செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பிரான்ஸ் அரசின் அதிஉயர் விருதை நிராகரித்த திருத்தந்தை | அ. நிக்ஸன்

பிரான்ஸ் அரசின் அதிஉயர் விருதை நிராகரித்த திருத்தந்தை | அ. நிக்ஸன்

5 minutes read

* புவிசார் அரசியல் நலன்களை மாத்திரம் ஏற்க மறுத்த செயல்

* கால் பாதத்தையும் முத்தமிடலாம் என்ற வத்திக்கான் இராஜதந்திரம்; சரணாகதி அரசியலை மறுதலிக்கிறது

* தமிழ்க் கத்தோலிக்க திருஅவையின் வரலாற்று அனுபவம்

* நிகராகுவா அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்த 80 வயது ஆயர்

— — —

வல்லரசு நாடுகளின் கட்சி அரசியல், புவிசார் இராஜதந்திரப் போட்டிகள் மற்றும் தேவைகளுக்காக மாத்திரம் தங்கியிருக்கும் கோட்பாடுகளைக் கடந்து, கத்தோலிக்கத் திருஅவையின் திருத்தந்தை 14 ஆம் லியோ, தூய அறம், தார்மீக விழுமியங்கள் மற்றும் சமய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய மனிதாபிமானப் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே தனது உலகக் கண்ணோட்டத்தைக் கையாண்டு வருகிறார்.

கத்தோலிக்கத் திருஅவையின் இத் தலைமைப் பண்பு, வெறும் வத்திக்கான் தலைமையகத்தோடு மாத்திரம் முடங்கிவிடாமல், உலகெங்கும் பரந்து வாழும் பேராயர்கள், ஆயர்கள் மற்றும் அருட்தந்தையர்கள் ஆகியோருக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

இதற்கு சிறந்த சான்றாக, இந்தச் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் நாளை 28 ஆம் திகதி வரை, வல்லரசான பிரான்ஸ் நாட்டுக்குத் திருத்தந்தை லியோ மேற்கொண்ட அரச பயணத்தைச் சுட்டிக்காட்ட முடியும்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வழங்க முன்வந்த உயரிய ‘லெஜியன் ஆஃப் ஆனர்’ (Legion of Honour) விருதையும், உத்தியோகபூர்வ அரச விருந்துபசாரத்தையும் லியோ அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார்.

அரச மரியாதையை தவிர, ஏனைய ஆடம்பர வரவேற்புகளைத் தவிர்த்து, இப்பயணத்தை முற்றிலும் ஆன்மீகம் – மனிதாபிமானம் சார்ந்த ஒன்றாக மாத்திரமே முன்னெடுக்க வத்திக்கான் விரும்பியது.

பிரான்ஸ் அரசின் புவிசார் அரசியல் நலன்களுக்கும் வத்திக்கானின் தார்மீகக் கொள்கைகளுக்கும் இடையே நிலவிய முரண்பாடுகளுமே, இந்தத் தீர்க்கமான நிராகரிப்புக்கான முதன்மைக் காரண-காரியங்களாகும்.

இதனால், பிபிசி (BBC News) மற்றும் பிரான்ஸ் 24 (France 24) போன்ற முன்னணி மேற்கத்திய பிரதான ஊடகங்கள் திருத்தந்தையின் இப்பயணத்தை ஒரு “ஆன்மீக – அரசியல் மோதல்” (Clash of Secularism and Papacy) என்று தங்களது அரசியல் ஆய்வுகளில் சித்திரிக்கின்றன.

சமய எல்லைகளைக் கடந்து மக்கள் நலனை முன்னிறுத்தும் இத்தகைய உலகளாவிய நகர்வுகள், இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு கத்தோலிக்கத் திருஅவைக்கும், இது ஒரு மிக முக்கிய வரலாற்றுப் படிப்பினையாகும்.

இதேபோன்று, இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், பிலிப்பைன்ஸின் ஆன்டிபோலோ (Antipolo) மறைமாவட்டத்தின் ஆயர் ரூபர்ட்டோ சாண்டோஸ், ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் ‘நாட்டின் நிலை உரையை (State of the Nation Address) கடுமையாக விமர்சித்தார்.

வறுமை, சமூக நீதி மற்றும் மக்களின் பொறுப்புக்கூறல் போன்ற யதார்த்தப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியின் உரை எந்தவொரு தீர்வையும் தரவில்லை என ஆசிய ஆயர்கள் செய்தி ஊடகம் (RVA News) வாயிலாக ஆயர் ரூபர்ட்டோ மக்களுக்காகப் பகிரங்கமாகக் குரல் எழுப்பினார்.

நிகராகுவா நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஜனாதிபதி டேனியல் ஒர்டேகாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, 80 வயதான ஓய்வுபெற்ற ஆயர் ஜுவான் அபெலார்டோ மாதா (Bishop Juan Abelardo Mata) சென்ற ஜூன் மற்றும் ஜூலை 2026 இல் திருப்பலியின் போது மக்களுக்காகவும், ஒடுக்கப்படும் திருச்சபைக்காகவும் தீவிரமாகப் பிரார்த்தித்து வாதிட்டார்.

இதன் விளைவாக, ஒர்டேகா அரசாங்கத்தால் அவர் கடத்தப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த அநீதிக்கு எதிராக ஐநா வரை தற்போது மனித உரிமைப் போராட்டங்கள் வெடித்துள்ளதாக கதலிக்வேல்ட் றிப்போட் (Catholic World Report) மற்றும் அமெரிக்க மகசின் (America Magazine) போன்ற சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2026 செப்ரெம்பரில், நைஜீரிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, அந்நாட்டு நாடாளுமன்றம் கொண்டு வரவிருந்த ‘வெளிநாட்டு உதவி ஒழுங்குமுறைச் சட்டமூலத்தை’ (Foreign Aid Bill 2026) உடனடியாக நிறுத்தக் கோரி நைஜீரிய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

இச் சட்டம் நிறைவேறினால் ஏழை மக்களுக்குச் செல்லும் மனிதாபிமான உதவிகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான நிதியுதவிகள் பாதிக்கப்படும் என்று ஆயர்கள் நைஜீரிய தேசிய ஊடகங்கள் மூலம் எச்சரித்துள்ளனர்.

அதேநேரம், திருத்தந்தை தனது வத்திக்கான் நாட்டின் அரச இறைமை, உயரிய உலகளாவிய ஆளுமை மற்றும் தூதரக மரபுகள் அனைத்தையும் கடந்து, மக்களின் அமைதிக்காகவும் நல்வாழ்வுக்காகவும் உலகத் தலைவர்களின் காலில் அதாவது அதிகார வர்க்கத்தின் ஆணவத்திற்கு முன்னால் காலில் விழுந்து இரந்து கேட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்களும் உண்டு.

2019 ஏப்ரல் 11 அன்று, தென் சூடான் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரினால் சுமார் 400,000 மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், மீண்டும் போர் வெடிக்கும் சூழல் நிலவியது.

அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ், தென் சூடான் ஜனாதிபதி சால்வா கீர் (Salva Kiir) உள்ளிட்ட உயர் அதிகாரத் தலைவர்களை வத்திக்கானுக்கு அழைத்து ஒரு ஆன்மீகத் தியானக் கூட்டத்தை நடத்தினார்.

தியானத்தின் இறுதியில், தனது 82 வயதிலும், கடுமையான முழங்கால் வலியையும் பொருட்படுத்தாமல், திருத்தந்தை திடீரென அந்த அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும் மண்டியிட்டு விழுந்து, அவர்களின் பாதங்களை முத்தமிட்டார்.

“உள்நாட்டுப் போரை நிறுத்துங்கள், அமைதியாக வாழுங்கள் என்று உங்கள் சகோதரனாக உங்கள் இருதயத்தைக் தொட்டுக் கெஞ்சிக் கேட்கிறேன்” என்று உலகத் தலைவர்களிடம் ஒரு சாமானியனைப் போல இரந்து கேட்டார் திருத்தந்தை பிரான்ஸிஸ்.

இந்தச் செயலால் அதிர்ந்துபோன தென் சூடான் ஜனாதிபதி சால்வா கீர், “ஒரு நாட்டின் ஜனாதிபதியாகிய என் காலில் விழுந்து போப் கெஞ்சிய போது நான் பயத்தால் நடுங்கிவிட்டேன் (Trembling)” என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அறிவித்தார்.

உலக ஊடகங்கள் இதனை வத்திக்கான் அரசின் அதிகார இறைமையைக் கடந்த ஆகச்சிறந்த “மனிதாபிமான தார்மீக அறம்” என அன்று வர்ணித்திருந்தன.

அதேநேரம், திருத்தந்தை லியோ, இந்த 2026 ஆம் ஆண்டில் புவிசார் அரசியல் போட்டிகளைத் புறந்தள்ளி, போர் மற்றும் தொழில்நுட்பப் பேரழிவுகளில் இருந்து மக்களைக் காக்கத் தலைவர்களிடம் தொடர்ந்து இரந்து கேட்டு வருகிறார்.

பிரான்ஸ் நாட்டுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் போதும் அதற்கு முன்னரும் லெபனான், ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போரை நிறுத்தக் கோரி உலகத் தலைவர்களிடம் உத்தியோகபூர்வ அதிகாரப் தோரணையின்றி மிகத் தாழ்மையாகப் பேசினார்.

“போர் என்பது தவிர்க்க முடியாதது என்று நினைத்து கைவிட்டுவிடாதீர்கள், மனித அவலங்களுக்கு முன்னால் தயவுசெய்து சுயநலத்தோடு இருந்துவிடாதீர்கள்” என்று இராஜதந்திர எல்லைகளைத் தாண்டி உலக நாடுகளிடம் மனிதாபிமான அடிப்படையில் மன்றாடியுள்ளார்.

2026 ஏப்ரல் 11 அன்று வத்திக்கானில் நடைபெற்ற உலக அமைதிக்கான பிரார்த்தனைக் கூட்டத்தில், “உலக நாடுகளின் தலைவர்களே… தயவுசெய்து மரணங்களையும் ஆயுதங்களையும் திட்டமிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று மிக உருக்கமாக, தனது அதிகாரப் பலத்தை வெளிப்படுத்தாமல் ஆன்மீகப் பெரியவராக நின்று வேண்டுகோள் விடுத்தார்.

2026 பெ்பரவரி மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச மோதல்களுக்காக உருவாக்கிய புதிய “சமாதான சபையில்” (Board of Peace) வத்திக்கானையும் இணைக்க முற்பட்டார்.

ஆனால், இது ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய கட்டமைப்பைத் தாண்டி, ஒரு குறிப்பிட்ட நாட்டின் அரசியல் நலன் சார்ந்ததாக இருப்பதாகக் கூறி, வத்திக்கான் அதில் பங்கேற்க உத்தியோகபூர்வமாக மறுத்துவிட்டது.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் சூழலில், கத்தோலிக்கரான துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) வத்திக்கானில் உத்தியோகபூர்வ சந்திப்பை விரும்பிய போது, திருத்தந்தை லியோ, அத்தகைய உத்தியோகபூர்வ அமர்வைத் தவிர்த்துவிட்டு, தனது தூதுவர்கள் ஊடாக மனிதாபிமானக் கடமைகளை மாத்திரமே வலியுறுத்தச் செய்தார்.

அதேவேளை, 2015 ஜனவரியில் அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் இலங்கை வரவிருந்த நிலையில், அதற்குச் சற்று முன்பாக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலை அறிவித்திருந்தார்.

பிரசாரங்களின் போது, ஆளும்கட்சியினர் திருத்தந்தையின் படத்தையும் மகிந்தவின் படத்தையும் ஒன்றாக இணைத்து, “பரிசுத்த தந்தையின் ஆசீர்வாதம்; நீங்களே எங்கள் ஜனாதிபதி, உங்களுக்கு வெற்றி நிச்சயம்” என்ற வாசகங்களுடன் இலங்கை முழுவதும் பிரசாரச் சுவரொட்டிகளை ஒட்டினர்.

கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகம், இலங்கை கத்தோலிக்கத் திருஅவை கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் அத்தகைய சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

வாக்குகளைப் பெறும் கவர்ச்சிகரமான தேர்தல் அரசியலுக்காக திருஅவையின் எந்த ஒரு ஆன்மீகத் தலைவர்களின் படங்களையும் பயன்படுத்த முடியாது என்பதே அதன் பொருள் விளக்கம்.

ஆகவே, வத்திக்கானின் இராஜதந்திர நெறிமுறைகளும் தார்மீக விழுமியங்களும் உலகெங்கும் உள்ள பேராயர்கள், ஆயர்கள் மற்றும் அருட்தந்தையர்கள் அனைவருக்கும் முற்றிலும் பொருந்தும்.

எனினும், இதற்காகத் திருத்தந்தை அணுகும் முறைமைகளையோ அல்லது முன்னைய ஆயர்கள் கையாண்ட அதே உத்திகளையோ சமகால ஆயர்கள் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது இதன் கற்பிதம் அல்ல.

மக்களின் உரிமைகளுக்காக அரசியல் அதிகார வர்க்கத்தைக் கேள்விக்குட்படுத்தவும், மனிதாபிமான நலத்திட்டங்களை வென்றெடுக்கவும் பேராயர்களும் ஆயர்களும் எந்த எல்லை வரையும் சென்று வாதிடுவதற்கான தார்மீகத் தற்துணிவையும் ஆன்மீக ஆளுமையையும் பெற்றுள்ளனர்.

மாறாக, இத்தற்துணிவானது திட்டமிட்டு இன ஒடுக்குமுறைகளை முன்னெடுத்து வரும் ஒடுக்குமுறை அதிகார வர்க்கத்துடன் பணிந்து போவதற்கோ அல்லது சமரசம் செய்துகொள்வதற்கோ ஆனதல்ல.

இந்த வரலாற்றுச் சந்தியில், வடக்கு-கிழக்குத் தமிழ்க் கத்தோலிக்கத் திருஅவையின் ஆயர்கள் மிகத் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டிய பட்டறிவுத் தேவை எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் கூட்டுரிமையை (Collective Rights) உறுதியுடன் வலியுறுத்தக்கூடிய ஒரு வலுவான அரசியல் தலைமைத்துவம் இல்லாத தற்போதைய பின்னணியில், கொழும்பின்

போலி ‘அபிவிருத்தி அரசியல்’ என்ற மாயைக்குள் சிக்கிக் கொள்ளாமல், தமிழ் மக்கள் தங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயமாக இயங்குவதற்கான அரசியல் நியாயத்தை உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கும் சர்வதேசத்தின் குரலாக தமிழ்த் திருஅவை மாற வேண்டும்.

ஏனெனில், அதற்கான வரலாற்று அனுபவமும் ஆற்றல் மிக்க தார்மீக சர்வதேச அங்கீகாரமும் தமிழ்க் கத்தோலிக்கத் திருஅவையிடம் இல்லாமில்லை.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.