டோராவின் பயணங்களில்
இணைந்து கொண்டு
பையிலிருந்து வரைபடம் எடுத்து
அம்மா அப்பாவின்
அலுவலக இருப்பிடத்தை
தேடிக்கொண்டு இருக்கின்றன
தனித்திருக்கும் குழந்தைகள்..
மந்திர கற்களாய்
பாவனை செய்யப்பட்ட
கூர் தீட்டும் கருவியும், அழிப்பானும்
ஜாக்கிசான் சாகசங்களை
திறம்பட நிகழ்த்துகின்றன
பாட இடைவேளைகளில்…
டோலக்பூர் வகுப்பறை பிரச்சனைகளுக்கு
தீர்வு கண்ட பெருமிதத்துடன்
வீடேகும் சோட்டா பீம்களில்
சிலருக்கு மட்டும் வாய்த்திருக்கிறது
சுக்கி உடனான நட்பு…
நாகப்படம் மீதான
லிட்டில் கிருஷ்ணாவின் நர்த்தனத்தில்
லயித்துப் போய் கரைகின்றன
நிஜப் பாம்பின் படம் அறியா
குழந்தைகளின் பொழுதுகள்…
கோபத்தோடு
தொலைக்காட்சியை அணைக்கும்
அப்பாவின் செவிகளில்
அறையப்படுகிறது
அமைதி அமைதி அமைதியோ அமைதி
என்ற அவர்வீட்டு சின்சானின் குறும்புக் குரல்…
சற்றே வளர்ந்த பின்…
விடுமுறை நாட்களில்
நச்சரித்து மார்வெல் வரிசைப்
படங்களைப் பார்க்க வைத்து
ட்ராக்ஸ், புரூட் என தண்டிக்கின்றனர்
முதல் மரியாதை பரிசலையே
இன்னும் தாண்டியிராத அம்மாவை!
– சுசித்ரா மாரன்
