செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போராட்டங்களை கட்டுப்படுத்த அடக்குமுறைகளை முன்னெடுக்கவில்லை: அரசு

போராட்டங்களை கட்டுப்படுத்த அடக்குமுறைகளை முன்னெடுக்கவில்லை: அரசு

1 minutes read

கடந்த ஈராண்டு கால ஆட்சியில் அரசாங்கத்துக்கு எதிராக வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான அடக்குமுறை நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. அதேவேளை, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் போராட்டங்களும் முறையான நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற வேண்டும் என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நீதிமன்ற நடவடிக்கையில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், அவற்றைப் பயன்படுத்தி மக்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவில்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், அவற்றுக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவில்லை.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக நாம் ஏற்கனவே குரல் கொடுத்துள்ளதுடன், அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

மக்களையும் ஊடகங்களையும் அடக்குவதற்கான எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. சில ஊடகங்கள் தங்களுடைய தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையச் செயற்படுகின்றன. ஊடகங்களில் உண்மையான செய்திகளும் வெளியாகின்றன. அதேவேளை, பொய்யான தகவல்களும் பரப்பப்படுகின்றன. இவற்றை மக்கள் புரிந்துகொள்வார்கள். குறிப்பிட்ட ஊடகங்களை இலக்குவைத்து அரசாங்கம் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது.

இதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சியினருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதனைச் சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்றத்தின் அடிப்படை விதிமுறைகளையும் உரிய நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

இது தொடர்பில் பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் கலந்துரையாடினோம். பிரேரணையை முறையாகத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியதுடன், அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் சமர்ப்பித்த ஆவணம் முறையான வகையில் தயாரிக்கப்படவில்லை. பாராளுமன்றச் செயலாளர் பிரிவினரும் அதனைச் சரியான முறையில் தயாரித்து வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு அருகில் சென்று பதாகைகளை ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணித்தியாலம் அவ்வாறு போராட்டம் நடத்திய பின்னர் அனைவரும் வெளியேறினர். இவ்வாறான அரசியல் நாடகங்களால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகின்றது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

மக்கள் சார்ந்த அரசாங்கமாக நாம் செயற்படுகின்றோம். அதனை எமது நடைமுறைச் செயற்பாடுகளின் ஊடாக நிரூபித்துள்ளோம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.