எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கழிவு முகாமைத்துவம், கழிவுகளைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் மரபுரிமையாக வழங்க வேண்டியது மாசடைந்த மண்ணையோ அல்லது பிளாஸ்டிக்கினால் நிரம்பிய கடலையோ அல்ல; சுதந்திரமாக சுவாசித்து ஆரோக்கியமாக வாழக்கூடிய தூய்மையான, பசுமையான சூழலாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை (30) கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பிளாஸ்டிக், புத்தாக்கம் மற்றும் சுற்றாடல் பேண்தகுதன்மை’ தொடர்பான 3 ஆவது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
சூழல் நேய புத்தாக்கங்கள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் சூழல் பாதிப்புகளைக் குறைத்தல், சூழல் நேய மாற்றீடுகளை அறிமுகப்படுத்துதல், சுழற்சி பொருளாதார மாதிரிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் நிலைபேறான கழிவு முகாமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், பிளாஸ்டிக் மாசுபாடு என்பது சுற்றாடல் பிரச்சினை மாத்திரமல்ல என்றும், காலநிலை நெருக்கடியுடன் நேரடியாகத் தொடர்புடைய உலகளாவிய சவாலாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒழுங்குமுறையின்றி கழிவுகளைக் குவிப்பது பொதுமக்களின் வாழ்க்கைக்கும் சுற்றாடலுக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிப்பது எந்த வகையிலும் அர்த்தமுள்ள அபிவிருத்தியாக அமையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் பல முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2027–2029 காலப்பகுதியில் ரூ. 34 பில்லியன் செலவில் “பிவிதுரு புரவர” தேசிய கழிவு முகாமைத்துவத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் உள்ளிட்ட உக்காத கழிவுகளைச் சுற்றாடலில் வெளியேற்றுவதைக் குறைத்தல், மீள்சுழற்சி மற்றும் சேதன உர உற்பத்தியை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுற்றாடல் பாதுகாப்பிற்காக சட்டங்களும் விதிமுறைகளும் மாத்திரம் போதுமானவை அல்ல என்றும், சுற்றாடல் தொடர்பான பொறுப்புணர்வு கல்வி முறைமையின் ஊடாகவே கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
புதிய கல்வி மறுசீரமைப்புகளின் ஊடாக சுற்றாடல் கல்வி, பிளாஸ்டிக் மற்றும் கழிவு முகாமைத்துவம் மற்றும் சுழற்சி பொருளாதார எண்ணக்கருக்கள் ஆகியவற்றை பாடசாலைப் பாடத்திட்டத்தில் நடைமுறை ரீதியாக உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த பிரதமர், பாடசாலை மட்டத்தில் “பசுமைப் பாடசாலை” என்ற எண்ணக்கருவை ஊக்குவிப்பதுடன், பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே ‘பூச்சியக் கழிவு’ பழக்கவழக்கங்களுக்கு வழிநடத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக, இந்தப் பிரச்சினைகளுக்கான நடைமுறை ரீதியானதும் புத்தாக்கமிக்கதுமான தீர்வுகளைக் கண்டறிவதற்காக பொறியியல், சமூக விஞ்ஞானம் போன்ற துறைகளை ஒருங்கிணைத்த பலதுறை அணுகுமுறையொன்றை பின்பற்றுமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி. எம். சி. திலகரத்ன, பேராசிரியர் ஜே. எம். ஏ. மனதுங்க, பேராசிரியர் பந்துனி அதபத்து, பேராசிரியர் அலெக்ஸ் லின் ஆகிய கல்விமான்கள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், சுற்றாடல் அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.