செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா நியூயோர்க்கில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரு சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி; மீட்புப் பணிகள் நிறைவு

நியூயோர்க்கில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரு சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி; மீட்புப் பணிகள் நிறைவு

2 minutes read

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள புரூக்ளின் (Brooklyn) பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடிக் குடியிருப்புக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இரு சிறுவர்கள் மற்றும் இரு கட்டுமானப் பணியாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

வியாழக்கிழமை (நவம்பர் 12) நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நியூயோர்க் நகர மேயர் சொஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) இத்தகவலை உறுதிப்படுத்தினார். உயிரிழந்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஏனைய இருவர் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் மேயர் மம்தானி தெரிவித்தார்.

20 மற்றும் 30 வயதுகளின் ஆரம்பப் பகுதியில் உள்ள 6 பெரியவர்களும், 9 வயது சிறுமியொருவரும், 10 வயது சிறுவனொருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக நியூயோர்க் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புரூக்ளின் பிராந்தியத்தின் 1321 பிளாட்புஷ் அவென்யூ (Flatbush Avenue) பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 14 பொதுமக்கள் மற்றும் நான்கு தீயணைப்பு வீரர்கள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3.37 மணியளவில் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாகவும், இடிபாடுகளுக்குள் வேறு எவரும் சிக்கியிருக்கவில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நியூயோர்க் நகர தீயணைப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெரும்பாலானோர் நிலையான உடல்நிலையில் உள்ளதாகவும், ஒருவர் மாத்திரம் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் மேயர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நவம்பர் 11ஆம் திகதி மாலை 04 மணியளவில் இக்கட்டிடம் அருகிலுள்ள கட்டுமானத் தளத்துக்குள் இடிந்து விழுந்ததில், குடியிருப்பாளர்களும் கட்டுமானப் பணியாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இடிந்து விழுந்த கட்டிடத்துக்கும், அதனை அண்டிய 1323, 1325 மற்றும் 1327 பிளாட்புஷ் அவென்யூ ஆகிய முகவரிகளில் உள்ள 3 கட்டிடங்களுக்கும் முழுமையாக வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மம்தானி தெரிவித்தார்.

1930ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட நான்கு குடியிருப்பு அலகுகளைக் கொண்ட இக்கட்டிடம், 1972ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாக நகர ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பதிவாகியுள்ள 98 விதிமீறல்களில், 21 விதிமீறல்கள் உடனடி ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகை சி (Class C) பிரிவைச் சேர்ந்தவை எனவும், அவற்றில் உரியும் ஈயப் பூச்சு (lead paint), ஒழுகும் கூரை மற்றும் பாதுகாப்பற்ற மின்சார வயரிங் ஆகியவை அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருகிலுள்ள 2625 பெட்ஃபோர்ட் அவென்யூ (Bedford Avenue) வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பற்ற கட்டுமானப் பணிகளே இக்கட்டிடம் இடிந்து விழக் காரணம் என நியூயோர்க் நகர கட்டிடத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட வெளியேற்ற உத்தரவில் முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், வியாழக்கிழமை பிற்பகல் அளவில் குறித்த இணையத்தளத்திலிருந்து அந்த வாசகம் நீக்கப்பட்டிருந்தது.

விபத்து இடம்பெற்ற ஒரு நிமிடத்துக்குள் 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர். மிக ஆபத்தான சூழ்நிலைக்கு மத்தியிலும் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் அப்பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறும் மேயர் அறிவுறுத்தினார். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணியில் மோப்ப நாய்களும் (K9s) ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த பகுதி மேலதிக விசாரணைகளுக்காகக் கட்டிடத் திணைக்களம் மற்றும் நியூயோர்க் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள நியூயோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் (Kathy Hochul), விசாரணைகளுக்கு மாநில அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இலண்டனில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘KINGS OF GAANA 2026’ – நாளை முதல் நுழைவு சீட்டுகள் விநியோகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.