தமிழர் உரிமைக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் தென்னிலங்கையின் அரசியல் வெளியில் உரத்துக் குரல்கொடுத்த சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் நடராஜா ரவிராஜின் 20ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (நவம்பர் 10) அனுஷ்டிக்கப்படுகிறது.
1962 ஜூன் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த ரவிராஜ், சட்டத்தரணியாகத் தனது பணியை ஆரம்பித்து, பின்னர் தமிழர் அரசியலில் முக்கியமான ஆளுமையாக உருவெடுத்தார். மனித உரிமைகள் இல்லத்தில் பணியாற்றிய காலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பலருக்காக நீதிமன்றங்களில் வாதாடினார். 1998ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வராகவும், 2001 ஜனவரி மாதம் மாநகர முதல்வராகவும் பொறுப்பேற்றார். அதே ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான அவர், 2004ஆம் ஆண்டும் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
தமிழர் பிரச்சினைகளைத் தமிழர்களிடம் மட்டுமன்றி சிங்கள மக்களிடமும் எடுத்துரைப்பதில் தனித்துவமான அரசியல் பணியை முன்னெடுத்தவர் ரவிராஜ். சிங்கள மொழியில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், போர் அவலங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணியைத் தென்னிலங்கை மக்களிடம் எடுத்துரைத்தார். இனங்களுக்கிடையிலான புரிதலுக்காகவும் நீதிக்காகவும் அவர் தொடர்ந்து குரல்கொடுத்தார்.
2006 நவம்பர் 10ஆம் திகதி காலை கொழும்பு நாரஹேன்பிட்டிய மனிங்டவுன் பகுதியில் தனது வீட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் பயணித்த காவல்துறை மெய்ப்பாதுகாவலரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பான வழக்கில் 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விடுதலைத் தீர்ப்பை 2026 மார்ச் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்துச் செய்து, மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இருபது ஆண்டுகள் கடந்தும் அவரது படுகொலைக்கான நீதி இன்னும் முழுமையாக நிலைநாட்டப்படவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ‘மாமனிதர்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட ரவிராஜின் அரசியல் பணிகளும் நினைவுகளும் இன்றும் தமிழ் மக்களால் நினைவுகூரப்படுகின்றன.
ஒரு மக்கள் கூட்டத்தின் உரிமைகளைப் பற்றிப் பேசியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட அவரது குரலுக்கு, இருபது ஆண்டுகளுக்குப் பின்னராவது நீதி கிடைக்குமா என்பதே இன்றைய நினைவுநாளில் எழும் கேள்வியாக உள்ளது.
வணக்கம் இலண்டனுக்காக பூங்குன்றன்