ஆபிரிக்காவுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணைக்குழுவுக்கான இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் நிர்மலா பரணவித்தான தனது நியமனக் கடிதங்களை ஆணைக்குழுவின் நிர்வாகச் செயலாளர் கிளேவர் கடேட்டேயிடம் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகாரச் சேவையில் பெண்களின் தலைமைத்துவத்தை உயர்த்தும் முக்கிய நகர்வாகவும், ஆபிரிக்க நாடுகளுடனான நடைமுறைச் சாத்தியமான உறவுகளை வலுப்படுத்தும் புதிய கட்டமாகவும் இந்நியமனம் பார்க்கப்படுகிறது.
நியமனக் கடிதங்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கும் ஆபிரிக்க நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்பப் பரிமாற்றம், முதலீடு மற்றும் தனியார் துறை ஈடுபாடுகள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதன்போது, புருண்டியுடன் நெல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம், மத்திய ஆபிரிக்கக் குடியரசுடன் மரவள்ளிக்கிழங்கு மதிப்புக்கூட்டல், எத்தியோப்பியாவுடன் பால் பதப்படுத்துதல் திட்டங்கள் தொடர்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், கமரூனுடன் மின்சாரத் துறை அபிவிருத்தி மற்றும் ஈக்குவடோரியல் கினியாவுடன் ஆடை உற்பத்தி மதிப்புச் சங்கிலி தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் சுனாமி மற்றும் வெள்ளப்பெருக்கு முகாமைத்துவ அனுபவங்களைப் பயன்படுத்தி, சாட் நாட்டில் பேரிடர் முகாமைத்துவ மையமொன்றை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், சோமாலியா மற்றும் ஜிபூட்டியுடன் கடல்சார் பாதுகாப்பு, மீன்பிடி மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினருக்கான பயிற்சிகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. இது ஆபிரிக்கக் கொம்பு பிராந்தியத்திற்கான உத்தியின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையின் இந்த உத்தியோகபூர்வ முயற்சிகளை வரவேற்ற ஆபிரிக்காவுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணைக்குழுவின் நிர்வாகச் செயலாளர் கிளேவர் கடேட்டே, தனிப்பட்ட இருதரப்புத் திட்டங்களைத் தாண்டி ஆப்பிரிக்க பிராந்திய அளவிலான வர்த்தகச் சங்கிலிகளில் இலங்கை தனியார் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், ‘ஆபிரிக்க தொழில் மாநாடு’ போன்ற தளங்களைப் பயன்படுத்தி இலங்கை நிறுவனங்கள் தங்கள் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த ஊக்குவித்துள்ளார்.