தீபிகா படுகோன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சச்சின்- ஜிகர் இசையமைப்பில் அதிரடியான லவ் வித் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘கிங்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தூ மில் ஜாயே..’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் குமார் எழுத, பின்னணி பாடகர் அர்ஜித் சிங் – சர்வதேச றாப் இசை கலைஞர் எட் ஷீரன் – பாடகி மதுபன்ட்டி பக்ஸி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
ஷாருக்கானின் உரையாடலுடன் தொடங்கும் இந்தப் பாடல் மற்றொரு உரையாடலுடன் நிறைவடைகிறது.
இடையில் ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் திரையில் தோன்றி அற்புதமாக நடனமாடி ரசிகர்களை காந்தம் போல் வசீகரிக்கிறார்கள் இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகள் பெற்று சாதனை படைத்து வருகிறது.
அதிலும் ஷாருக் கானின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளதால் அவருடைய ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.