செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை திருக்கோவில் கிரிக்கெட் போட்டி உணர்த்திய பாடம் என்ன? | அமலன் 

திருக்கோவில் கிரிக்கெட் போட்டி உணர்த்திய பாடம் என்ன? | அமலன் 

5 minutes read
* கோப்ரேட் நிறுவனங்கள் ஊடாக சிங்கள ஆட்சியாளர்களின் காய்நகர்த்தல்கள்!
* மண்ணைக் காப்பாற்றப் போராடும் திருக்கோவில் இளைஞர்கள்!* அநுர அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி எங்கே?

— — —
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் கடற்கரையில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிராந்தியத்தில், கோப்பரேட் நிறுவனங்களின் கனிமச் சுரண்டலும், அதற்குத் துணைபோகும் இலங்கை அரச பாதுகாப்புப் படைகளின் கூட்டு நடவடிக்கைகளும் உள்ளூர் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும், பூர்வீக நிலங்களையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்குகின்றன.

இது கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை அரசு என்ற கட்டமைப்பு நன்கு திட்டமிட்டு ஈடுபடுவதாகவே மக்கள் கருதுகின்றனர்.

–விளையாட்டு என்ற பெயரில் அரங்கேறும் மக்கள் ஏமாற்று வேலை–

சென்ற ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி, பொத்துவில் நகரின் ஊரணிப் பகுதியில் இராணுவத்தின் 242 வது காலாட்படைப் பிரிவின் தளபதி கேர்னல் கே.ஏ.பி. கரவிட்ட முன்னிலையில் 400,000 ரூபாய் பரிசுத் தொகையைக் கொண்ட காசோலை ஒன்று கையளிக்கப்பட்டது.

லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நஷ்டத்தில் இயங்கும் சிறிய நிறுவனமான ‘கபிடல் மெட்டல்ஸ் பிஎல்சி’ (Capital Metals Plc) இந்தத் தொடருக்கான நிதியுதவியை வழங்கியிருந்தது.

உண்மையில், இந்த ‘கபிடல் மெட்டல்ஸ் கிரிக்கெட் கோப்பை’ திருக்கோவில் கடற்கரையின் மையப்பகுதியான தம்பிலுவிலில் தான் நடைபெறவிருந்தது. இங்குள்ள மணல் மேடுகளிலிருந்து இல்மனைட் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுக்கவே இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால், தங்களது மண்ணைச் சுரண்டத் துடிக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து எந்தவொரு நிதியுதவியையோ அல்லது விளையாட்டு நிகழ்வுகளையோ ஏற்க முடியாது என திருக்கோவில், தம்பிலுவில், வினாயகபுரம் மற்றும் தம்பட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டுக்கழகங்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டன. பதிவு செய்திருந்த 56 கழகங்களில் 30 கழகங்கள் இப்போட்டியை முற்றிலும் புறக்கணித்தன.

“எங்கள் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிலத்திற்காகப் போராடி உயிரைத் தியாகம் செய்துள்ளனர். வெறுமனே 400,000 ரூபாய் பரிசுப் பணத்திற்காக எங்களால் இந்த விளையாட்டை விளையாட முடியாது. அது எங்கள் தியாகத்திற்குச் செய்யும் அவமானம்” என உள்ளூர் இளைஞர்கள் குமுறுகின்றனர்.

மக்கள் எதிர்ப்பால் வேறு வழியின்றி, முதல் போட்டிக்கு முந்தைய நாள் இரவு, அமைப்பாளர்கள் இத்தொடரை தெற்கே உள்ள ஊரணிப் பகுதிக்கு மாற்றினர். பொத்துவிலைச் சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற்ற போதிலும், போட்டியைப் பார்க்க உள்ளூர் மக்கள் எவரும் வரவில்லை.

உதயசூரியன் விளையாட்டுக்கழகம் இப்போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு வாழ்நாள் தடை விதித்து நோட்டீஸ் ஒட்டியது. கோப்ரேட் நிறுவனங்களால் விழாக்களையோ, காசோலைகளையோ மேடைகளில் காட்சிப்படுத்த முடியும், ஆனால் மக்களின் சம்மதத்தையோ அல்லது கூட்டத்தையோ போலியாக உருவாக்கிவிட முடியாது என்பதை தம்பிலுவில் மக்களின் புறக்கணிப்பு நிரூபித்துள்ளது.

–சமூக அங்கீகாரம் என்ற போர்வையில் கோப்ரேட் அரசியல்—

கபிடல் மெட்டல்ஸ் நிறுவனம் இதுவரை எங்கும் கனிமங்களை அகழ்ந்தெடுத்த அனுபவம் இல்லாத ஒரு நிறுவனம். அம்பாறை கடற்கரையின் மணல் மேடுகளில் உள்ள இல்மனைட், ரூடைல், சிர்கான் மற்றும் கார்னட் ஆகியவற்றை அகழ்ந்தெடுக்கும் ‘தப்ரபேன் மினரல்ஸ் ப்ராஜெக்ட்’ (Taprobane Minerals Project) மட்டுமே இதன் ஒரே சொத்தாகும்.

தங்களின் இந்த நன்கொடைகளும் விளையாட்டுத் தொடர்களும் தர்ம சிந்தனையால் உந்தப்பட்டவை அல்ல, மாறாக அங்கு தடையின்றிச் செயல்படுவதற்கான “சமூக அங்கீகாரத்தை” (social licence to operate) உள்ளூர் மக்களிடம் இருந்து பெறுவதற்கான ஒரு தந்திரோபாயம் என்பதை இந்நிறுவனம் தனது பங்குதாரர்களிடம் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளது.

சென்ற 16 மாதங்களில் பாடசாலை பைகள், புத்தகங்கள், கோவில் திருவிழாக்கள் மற்றும் தேவாலயப் புதுப்பித்தல் என 25 சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டதாக இந்நிறுவனத்தின் பேஸ்புக் பக்கம் பெருமையடிப் கொள்கிறது.

முதலீட்டாளர் ஊடகங்கள், இந்நிறுவனத்தின் இயக்குநரும் 1996 உலகக் கோப்பை கிரிக்கெட் நாயகனுமான அரவிந்த டி சில்வாவை, “அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தித் தருபவர்” என்றே வர்ணிக்கின்றன.

இதற்கான சுரங்க உரிமங்கள் பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளின் இரு போலி நிறுவனங்களுக்குக் கீழே, நான்கு அடுக்குகள் தள்ளி இருக்கும் ஒரு உள்ளூர் இலங்கை நிறுவனத்திடமே உள்ளன.

2023 இல் முதலீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு இந்த உரிமங்களை இரத்து செய்தபோது, சர்வதேச முதலீட்டு ஒப்பந்தங்களைக் காட்டி அச்சுறுத்தி, இந்நிறுவனம் தனது உரிமங்களை மீண்டும் பெற்றுக் கொண்டது..

இந்நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஸ்டூவர்ட் ஃபாரெஸ்டர் (Stuart Forrester), கடந்த மார்ச் மாதம் முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது, இப்பகுதியில் அவசரமாக அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் கடற்கரைப் பகுதியின் மக்கள் தொகை அதிகரித்து, கனிமப் படிவுகளின் மேல் கட்டடங்கள் கட்டப்பட்டு அவை “என்றென்றும் முடங்கிப்போகும்” என்றும் எச்சரித்திருந்தார்.

அதேநேரம், சுற்றுலாப் பயணிகள் அலைச்சறுக்கு விளையாடும் அறுகம்பே பகுதி பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதாவது, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; தமிழ் மக்கள் மீன்பிடித்து, விவசாயம் செய்து வாழும் நிலங்கள், அவர்கள் அங்கு மேலும் குடியேறுவதற்கு முன்பாகவே தோண்டப்பட வேண்டும் என்ற இன ரீதியான மற்றும் வர்க்க ரீதியான பாரபட்சத்தை கோப்ரேட் அதிகார வர்க்கம் கொண்டுள்ளதை இது பகிரங்கமாக காட்டுகிறது.

–தமிழ் மொழி பற்றிய கோப்ரேட் அறியாமையும் உள்ளூர் எதிர்ப்பும்–

உள்ளூர் மக்களின் சந்தேகத்திற்குத் தன் பாணியில் விளக்கம் அளித்த ஃபாரெஸ்டர், தமிழ் மொழியில் ‘துளையிடுதல்’ (drilling) என்ற வார்த்தையே இல்லை என்றும், அதனால் தான் மக்கள் அஞ்சுகிறார்கள் என்றும் அறியாமையுடன் குறிப்பிட்டார்.

ஆனால், தமிழ் மொழியில் துளையிடுதலுக்கு துளைத்தல், குடைதல், தோண்டுதல் மற்றும் துளையிடும் கருவிக்கு துறப்பணம் என நான்கு துல்லியமான சொற்கள் உள்ளன.
துளையிடுதலுக்கு நான்கு வார்த்தைகளைக் கொண்டுள்ள ஒரு பூர்வீகச் சமூகத்திற்கு, துளையிடுதல் என்றால் என்னவென்று மிகத் துல்லியமாகத் தெரியும்.
— மக்கள் கருதுவது என்ன?—
இலங்கைத் தீவின் கிழக்குக் கடற்கரையில் சர்வதேச நிறுவனங்களின் கனிம வேட்டை என்பது வெறும் சூழலியல் அழிவு மாத்திரமல்ல, அது திட்டமிட்ட முறையில் மக்களின் வாழ்வாதாரங்களை பறித்தெடுக்கும் செயற்பாட்டின் தொடர்ச்சி என்றே மக்கள் கூறுகின்றனர்.

ஏனெனில், ‘கபிடல் மெட்டல்ஸ்’ நிறுவனம் திருக்கோவிலின் மண்வளத்தைச் சுரண்டுவதற்குத் தேர்ந்தெடுத்திருப்பதன் பின்னணியில் ஒரு தெளிவான அரசியல் புவிசார் கணக்கு உள்ளது.

2024 ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருக்கோவில் பிரதேசத்தின் 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் 97.9% முதல் 100% வரை தமிழ் மக்களே வாழ்கின்றனர்.

இதற்கு நேர் வடக்கே உள்ள அக்கரைப்பற்றின் 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முற்றிலும் முஸ்லிம் மக்களின் தாயகமாக விளங்குகின்றன. இந்த நிறுவனத்தின் சொந்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின்படி, ஐந்து சுரங்கப் பிரிவுகளில் நான்கு திருக்கோவிலுக்குள்ளேயே அமைகின்றன. ஐந்தாவது பிரிவான சங்கமன்கண்டி, அதன் தெற்கு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

போர்க் காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மக்கள் இடப்பெயர்வை, இந்த நிறுவனம் தனக்கான முதலீடாகப் பயன்படுத்துகிறது. திருக்கோவில் பிரதேசம் இயற்கையிலேயே மனிதர்கள் வாழாத வெற்று நிலமல்ல.

திருக்கோவிலில் சதுர கிலோமீட்டருக்கு 159 பேர் வாழும் வேளையில், அருகில் உள்ள அக்கரைப்பற்றில் 750 பேர் வாழ்கின்றனர்.

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், தங்கவேலாயுதபுரம், சாகாமம், கஞ்சிகுடிச்சாறு மற்றும் அலிகம்பை ஆகிய பாரம்பரியத் தமிழ் கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் விசேட அதிரடிப்படையினரால் (STF) பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் அகதி முகாம்களில் அவல வாழ்வைச் சந்தித்தன.
திருக்கோவிலில் கைது செய்யப்பட்ட பின்னர் எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தியுள்ளது.
இத்தகைய படுகொலைகளும், பாலியல் வன்முறைகளும், கடத்தல்களும் இப்பகுதியின் பூர்வீகக் குடிகளைத் தங்களது சொந்த நிலங்களை விட்டு ஓட வைத்தன.

இதன் விளைவாகவே, 1963 இல் அம்பாறை மாவட்டத்தில் 24% ஆக இருந்த தமிழர்களின் மக்கள் தொகை விகிதம், தற்போது 17% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில்தான், குடிநீரையும் ஒரு அடக்குமுறை ஆயுதமாகப் பயன்படுத்தும் உத்திகள் அரங்கேறி வருகின்றன.
திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் கடற்படையினரால் கட்டப்பட்டு, நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரியால் திறந்து வைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதலில் அங்குள்ள பொலிஸாருக்கும், இரண்டாவதாகவே பொதுமக்களுக்கும் சேவை செய்ய ஒதுக்கப்பட்டது.

ஆரம்பத்தில், தங்களது பிள்ளைகளைக் கடத்திச் சென்ற அதே பொலிஸ் நிலையத்திற்குள் அச்சத்துடன் நடந்து சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

தற்போது வேலிக்கு வெளியே குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், மக்கள் தங்களது அன்றாட குடிநீருக்காகக் பொலிஸ் நிலைய எல்லையின் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.
இது ஒரு உளவியல் போராகும். கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு அருகிலும் இதே போன்றதொரு நில அபகரிப்பு மற்றும் வாழ்வாதார முடக்க உத்தியை இந்த இலங்கை அரசு என்ற கட்டமைப்பு கையாண்டுள்ளது.
NPP எனப்படும் தற்போதை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கு-கிழக்கில் இராணுவ மயமாக்கலைக் குறைப்பதாகத் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், நடைமுறையில் இராணுவமும் சர்வதேச நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் நிலங்களைச் சுரண்டும் புதிய வடிவத்திலான கோப்ரேட் இராணுவ மயமாக்கலே (Corporate Militarisation) இங்கு அரங்கேறி வருகிறது.
சிங்கள ஆட்சியாளர்களோ அல்லது லண்டனின் முதலீட்டாளர்களோ இந்த சாதாரண மக்களின் நியாயமான குரல்களுக்குச் செவிசாய்க்கப் போவதில்லை. எனினும், தங்களது பூர்வீக நிலத்தையும் கடல் வளத்தையும் காப்பதற்காக, ஜனநாயக வழியிலான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய திருக்கோவில் மண்ணின் இளைய தலைமுறை முழுமையாகத் தயாராகிவிட்டது.

அதாவது, ஏற்கனவே கனிம அகழ்வுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் இளைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த சூழலில், மக்களின் அந்தப் போராட்ட உணர்வை மடைமாற்றும் நோக்கில் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட இக் கிரிக்கெட் போட்டியால் அவர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தங்களது தாயக நிலத்தைப் பாதுகாப்பதற்கான அறவழிப் போராட்டத்தைத் திருக்கோவில் மண்ணின் இளைய தலைமுறை தொடர்ந்து முன்னெடுக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகத் தெரிகிறது.

ஆங்கிலத்தில் anangu.substack com இணையம்
தமிழில் அமலன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.