செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இந்த ஆண்டின் நத்தார் விசேட முத்திரைகளை வெளியிட்ட ரோயல் மெயில்!

இந்த ஆண்டின் நத்தார் விசேட முத்திரைகளை வெளியிட்ட ரோயல் மெயில்!

1 minutes read

இங்கிலாந்தின் ரோயல் மெயில் தபால் சேவை, இந்த ஆண்டின் நத்தார் பண்டிகையை முன்னிட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்புக் காட்சிகளைச் சித்தரிக்கும் விசேட முத்திரைத் தொகுப்பை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஐந்து முத்திரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு, வரைகலை வடிவமைப்பாளர் கெரெத் ஹோவாட் மற்றும் சித்திரக் கலைஞர் ரெபேக்கா சதர்லேண்ட் ஆகியோரின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த முத்திரைகளில் அன்னை மரியாளும் யோசேப்பும் மேற்கொள்ளும் பயணம், குழந்தை இயேசு, தேவதூதன், இடையர்கள் மற்றும் மூன்று ஞானிகள் அடங்கிய நத்தார் திருக்கதை சார்ந்த காட்சிகளைப் பிரதிபலிக்கும் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ரோயல் மெயில் தபால் சேவையினால் நத்தார் பண்டிகைக்கான முதலாவது விசேட முத்திரை வெளியிடப்பட்டதன் அறுபதாவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டின் முத்திரைத் தொகுப்பு குறிக்கின்றது.

ரோயல் மெயில் சேவைக்காக நத்தார் முத்திரைகளை வரையும் வாய்ப்புக் கிடைத்தமை தமக்குக் கிடைத்த பெரும் கௌரவம் என சித்திரக் கலைஞர் ரெபேக்கா சதர்லேண்ட் தெரிவித்துள்ளார். சிறுவயது முதலே முத்திரைகள் மீது தமக்கு அலாதி பிரியம் இருந்ததாகவும், முத்திரைகளைச் சேகரிக்கும் வழக்கம் கொண்டிருந்த தமக்கு இந்த முழுத் தொகுப்பையும் உருவாக்கும் பொறுப்புக் கிடைத்தமை அளப்பரிய மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நத்தார் முத்திரைகளில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பேராலயங்களின் பனிப்பொழிவு காட்சிகள் அல்லது பிரபல நத்தார் கீதங்களின் வரிகள் இடம்பெற்றிருந்த போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டிலும் இயேசுவின் பிறப்புக் காட்சிகள் முத்திரைகளாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இங்கிலாந்தின் முதலாவது நத்தார் விசேட முத்திரையானது, அப்போதைய தபால் துறை அமைச்சர் டோனி பென் அறிவித்த சிறுவர்களுக்கான சித்திரப் போட்டியைத் தொடர்ந்து 1966ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உள்நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குப் பரிமாறப்படும் கோடிக்கணக்கான நத்தார் வாழ்த்துகளுக்கு இந்த ஆண்டின் புதிய முத்திரைகள் மெருகூட்டும் என ரோயல் மெயில் நிறுவனத்தின் பிரதிநிதி டேவிட் கோல்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.